இன்பங்களின் கரையிறக்கும்,
துன்பங்களின் தீவிற்கும்,
நினைவுகளின் உச்சத்திற்கும்,
என்னை இட்டுச்செல்லும்
படகு-இரவு.
குழந்தை பருவத்தில்,
மொட்டை மாடி படுக்கை,
கதை சொல்ல அம்மா,
அதை திரையிட வானம்,
ஒளியிட நிலா,
கதாநாயகனாய் நான்.
வாலிப பருவத்தில்,
முதல் கவிதை நான் வாசிக்க,
கண் மூடிய பூமி,
நண்பனாய் ஒளிவீசிய நிலா,
குமரிகளாய் கண்சிமிட்டிய நட்சத்திரங்கள்,
காதலியாய் மௌனம் காத்த வனம்,
கவிஞனாய் பதவி உயர்ந்த நான்.
திருமண பருவத்தில்,
எங்கள் படுக்கை அறைக்குள் மாதத்தில்
என்றாவது ஒரு நாள் எடிசன்,
மூன்று நாள் சூரியன்,
நிலா,நட்ச்சத்திரம்,மேகம் தினந்தோறும்.
பொறுப்புகளின் பருவத்தில்,
உடல் அவசரங்களும்,
என்னவளின் ஹார்மோனிய கொறட்டைகளும்,
தூக்கத்தை களைத்த பிறகு
மீண்டும் தூக்கம் வரும் வரை,
என் வெற்றி-தோல்வி,
புன்னகை-கண்ணீர்,
அனைத்தையும் சேமிக்கும் பெட்டியாய்.
முதுமை பருவத்தில்,
நினைவுகளை கிளறிக்கொண்டு,
பார்வையிலும், புன்னகையிலும்
கலவிகொள்ளும் நாங்கள்.
இன்பங்களின் கரையிறக்கும்,
துன்பங்களின் தீவிற்கும்,
நினைவுகளின் உச்சத்திற்கும்,
என்னை இட்டுச்செல்லும்
படகு-இரவு.