CMPC
EVENTS / நிகழ்வுகள்

உருவானது “ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி”

தமிழகத்தில் ஊடக சுதந்திரத்தை பாதுகாக்கும் நோக்கத்தோடு, “ஊடக கலந்தாய்வு: உரிமைகளும், பொறுப்புகளும்” என்ற தலைப்பில், ஊடகக் கல்விக்கான காயிதே மில்லத் சர்வதேச அகாடமியில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம், பவுண்டேஷன் ஃபார் மீடியா புரபஷ்னல்ஸ் ஆகிய அமைப்புகளின் முன் முயற்சியால் நடத்தப்பட்ட இந்த கூட்டத்திற்கு “தி இந்து” குழுமத்தின் தலைவர் என்.ராம் தலைமை தாங்கினார்.

அருண்ராம், ஆசிரியர், தி டைம்ஸ் ஆப் இந்தியா

எஸ்.கார்த்திகைச் செல்வன், நிர்வாக ஆசிரியர், புதிய தலைமுறை

சவுமியா அன்புமணி, மேலாண் இயக்குனர், மக்கள் டிவி

என்.ரவி, வெளியீட்டாளர், தி இந்து குழுமம்

ஃப்ளாரண்ட் ஃபெரேரா, பொது மேலாளர், கலைஞர் டிவி

சுவாமிநாதன், பொதுமேலாளர், சத்தியம் டிவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இவர்களுடன், பல்வேறு ஊடகங்களின் உரிமையாளர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் கீழ் காணும் நான்கு முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

1.பத்திரிகையாளர்களும் ஊடகங்களில் முன்னணிப் பங்கு வகிப்பவர்களும் கையெழுத்திட்டுள்ள  “தமிழ்நாட்டில் செய்தி ஊடகங்களுக்கு எதிரான தன்னிச்சையான, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும்” என்ற அறிக்கையை இந்தக் கலந்தாய்வு தீர்மானமாக நிறைவேற்றுகிறது.

2.தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரம் பின்னடைவைச் சந்தித்துள்ளதைப் பற்றிய கவலையைப் பதிவு செய்யவும் நமது கோரிக்கைகளை வலியுறுத்தவும் தி ஹிந்து குழுமத் தலைவர் என்.ராம் தலைமையிலான ஊடகக் குழுவினர் தமிழ்நாட்டு முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமியை சந்திப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

3.இந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்களை செய்தி தொலைக்காட்சிகளின் முன்னணி அமைப்பான தேசிய ஒளிபரப்பாளர்களின் அமைப்புக்கு வலியறுத்துவதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

4.”ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி” என்ற பெயரில் பல செய்தி ஊடகங்கள் ஒன்றிணைந்த அமைப்பை உருவாக்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது; இந்த அமைப்பு முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஊடக சுதந்திரத்தைக் கண்காணித்து ஊடக சுதந்திரத்தையும் தன்னாட்சியையும்  பேணிப் பாதுகாப்பதற்கான சட்டப்பூர்வமான, ஜனநாயக வழிமுறைகளைக் கடைபிடிக்கும்.

கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கையில், அனைத்து பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர் அமைப்புகள் மற்றும் ஊடக உரியாளர்கள் கையெழுத்திட்டனர். கூட்டத்தில் கலந்துகொள்ள முடியாத மற்ற பத்திரிகையாளர்களிடமும் கையெழுத்து பெறுவது என முடிவு செய்யப்பட்டது. அத்துடன், தீர்மானத்தின் அடிப்படையில் “ஊடக சுதந்திரத்துக்கான கூட்டணி” அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ளும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

தீர்மானத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கை: 

தமிழ்நாட்டில் செய்தி ஊடகங்களுக்கு எதிரான தன்னிச்சையான, சட்டவிரோத நடவடிக்கைகளைத் தமிழக அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் 

