ஊடகவியலாளர் மாத்யூ ரஸ்ஸல் லீ – ஐக்கிய நாடுகள் சபை

0
606

ஐ.நா.வின் செயல்பாடுகளை தொடர்ந்து எழுதிவரும் இன்னர் சிட்டி பிரஸ்-ன் செய்தியாளர் “மாத்யூ ரஸ்ஸல் லீ” வலுக்கட்டாயமாக ஐ.நா.வில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். அப்போது அவரின் அலைப்பேசி, மடிக்கணினி, ஆவணங்களை எல்லாம் பிடிங்கி வைத்துக் கொண்டு அராஜகத்துடன் வெளியேற்றியுள்ளனர் ஐ.நா. பாதுகாப்பு அதிகாரிகள்.

ஐ.நா.மறைக்கும் பல்வேறு செய்திகளை இவர் தொடர்ந்து ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தியதோடு ஐ.நா.அதிகாரிகள் நிகழ்த்திய பாலியல் வன்முறைகளை அநீதிகளை அவர்கள் மத்தியிலேயே கேள்வியாக எழுப்பி வந்தார். அந்த வகையிலேயே இலங்கையில் நடந்தேறிய இனப்படுகொலை பற்றியும் ஒரு பத்திரிகையாளராக உறுதியுடன் தன் கேள்விகளை முன்வைத்து வருகிறார்.

அவர் சுட்டிக்காட்டும் தவறுகளை சீரமைக்காமல், நீதியை உண்மையை மக்களை காப்பாற்ற வேண்டிய ஐ.நா. செய்தியை மூடி மறைப்பதன் வழியே போலியான கட்டமைப்பை காப்பற்றலாம் என துடிக்கிறது.

இப்படியான ஐ.நா.வின் செயல்பாடு ராணுவக் கட்டமைப்பில் நிகழும் அநீதிகளையே நினைவூட்டுகிறது. ராணுவத்தினரால் மக்கள் மீது வன்முறை நிகழ்த்துவதை பேசினால் ராணுவம் எப்படி தீவிரவாதியாக சித்தரிக்கிறதோ ? அதுபோன்றே ஐ.நா.வும் சித்தரிக்கிறது. அந்த வகையில் ஒட்டுமொத்த அமைப்பு சார்ந்த குற்றமாகவே இதை பார்க்க முடிகிறது.

பதற்றமிக்க சூழலில் மக்களுக்காக செயல்பட்டு வரும் ஊடகவியலாளர்கள் எப்படி அருகி வருகிறார்களோ, அதுபோலவே அதிகார மையங்களை நோக்கி கேள்வி எழுப்பும் ஊடகவியலாளர்களும் அருகி வருகிறார்கள். மாத்யூ லீயின் நிலையை நாம் கடந்து செல்வது இப்படியான அருகிவரும் நிலையை மேலும் அதிகரிக்கும்.

மாத்யூ லீக்கு ஆதரவாக மே17 இயக்கம் நடத்திய நிகழ்வினை வரவேற்பதோடு அவர்களுக்கு நன்றியையும் உரித்தாக்குகிறேன்.

மூன்றாம் உலக நாட்டைச் சேர்ந்த ஓர் ஊடகவியலாளனாக மாத்யூ லீயின் நேர்மையான ஊடக செயல்பாட்டினை ஆதரிப்பதோடு கருத்துரிமையை நசுக்கும் ஐ.நாவின் செயல்பாட்டை எதிர்க்கிறேன்.

தோழமையுடன்,
மகா.தமிழ்ப் பிரபாகரன்
ஊடகவியலாளர்/ஆவணப்பட இயக்குநர்