உறியடி 2 : திரை விமர்சனம் – பிரியா

0
460

என் வாழ்நாளில் இதுவரை எக்கசக்க திரைப் படங்களை பார்த்திருக்கிறேன். ஒருசில படங்கள் அதன் தன்மையை பொறுத்து அதிகபட்சமாக இரவு தூங்கும் வரை அசைபோட வைக்கும்.

ஆனால் இந்த திரைப்படம் ஒரு இரவையும் கடந்து இரண்டாவது இரவு வரை என்னை துளைத்துக் கொண்டிருக்கிறது. அந்த திரைப்படத்தின் இயக்குநரை நேரில் சந்தித்து வாய் நிறைய பாராட்டினாலும் இந்த படம் என் மீது செலுத்தும் இந்த ஆதிக்கம் குறையுமா என தெரியவில்லை.

சிறு வயதில் ஒருசில படங்களை பார்த்து கண்கள் குளமாகும் போது, அருகில் என் அப்பா “அது சும்மாம்மா, படம்மா” னு சொல்லுவாங்க. படம் முடிந்து வெளியே வரும்போது, அழுததை அனைவரும் சொல்லி சொல்லி கிண்டல் அடிக்க, நானோ அழலாம் இல்லையேனு சிரித்துக் கொண்டே கடந்து விடுவேன். பற்பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படத்தில் கண்ணீர் கண்களையும் தாண்டி வந்தது. ஆனால் இது சும்மாம்மா படம்மா என யாராலும் சொல்ல முடியாது. கும்பகோணம் பள்ளி தீ, போபால் விஷவாயு, ஸ்டெர்லைட் தாமிர நச்சு இன்னும் பல நிறுவனங்களாலும் செத்து மடிந்த, கொஞ்சம் கொஞ்சமாக செத்து கொண்டிருக்கிற என் மக்களை அந்த இருக்கையில் அமர்ந்தபடியே நேருக்கு நேராக பார்த்தேன்.

பிணத்தையும் வைத்து செய்யும் ஓட்டு அரசியல், மக்களை ஒன்றிணைய விடாமல் சாதியத்தை வைத்து பிரிவிணையை ஏற்படுத்தும் அரசியல் கட்சிகள், ஆளும் கட்சி தான் வஞ்சித்துவிட்டது அப்போ எதிர்கட்சிக்கு ஓட்டு போடலாம்னு அப்பாவியாக சிந்திக்கும் மக்கள், மக்களின் கொந்தளிப்பை ஒரு போராட்டம், வீரவணக்கம் முழக்கத்தில் அடக்கிவிடும் அடையாளப் போராட்டங்கள், ஐனநாயகத்தின் இறுதி நம்பிக்கையான சட்டம் இவை அனைத்தும் அடங்கிய பானையை ஓங்கி அடித்து அதன் சொத்தைகளை உடைத்துக் காட்டியிருக்கிறார் இயக்குநர் விஜயகுமார். இதற்கெல்லாம் மேலாக மக்களின் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இயக்குநர் முன்னிறுத்தியுள்ள தீர்வு கைகளை உயர்த்தி தட்ட வைத்தது. பின்னணி இசை அமோகம். சிறுவயதில் ஜனகனமன பாடலை கேட்டாலே முறுக்கேறுவதைப் போல, அப்படி ஏறியது தத்தகிட தத்தகிட இசை.

எந்த படமும் என்னை இருமுறை பார்க்க தூண்டியது இல்லை.
என் மகன்களுடன் மீண்டும் ஒருமுறை

“உறியடி -2”

வை பார்க்கத் தயாராகிவிட்டேன்.

மிக மிக மிக ரசித்த காட்சி – இங்க வாடா னு போலீஸ் அழைக்கும்போது, பதிலுக்கு “டா” போட்டு பேசுவாரு.. கைதட்டலில் தியேட்டரே அதிர்ந்தது..

தான் கற்ற கலையை மக்களுக்காக பயன்படுத்திய தோழர் விஜயகுமாருக்கு வாழ்த்துக்கள்

– பிரியா