செய்தி ஊடகங்களைப் பற்றிய தமிழ்நாட்டு அரசாங்கத்தின் அணுகுமுறை பெருமளவுக்குத் தரம் தாழ்ந்துள்ளது; செய்தி ஊடகங்களிடம் அச்சுறுத்தும் விளைவுகளை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்களுக்குத் தேவையான செய்திகளை முறைப்படி சட்டப்பூர்வமான வழிகளில் கொண்டு சேர்க்கிற பத்திரிகையாளர்கள் மீது இந்தியக் குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில்  வழக்குகளைத் தொடுக்கும் போக்கு அதிகரித்து வருகிறது.மக்களின் போராட்டங்களைப் பற்றிய செய்திகளை வெளியிடும் செய்தி சேனல்களுக்கு எதிராக வாய்மொழி எச்சரிக்கைகள் அரசிடமிருந்து வருகின்றன; விமர்சனபூர்வமான குரல்கள் விவாதங்களில் பங்கேற்பதும் இந்த முறையில் தடுக்கப்படுகிறது. இதுபோன்ற எச்சரிக்கைகளை புறக்கணித்தால் கடும் விளைவுகள் ஏற்படுமென்று அச்சுறுத்துவது அரசியல் சாசனத்தின் 19வது பிரிவு உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமையான பேச்சு மற்றும் வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கு எதிரானது. தமிழக அரசு அதன் தொலைக்காட்சி விநியோக வலைப்பின்னலான அரசு கேபிளைப் பயன்படுத்தி மக்களின் போராட்டங்களையும் இயக்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களையும் அரசுக்கு மாற்றான கருத்துக்களை ஒளிபரப்பிய ஊடகங்களைத் தண்டித்து வருகின்றனர்.

புதிய தலைமுறை மீதான நடவடிக்கைகளை இதற்கு ஓர் உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இந்த சேனல் நடத்திய ஒரு விவாத நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் பேசிய கருத்துக்களுக்காக இந்தியக்  குற்றவியல் சட்டத்தின் 153A மற்றும் 505 பிரிவுகளின் கீழும் பொதுச் சொத்துக்குச் சேதாரம் தொடர்மான மாநிலச் சட்டத்தின் கீழும் வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் அரசு கேபிள் டிவியில் 124-வது இடத்திலிருந்த புதிய தலைமுறை தொலைக்காட்சியை 499-வது இடத்துக்கு அவர்கள் மாற்றியிருக்கின்றனர். மேலும், தமிழ் சார்ந்த சேனல்களில் இருந்த இடத்திலிருந்து மாற்றி, பிற மொழி சேனல்கள் இருக்கும் இடத்தில் இடம்பெற செய்துள்ளனர். இது தனித்த நிகழ்வு அல்ல. பல செய்தி சேனல்களும் அரசு கேபிளிலிருந்து ஒரு நாள் முதல் சில மாதங்கள் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிகழ்வுகளும் நடந்துள்ளன.

தமிழ்நாட்டின் ஊடகவியலாளர்களான நாங்கள் பல செய்தி ஊடக நிறுவனங்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்றோம். மாநில அரசாங்கத்தின் இந்தத் தன்னிச்சையான மற்றும் சட்ட விரோதமான நடவடிக்கைகளை கடுமையாக நாங்கள் கண்டிக்கின்றோம். இந்த நடவடிக்கைகளை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். குறிப்பாக தொலைக்காட்சி கேபிள் சேனல்களைத் தணிக்கை செய்வதற்கு அதன் கேபிள் விநியோக நிறுவனத்தை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும்; உடனடியாக செய்தி ஊடகங்கள்  மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான வழக்குகளைத் திரும்ப பெறுவதற்கு தமிழக அரசாங்கத்தை நாங்கள் வலியுறுத்துகிறோம். இது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவதற்கு தடையற்ற சூழலை உருவாக்கும் ஒருங்கிணைந்த முயற்சியாகும்.

பத்திரிகை நிறுவனங்கள், செய்தி ஊடகங்கள், அச்சு மற்றும் டிஜிட்டல் தளங்களில் செயல்படும் செய்தியாளர்கள் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள நெறிமுறைகளின்படி தங்கள் வேலையை சுதந்திரமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் செய்வதற்கான ஒரு சூழலை முற்போக்கு மாநிலமான தமிழகத்தில்  உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக்கொள்கின்றோம்.

 

Related posts

“ஆதலால் காதல் செய்வீர்” – இயக்குனர் சுசீந்திரனுடன் உரையாடல்

admin

2014 – மே தினக் கூட்டம்

admin

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 6வது ஆண்டு தொடக்க விழா மற்றும் மேதினக் கூட்டம்!

admin