CMPC
POLITICS / அரசியல்

உனக்கு ஏன் விடுதலை?

உனக்கு ஏன் விடுதலை?… நீயின்றி எவருக்கும் இங்கு இல்லை விடுதலை…

மகளிர் தினத்தில் மட்டுமல்ல எல்லா நாட்களிலும் மகளிர் போற்றப்படுபவர்களே… மனித குலத்தின் தொடக்க காலங்களில் ராணிகளாக இருந்த பெண்கள் நாகரீகம் வளர வளர அடிமைகளாக மாற்றப்பட்டு, தற்போது அதிலிருந்து மீள இன்று வரை போராடிக் கொண்டே இருக்கிறார்கள். மகளிர் தினத்தை நாம் கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், உண்மையான பெண் விடுதலை என்றால் என்ன? பெண்ணியம் என்றால் என்ன? என்ற புரிதலை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டியது தற்போதைய காலக் கட்டத்தில் மிகவும் அவசியமாக பார்க்கப்படுகிறது.

ஆணாதிக்க சமூகம்… ஆணாதிக்க சமூகம் என கூறும் பெண்ணியவாதிகள் சிலர், ஆண்களுக்கு நிகராக பெண்களை பாவித்துக் கொள்வது தான் பெண்ணியம் என்றும், ஆண்கள் செய்வதை பெண்களும் சளிக்காமல் செய்வதே பெண்ணியம் என்றும் குறுகிய புரிதல் கொண்டுள்ளனர். எடுத்துக்காட்டாக ஆண்கள் அணியும் உடையை அணிவது, ஆண்களை போலவே சிகை அலங்காரம் செய்துகொள்வது என தோற்றத்திலும், செயல்பாடுகளிலும் ஆண்களுக்கு நிகராக இருக்க வேண்டும் என நினைத்துக் கொள்வார்கள். இந்த புரிதல் பெண்களுக்கு மட்டுமல்ல இந்த சமூகத்திற்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும். சரி ஆண்களுக்கு நிகராக இருப்பது பெண்ணியம் அல்ல என்றால், வேறு எது தான் பெண்ணியம் என நீங்கள் நினைப்பது புரிகிறது.

நவீன மயம், உலக மயம் என ஒவ்வொரு அந்நிய நிறுவனங்களும் இந்தியாவில் படையெடுக்க படையெடுக்க… உழைக்கும் வர்க்கத்தின் உழைப்பை ஒவ்வொரு முதலாளிகளும் சுரண்ட சுரண்ட… இங்கு பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அடிமையாகவே தான் உள்ளனர். ஆண்களுக்கு பெண்கள் அடிமை என்பதைபோல, முதலாளிகளுக்கு ஆண்கள் மட்டுமல்ல இந்த சமூகமே அடிமையாகவே தான் வாழ பழகிக் கொண்டிருக்கிறது. எனவே பெண்ணியம் என்பது ஆண்களுக்கு நிகராக இருப்பது அல்ல, இந்த முதலாளித்துவ சமூகத்திடமிருந்து ஆண்களுக்கும் விடுதலை வாங்கிக் கொடுப்பதேயாகும்.

குடும்பத்தில் யாருக்கு என்ன தேவை… யாருக்கு எவ்வளவு தேவை… என குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் பார்த்து பார்த்து பகிர்ந்தளிக்க பெண்களால் மட்டுமே முடியும்… அதனை இந்த சமூகத்தோடும் நாம் ஒப்பிட்டு பார்க்க வேண்டியது இங்கு அவசியம்.. இந்த சமூகத்தில் யாருக்கு என்ன தேவை… யாருக்கு எவ்வளவு தேவை… என்பது பெண்களுக்கு நன்கு தெரியும்… அதனால் தான் இந்த சமூகத்தை பற்றி பெண்கள் எப்போதும் யோசிக்கவே கூடாது என்பதற்காகவே அவர்களை டிவி சீரியல்களுக்குள்ளும், அழகு என்ற போர்வைக்கும் புதைத்து வைத்துள்ளனர். இவற்றையெல்லாம் கடந்து கொஞ்சம் அரசியலை கற்க துடிக்கும் பெண்களுக்கு பெண்ணியம் என்பது தவறாக கற்றுக் கொடுக்கப்படுவதாகவே நான் கூறுவேன். இதனால் சமூகத்திற்கு விடுதலை வாங்கிக் கொடுக்க வேண்டிய பெண்கள், குடும்பத்தை போலவே சமூகத்தையும் தாங்கி காக்க வேண்டிய பெண்கள், பெண் விடுதலை… பெண் விடுதலை என குறுகிய வட்டத்திற்குள் அடைக்கப்பட்டு விடுகிறார்கள். இவற்றையெல்லாம் கடந்து உண்மையான அரசியல் புரிதலுடன் சமூகத்தின் அவலங்களை பெண்கள் கவனிக்கத் தொடங்கும் அந்த நிமிடத்தில் தான் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களும் அடங்கியிருக்கும் இந்த சமூகத்திற்கே விடுதலை கிடைக்கும் என்பது நிதர்சனம்.

ஜனநாயகம் என கூறி அதில் முக்கியத் தூண்களில் ஒன்று என கருதப்படும் பத்திரிகை துறையில் பணிபுரியும் பெண் என்பதால், சக பெண்களின் பார்வையிலிருந்து சற்று வேறுபட்டு இந்த சமூகத்தை பார்க்க வேண்டிய கடமை எனக்கு உள்ளது. அதுமட்டுமல்ல, இந்த சமூகத்தின் அவலங்களை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் முக்கிய பொறுப்பும் எனக்கு உள்ளதாகவே கருதுவேன். எனவே, நாமும் பெண் விடுதலைக்காக மட்டுமல்லாமல் இந்த சமூக விடுதலைக்காகவும் சிறிது அரசியல் கற்று போராட வேண்டும் என்பதே இந்த மகளிர் தினத்தில் சக பெண்களான அனைவருக்கும் நான் விடுக்கும் வேண்டுகோள்…

Related posts

மரியாதைக்குரிய தோழர் தொல்.திருமாவளவனுக்கு

admin

பேராபத்தில் பொதுத்துறை வங்கிகள்

CMPC EDITOR

ஜனநாயகத்தின் அவலத்தை காட்டிக்கொடுத்த ஆர்.கே.நகர்…

CMPC EDITOR