“உங்களை வேலையைவிட்டு வெளியேற்றப்போகிறோம், உங்கள் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்”. என்டிடிவி-யின் அதிர்ச்சியளிக்கும் அறிக்கை

0
836

ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் செய்தி மற்றும் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகளை நடத்தி வரும் என்டிடிவி, இந்தியாவில் மதிக்கத்தக்க ஊடக நிறுவனங்களில் ஒன்று. இந்த நிறுவனத்தின் இணை நிறுவனரான பிரணாய் ராய், அனைவராலும் அறியப்பட்ட மூத்த பத்திரிகையாளர். அப்படிப்பட்ட என்டிடிவி நிறுவனம் தற்போது ஒரு அதிர்ச்சியளிக்கும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கடந்த காலாண்டில், பல புதிய தொழில்நுட்பங்களை அந்த நிறுவனம் பயன்படுத்தியதாகவும், அதில் நல்ல பலன் கிடைத்திருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, மொபைல் போன் மூலம் செய்தி வழங்கும் தொழில்நுட்பம் மிகப்பெரிய பலனை கொடுத்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய தொழில்நுட்பத்தினால் கிடைத்துள்ள பலனைத் தொடர்ந்து, செலவை குறைக்கும் நடவடிக்கையாக, 25 சதவீத பணியாளர்களை, அடுத்த சில மாதங்களில் பணிநீக்கம் செய்யவுள்ளதாக ஒரு அதிர்ச்சியளிக்கும் தகவலை அந்த அறிக்கையில் என்டிடிவி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, மொபைல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், ஒளிப்பதிவாளர்களின் உதவி இல்லாமல், செய்தியாளர்களே இனி காட்சிகளை பதிவு செய்துவிடுவார்கள். மொபைல் ஆப்-களை பயன்படுத்தி அவர்களே  நேரலையும் செய்துவிடுவார்கள்.  ஆகவே, இனி ஒளிப்பதிவாளர்கள் தேவை இல்லை என்பதை குறிக்கும் வகையில் அந்த அறிக்கை அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர்கள் தேவையில்லையென்றால், உதவி ஒளிப்பதிவாளர்களும் தேவையில்லை. செய்தியாளர்களே நேரலை வழங்கிவிடுவார்கள் என்றால், அதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களும் தேவையில்லை. இப்படியாக ஒளிப்பதிவாளர்கள், உதவி ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை பணிநீக்கம் செய்யவுள்ளது என்டிடிவி நிறுவனம். இதனால், செய்தியாளர்களின் பணிச்சுமை அதிகரிக்கும் என்பது சொல்லாமல் விளங்கக்கூடியது.

வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும், நவீன தொழில்நுட்பம் வளரும்போது, மனிதர்கள் செய்யும் வேலைகளை இயந்திரங்கள் செய்யத் தொடங்குகின்றன. இதை பயன்படுத்திக்கொண்டு, முதலாளிகள் தங்கள் லாபத்தை அதிகரிக்க, அதுநாள் அவரை அந்த வேலைகளை செய்துவந்த தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குகின்றனர். இதனால், மிகப்பெரிய தொழிலாளர் கூட்டம் வேலை இழக்க நேரிடுகிறது. இந்த நடவடிக்கை தற்போதும் தொடர்கின்றது என்பதற்கான ஆதரமே என்டிடிவியின் இந்த அறிக்கை.

மூலதனத்தை இட்டு தொழிற்சாலைகளையும், நிறுவனங்களையும் நடத்தி வரும் முதலாளிகள், தங்களின் லாபத்திற்காக இப்படியொரு நடவடிக்கையை எடுப்பது தவறில்லை, என்ற வாதம் காலம் காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இந்த ‘அநியாயம்’ வேலை இழக்கும் அந்த தொழிலாளர்களும் ஏற்றுக்கொள்ளும் ‘நியாயமாக’ மாற்றப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்புகள் மனித சமூகத்தின் நன்மைக்காக பயன்படுத்தப்பட்டால், மனிதர்கள் தங்களின் தேவைக்காக செய்யும் வேலையின் நேரம் குறைய வேண்டுமல்லவா? அதற்குபதிலாக தொழிலாளர்கள் ஏன் வேலையை இழக்க வேண்டும்? என்ற கேள்விகள் தொடர்ந்து நீடிக்கின்றன. இந்த தத்துவார்த்த கேள்விக்கு விடைதேட முற்படும்போது மட்டுமே இந்த முரண்பாடு தீர்க்கப்படும். இந்த வரலாற்றுக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பு ஒவ்வொரு தொழிற்சங்கங்களுக்கும் உள்ளது.

அந்தவகையில், என்டிடிவியின் இந்த அறிவிப்பை, மற்ற நிறுவனங்களும் பின்பற்றும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை உணர்ந்து, வேலை இழக்கவுள்ள அந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது அனைத்து பத்திரிகையாளர்களின் கடமை என்பதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது

பத்திரிகை துறையில் செயல்படும் தொழிற்சங்கங்கள் அனைத்தும் தங்களின் வரலாற்றுக் கடமையை உணர்ந்து என்டிடிவியின் ஆட்குறைப்பு நடவடிக்கையை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஒருங்கிணைய வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.