CMPC
ART / கலை

இந்திய தேர்தல் முறையை, துவைத்து தொங்கப்போட்டுள்ள “நியூட்டன்”

ஒன்பதாயிரம் வாக்குச்சாவடிகள்…. 19 ஆயிரம் வாக்கு இயந்திரங்கள்…. 8251வேட்பாளர்கள்…. 81 கோடி வாக்காளர்கள்….

ஹாலிவுட் பட ட்ரைலர்களில் இதுபோன்ற வார்த்தைகளை கேட்டிருப்போம். 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் குறித்து, பீற்றிக்கொள்வதற்காக தேர்தல் ஆணையத்தால் முன்வைக்கப்பட்ட எண்ணிக்கைகள் இவை. நாம் அடிக்கடி பயன்படுத்தாத எந்த ஒரு விஷயமும் எண்கள் எப்போதும் நம்மை அறியாத ஒரு மயக்கத்தை கொடுப்பது இயல்பே. அந்த வகையில், இந்த எண்களின் விளையாட்டை மேலோட்டமாக பார்க்கப்போனால் பிரம்மாண்டமாகவே தோன்றும். அறிவை கொஞ்சம் பயன்படுத்தி பார்த்தோமானால், இதில் பீற்றிக்கொள்ள என்ன இருக்கிறது என்பது தெளிவாகும். 130 கோடி மக்கள் வசிக்கும் நாட்டில் 9 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்க வேண்டியதும், ஆயிரக்கணக்கில் வாக்கு இயந்திரங்களை பயன்படுத்தவேண்டியதும் அவசியம் தானே? 100 சதவீத வாக்குப் பதிவு நடந்திருந்தால் பீற்றிக்கொள்ள வேண்டியதுதான். அமைதியாகவும், மக்களின் முழு விருப்பத்துடனும் நடந்திருந்தால் காலரையும் தூக்கிவிட்டுக்கொள்ளலாம். ஆனால், இந்தியாவில் இது நடந்ததுமில்லை, இனி எப்போதும் நடக்கப்போவதுமில்லை. அதனால்தான் இந்த வெற்று விளம்பரங்களினால் இந்திய தேர்தல் ஜனநாயகத்திற்கு முட்டுக்கொடுக்கப்படுகிறது. இதை மக்கள் மொழில் தோலுரித்துகாட்கிறது “நியூட்டன்”.

அமித் மசூக்கரின் இரண்டாவது படம் இது என்றால் யாரும் நம்பமாட்டார்கள். சீரியசான ஒரு விஷயத்திற்கு பின்னால் உள்ள நகைச்சுவையம்சத்தை மட்டுமே பின்தொடர்ந்து நகரும் கதையை கொண்ட படங்களை “பிளாக் கமெடி” என்ற வரையரைக்குள் கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் “நியூட்டனும்” ஒரு “பிளாக் காமெடி” படம்தான்.

மாவோயிஸிட் கட்சியின் செயல்பாடு தீவிரமாக உள்ள தண்டகாரண்யா வனப்பகுதியே கதைக்களம். நம்மவூர் சகாயம் மாதிரி, ஒரு நேர்மையான அரசு அதிகாரி நியூட்டன். ஹிந்தி புரிந்தால் மட்டுமே, இந்த பெயருக்கான காரணத்தை விளக்கும்போது கொஞ்சம் சிரிக்க முடியும். தண்டகாரண்யா காட்டுப்பகுதிக்கு நடுவே அமைந்துள்ள வாக்குச்சாவடிக்கு, தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியூட்டன் செல்கிறார். அவருக்கு பாதுகாப்பு தர வேண்டிய சிஆர்பிஎஃப் கமாண்டர் ஆத்மா சிங்.

தேர்தல் வழிகாட்டி புத்தகத்தில் உள்ளது உள்ளபடி, தேர்தலை நடத்த வேண்டும் என்பது நியூட்டனின் விருப்பம். தேர்தல் புறக்கணிப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பது ஆத்மா சிங்கின் அச்சம். அதிகாலை 4 மணிக்கு எழுந்துகொள்ளும் நியூட்டன் பூத்துக்கு புறப்பட தயாராகிறார். தேர்தல் நடைபெற்றதாக காட்டிக்கொள்ளலாம், காட்டுக்குள் போவது ஆபத்து என்று கூறுகிறார் ஆத்மாக சிங். நேர்மையான கொம்பன் நியூட்டனிடனிடம் ஆத்மா சிங்கின் சமாளிப்புகள் தோற்றுப்போகின்றன. மின்னணு வாக்குபதிவு இயந்திரம் சகிதமாக, ஆத்மா சிங் தலைமையில், துணை ராணுவப்படை புடை சூழ காட்டுக்குள் நடக்கிறது தேர்தல் குழு. இவர்களுடன், பழங்குடியினத்தை சேர்ந்த ஆசிரியை மால்கோவும் இணைந்துகொள்கிறார்.

