“ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி” அமைப்பின் பிரதிநிதிகள் தமிழக முதலமைச்சர் திரு.எடப்பாடி கே. பழனிசாமியை சந்தித்தனர்

0
2159

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம், பவுண்டேஷன் ஃபார் மீடியா புரபஷ்னல்ஸ் ஆகிய அமைப்புகளின் முன் முயற்சியால், தமிழகத்தில் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு, “ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்” என்ற தலைப்பில், 01.07.18 அன்று, மூத்த பத்திரிகையாளர்கள், ஊடகங்களின் தலைவர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் “பத்திரிகையாளர்களும் ஊடகங்களில் முன்னணிப் பங்கு வகிப்பவர்களும் கையெழுத்திட்டுள்ள “தமிழ்நாட்டில் செய்தி ஊடகங்களுக்கு எதிரான தன்னிச்சையான, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும்” என்ற தலைப்பிட்ட அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.”ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி” என்ற பெயரில் பல செய்தி ஊடகங்கள் ஒன்றிணைந்த அமைப்பை உருவாக்குவது என்றும், இந்த அமைப்பின் சார்பில், முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து, தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் பின்னடைவைச் சந்தித்துள்ளதைப் பற்றிய கவலையைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில், “ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி” அமைப்பின் பிரநிதிநிதிகள்

என்.ரவி, வெளியீட்டாளர், தி இந்து குழுமம்

என்.முரளி, தலைவர், தி இந்து குழுமம்

பீர் முகம்மது (ஒருங்கிணைப்பாளர், ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி)

அசீப், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்

சுப்பிரமணி, ஆசிரியர், தி டைம்ஸ் ஆப் இந்தியா

டி.ராமகிருஷ்ணன், ஆசிரியர், தி இந்து

கவிதா முரளிதரன், மூத்த பத்திரிகையாளர்

எஸ்.கார்த்திகைச் செல்வன், நிர்வாக ஆசிரியர், புதிய தலைமுறை

பாஸ்கரன், நிர்வாக ஆசிரியர், மக்கள் டிவி

ஃப்ளாரண்ட் ஃபெரேரா, பொது மேலாளர், கலைஞர் டிவி

ஆகியோர், இன்று (10.07.18) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து கலந்தாய்வுக் கூட்டத்தில் ஏற்றக்கொள்ளப்பட்ட அறிக்கையை வழங்கினர். அப்போது, சமூக நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் முன்னணியில் உள்ள தமிழகத்தில், ஊடக சுதந்திரம் கவலை அளிக்கும் வகையில் இருப்பது சுட்டிக்காட்டப்பட்டது. மக்களின் போராட்டங்கள் குறித்த செய்திகளை ஒளிபரப்பும் காட்சி ஊடகங்கள், அரசு கேபிளில் இருட்டடிப்பு செய்யப்படுவது சுட்டிக் காட்டப்பட்டதுடன், இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரக்கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது. ஊடகங்கள் மீது அரசு தரப்பில் தொடுக்கப்பட்டுள்ள அவதூறு வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்றும், வழக்குகள் மூலம் ஊடகங்களையும், பத்திரிகையாளர்களையும் அச்சுறுத்தும் போக்கை கைவிட வேண்டும் என்றும் வலிறுத்தப்பட்டது.