டிசம்பர் 27 2013
இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் பத்திரிகையாளர் மகா.தமிழ் பிரபாகரனை விடுதலை செய்ய மத்திய மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ் பத்திரிகையாளர் மகா.தமிழ் பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்துவதற்காக சுற்றுலா விசாவில் இலங்கை சென்ற அவர், அங்கு உள்ள ராணுவ முகாம்களை படமெடுத்ததாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார். மகா.தமிழ் பிரபாகரன் சுற்றுலா விசாவில் சென்றிருந்த போதும் அவர் ஒரு பத்திரிகையாளரே. அவர் எடுத்த படங்களும், சேகரித்த செய்திகளும் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறலை அம்பலப்படுத்துவதற்காகவே. எனவே ஒரு பத்திரிகையாளராக அவரது கடமையை செய்ய அவர் சுற்றுலா விசாவில் சென்றுள்ளார். சுற்றுலா விசாவில் வருபவர்கள் இதுபோன்ற இடங்களை படம் பிடிக்கக்கூடாது என்கிற இலங்கையின் வாதத்தை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கான அனைத்து உரிமைகளும் மிகக் கடுமையாக ஒடுக்கப்படுகிறது. அப்படிப்பட்ட இலங்கையின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்த சில விதி மீறல்களை செய்ய வேண்டிய கட்டாயம் ஜனநாயக சக்திகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் ஏற்படுகிறது. அந்த வகையில் பணியாற்றிய மகா.தமிழ் பிரபாகரனை இலங்கை அரசு கைது செய்துள்ளது. இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ள மகா.தமிழ் பிரபாகரனை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக துவங்கும்படி மத்திய அரசை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மய்யம் வலியுறுத்துகிறது. மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க மாநில அரசும், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், அனைத்து பத்திரிகையாளர்களும் முன்வர வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.