எரிந்துபோன கிராமத்தில், பாழடைந்த பள்ளிக்கூடம் கூட்டி, பெருக்கி துடைக்கப்பட்டு, வாக்குச்சாவடியாக மாற்றப்படுகிறது. எந்த நேரமும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் பாதுகாப்பு படை வீரர்கள். நேரம் நகர்கின்றது. ஒருவர் கூட ஓட்டுபோட வந்தபாடில்லை. நியூட்டனையும், மால்கோவையும் தவிர மற்றவர்கள் நம்பிக்கை இழக்கின்றனர். அப்போது, ஆத்மா சிங்கிற்கு வயர்லெஸ்சில் ஒரு அழைப்பு வருகிறது. வெளிநாட்டு செய்தியாளர் ஒரு வருடன் உயர் அதிகாரி அந்த வாக்குச்சாவடிக்கு வருவதாக தகவல். ஆத்மா சிங் தனது சகாக்களுடன் புறப்படுகிறார். ஒரு கிராமத்திற்குள் நுழையும் பாதுகாப்பு படையினர், கிராமவாசிகளை வலுக்கட்டாயமாக வாக்குச்சாவடிக்கு அழைத்து வருகின்றனர். ஆனால், ஒருவருக்கும் எப்படி வாக்களிப்பது என்பது கூட தெரியவில்லை.

இதுதான் மின்னணு இயந்திரம்… இது பொத்தான்… இது சின்னம்… இவர்கள் வேட்பாளர்கள்…. நியூட்டன் ஆதிவாசிகளுக்கு வகுப்பெடுக்கிறார். உயர் அதிகாரி வருவதற்குள் வாக்குப் பதிவு தொடங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஆத்மா சிங். பொத்தானை அழுத்த மட்டுமே கற்றுக்கொண்ட ஆதிவாசிகள், “இங்க்கி பிங்க்கி பாங்க்கி” முறையில் வாக்களிக்கின்றனர்.

உயர் அதிகாரி வந்து சேர்கிறார். அவருடன், வந்த வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு செய்தியாளர்கள் நடந்தது என்ன என்பதை சற்றும் விசாரிக்காமல், மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் அமைதியான முறையில் வாக்கெடுப்பு நடப்பதாக செய்தியை பதிவு செய்கின்றனர். செய்திக் குழுவும் உயர் அதிகாரிகளும் புறப்பட்ட பிறகு, ஆத்மாவுக்கு இனியும் அங்கு இருக்க இடம் கொள்ளவில்லை.

வாக்களிக்கும் நேரம் முடியாமல் நியூட்டன் இங்கிருந்து நகரமாட்டான் என்பது ஆத்மாவுக்கு தெரியும். திடீரென்று துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது. பதற்றத்துடன் வாக்குச்சாவடிக்குள் ஓடிவரும் ஆத்மா, மாவோயிஸ்ட்டுகள் சுற்றிவளைத்துள்ளதாக கூறுகிறார். பயந்துபோன நியூட்டனும், மற்றவர்களும் மின்னணு வாக்கு இயந்திரத்தை எடுத்துக்கொண்டு வெளியேறுகின்றனர். துணை ராணுவத்தின் பாதுகாப்புடன், முகாமை நோக்கி நடக்கின்றனர். சிறிது தூரம் நடக்கும் நியூட்டன் ஆத்மா இன்னும் வராததால் சந்தேகம் அடைகிறார். வாக்குச்சாவடியிலிருந்து தன்னை கிளப்புவதற்காக இது ஆத்மா நடத்திய நாடகம் என்பதை புரிந்துகொள்கிறார். வாக்குச்சாவடியை நோக்கி திரும்பு ஓடுகிறார். வழியில் அவரை தடுத்து நிறுத்தும் ஆத்மா, முகாமை நோக்கி வலுக்காட்டாயமாக இழுத்துச் செல்கிறார்.

தேர்தலை முழுமையாக நடத்த முடியல்லையே என்ற சோகத்துடன் நியூட்டன் நடந்து செல்லும்போது, வழியில் நான்கு ஆதிவாசிகள் வாக்களிப்பதற்காக வருகின்றனர். பாதுகாப்பு படையினரிடமிருந்து துப்பாக்கியை பறிக்கும் நியூட்டன் ஆத்மாவை குறிவைத்து, அவர்கள் நான்கு பேரும் வாக்களிப்பதை உறுதி செய்கிறார். அத்துடன், வாக்களிக்கும் நேரம் முடியும் வரை அவர்கள் அனைவரும் துப்பாக்கி முனையில் நிறுத்தப்படுகின்றனர். வாக்குப்பதிவு நேரம் முடிகிறது. துப்பாக்கி கைமாறுகிறது. பாதுகாப்பு படையினரால் நியூட்டன் கடுமையாக தாக்கப்படுகிறார்.

6 மாதங்களுக்குப் பிறகு….

காட்டுப்பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி சுரங்கத்தில் லாரிகள் கனிமத்தை அள்ளிச்செல்கின்றன.

அலுவலகத்தில் தன்னை சந்திக்கும் மால்கோவிடம், நேரம் தவறாமல் அலுவத்திற்கு வந்ததற்காக வழங்கப்பட்ட சான்றிதழை, நியூட்டன் பெருமையுடன் காண்பிக்கிறார்.

கணவனின் பொருளாதார நிலை உணர்ந்து, விலைக்கு வாங்க நினைத்த சில பொருட்களை திருப்பி வைத்துவிடலாம் என்கிறார் ஆத்மாவின் மனைவி. தயக்கத்துடன், தனது பர்சை பிதுக்கிக்கொண்டே “பரவில்லை வாங்கிக்கொள்” என்கிறார் ஆத்மா.

ரசிகர்களின் கைதட்டலுடன் படம் நிறைவடைகிறது.

Related posts

இரவுகளும் பருவங்களும் – வே.அருண்மொழிவர்மண்

CMPC EDITOR

கோலிவுட் ரஞ்சித்தை பின் தொடருமா/வெளியேற்றுமா?

CMPC EDITOR

நாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம் நெடும்பயணம் – அருண்மொழி வர்மன்

CMPC EDITOR