ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதிக்கு எதிராக தொடுக்கப்படும் ஒடுக்குமுறையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

0
383

நவீன யுகம் என்று அழைக்கப்படும் 21ஆம் நூற்றாண்டிலும், மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் தொடர்ந்து வருவதை, மதுரையை சேர்ந்த ஆவணப்பட இயக்குனர் திவ்யா, “கக்கூஸ்” என்ற ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார். மலக்குழிகளில் மனிதர்கள் இறக்கப்படுவதும், அவர்கள் மரணித்தால் அவர்களின் குடும்பம் படும் துன்பங்களையும், அத்துடன் குறிப்பிட்ட சில சாதியினர் மட்டுமே இந்த தொழிலை செய்யக் கூடிய சூழல் நிலவுவதையும் ஆதாரங்களுடன் அந்த ஆவணப்படத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக அவலத்தை படம் பிடித்துக்காட்டிய இந்த ஆவணப்படம், சமூகத்தின் பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றதுடன், இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் திரையிடப்பட்டது.

இந்நிலையில், கக்கூஸ் ஆவணப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்த நபர்கள், மலம் அள்ளும் தொழிலை செய்வதில்லை என்று, புதிய தமிழகம் கட்சியின் தலைவர் திரு.கிருஷ்ணசாமி தெரிவித்தார். அத்துடன், அந்த ஆவணப்படத்திலிருந்து அந்த குறிப்பிட்ட சாதியின் பெயரை நீக்குவதுடன், திவ்யா வெளிப்படையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதைத்தொடர்ந்து, புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் என்றும் தொண்டர்கள் என்றும் கூறிக்கொள்பவர்கள், சமூக வலைதளங்களில் திவ்யாவுக்கு எதிராக, அருவெறுக்கத்தக்க கருத்துகளை பரப்பி வருகின்றனர். மேலும், அவரை மிகவும் கீழ்த்தரமான வார்த்தைகளால் திட்டி வருகின்றனர். அத்தோடு நில்லாமல், அவரை தொடர்பு கொண்டு திட்ட வேண்டும் என கூறி, திவ்யாவின் மொபைல் எண்ணையும் சிலர் சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான நபர்கள் தினந்தோறும் திவ்யாவை தொடர்புகொண்டு அவரை அருவெறுக்கத்தக்க வார்த்தைகளில் திட்டுவதுடன், கொலை மிரட்டலையும் விடுத்துவருகின்றனர். அத்துடன், திவ்யாவுக்கு ஆதரவாக கருத்துக்களை தெரிவிக்கும் ஜனநாயகவாதிகளும், பத்திரிகையாளர்களும் இதேபோன்ற தாக்குதலுக்குள்ளாகி வருகின்றனர்.

இதுகுறித்து, திவ்யா தரப்பில், காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், திவ்யாவுக்கு எதிராக கொடுக்கப்பட்டுள்ள புகாரின் பேரில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதன் மூலம், காவல்துறையினர் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது.

அரசியல் சாசனம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம் நமது ஜனநாயகத்தின் அடிநாதமாகும். அதேவேளையில், கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உரிய சட்டங்கள் நமது நாட்டில் நடைமுறையில் உள்ளன. ஆகவே, கிருஷ்ணசாமி முன்வைக்கும் இந்த கோரிக்கைகள் நியாயம் என்று அவர் கருதினால், அந்த கோரிக்கைகளை திவ்யா ஏற்க மறுத்தால், அவர் தனது நியாயத்தை முன்வைத்து நீதி பெறுவதற்கு நீதிமன்றம் உள்ளது. அதை விடுத்து, அந்த கட்சியின் தொண்டர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், கருத்து சுதந்திரத்தை ஒடுக்கம் வகையில், திவ்யாவிற்கு எதிராக கீழ்த்தரமாக பேசி வருவதையும், திவ்யாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் பத்திரிகையாளர்களையும் கீழ்த்தரமாக பேசி வருவதையும், இதுவரை திரு.கிருஷ்ணசாமி கண்டிக்காமல் இருப்பது, அவரும் இந்த செயல்களை ஆதரிக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

ஆகவே, திவ்யாவுக்கு எதிராக சமூக வலைதளங்களில் கீழ்த்தரமாக பேசி வரும் நபர்கள் மீதும், அவர்களை தூண்டிவிடுபவர்கள் மீதும் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க தமிழக அரச உத்தரவிட வேண்டும் என மாற்றதிற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

கருத்து சுதந்திர பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், திவ்யாவுக்கு உரிய நீதி கிடைக்க அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்புகளும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அழைப்பு விடுக்கின்றது.

இந்த தருணத்தில், பத்திரிகை சுதந்திரத்தையும், பத்திரிகையாளர்களையும் பாதுகாக்க வகை செய்யும் “பத்திரிகையாளர் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்தை” தமிழகத்தில் நிறைவேற்ற அனைத்து பத்திரிகையாளர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கின்றது.