ஆனந்த விகடனுக்கு ஆதரவாய் நிற்போம்! ஊடக சுதந்திரத்தை பாதுகாப்போம்!

0
811

நவம்பர் 26 2015

ஆனந்த விகடனுக்கு ஆதரவாய் நிற்போம்! ஊடக சுதந்திரத்தை பாதுகாப்போம்!

இதுவரை அறிந்த அரசியல் ஆட்சி முறைகளில், ஜனநாயகப்பூர்வமான வழிநடத்தலே, நவீன காலத்தின் சிறந்த ஆட்சிமுறை என்று, உலகின் பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இதன் வெளிப்பாடாக, உலகில் எந்த ஒரு அரசும் ஜனநாயக வழிமுறையிலிருந்து விலகும்போது, அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து அதற்கு எதிராக குரல் எழுப்புகின்றன.

 

ஒரு நாடு, ஜனநாயகபூர்வமாக செயல்படுகின்றதா? என்பதை அறிந்துகொள்வதற்கு, அந்த நாட்டில் ஊடகங்கள், சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிந்துகொள்வது மிகவும் பிரதானமானது. “ஊடகங்கள், ஜனநாயகத்தின் நான்காவது தூண்” என்ற கருத்து, ஊடக சுதந்தரம், ஜனநாயகத்தின் உயிர்நாடி என்பதை உணரச்செய்கின்றது. அவ்வளவு முக்கியத்தும்வாய்ந்த, ஊடக சுதந்திரத்தை பேணிக்காப்பது, ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவருடைய பொறுப்பாகும்.

 

இந்த புரிதலின் அடிப்படையில், கடந்த சில நாட்களாக ஆனந்த விகடன் இதழ் சந்தித்து வரும் இடையூறுகளை பார்க்கும்போது, தமிழகத்தில் ஊடக சுதந்திரம், நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது தெளிவாகின்றது.

 

ஆனந்த விகடனில் கடந்த முப்பது வாரங்களாக வெளியாகி வந்த ‘மந்திரி தந்திரி’ என்ற தொடர், தமிழக அமைச்சர்களின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த தொடரின் இறுதி வாரத்தில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் செயல்பாடுகளும், விமர்சனரீதியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆளும் அரசின் தவறுகளை ஊடகங்கள் சுட்டிக்காட்டுவது, ஜனநாயக நாட்டில் அனுமதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், மிகவும் அவசியமான நடவடிக்கையாகும். இருந்தபோதும், ஆனந்த விகடனுக்கு எதிராக முதலமைச்சர் ஜெயலலிதா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

 

தமிழகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் ஊடகங்களை அச்சுறுத்தும் வகையில், அவற்றிற்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வது கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து, அரசின் இந்த நடவடிக்கையை தொடக்கத்திலேயே தடுக்காததால், தற்போது செய்தி வாசிப்பாளர்களுக்கு எதிராகவும் கூட அவதூறு வழக்கு தொடரப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இனியும் இதை தடுக்கத்தவறினால், ஆட்சியாளர்கள், அவதூறு வழக்கு என்ற ஆயுத்தத்தை, ஊடக நிறுவனத்தில் பணியாற்றும் கடைநிலை ஊழியர்களுக்கு எதிராகவும் திருப்ப தயங்கமாட்டார்கள்.

 

இது ஒருபுறமிருக்க, தமிழகம் முழுவதும் ஆனந்த விகடன் இதழின் விற்பனையை தடுக்கும் நோக்கத்தில், அதன் விநியோகஸ்தர்கள் தொடங்கி விற்பனையாளர்கள் வரை, ஆளும் கட்சியினரால் மிரட்டப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது. இவற்றிற்கெல்லாம் மேலாக, எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஆனந்த விகடனின் ஃபேஸ் புக் பக்கம் தற்போது முடக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழச்செய்துள்ளது.

 

ஆகவே, ஆனந்த விகடன் எதிர்கொண்டுள்ள இந்த நெருக்கடி, ஊடக சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை என்பதை புரிந்துகொண்டு,  அனைத்து ஊடகவியலாளர்களும், ஊடகவியலாளர் அமைப்புகளும் ஆனந்த விகடனுக்கு அனைத்து வகையிலும் ஆதரவளிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கின்றது.

 

ஊடகங்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும் எதிராக, அரசு சார்பாக தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்குகள் அனைத்தையும், எந்தவித முன் நிபந்தனைகளுமின்றி திரும்ப பெறவேண்டும் என்றும் ஊடகங்களுக்கு எதிராக அவதூறு வழக்குகள் தொடர்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசை கேட்டுக்கொள்ளும் அதேவேளையில், அனைத்து ஊடகவியலாளர்கள் அமைப்பும் ஒருங்கிணைந்து இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கின்றது.

 

தமிழகத்தில் ஆனந்த விகடன் இதழின் விற்பனைக்கு தடை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிடுவதுடன், ஆனந்த விகடனின் ஃபேஸ் புக் பக்கம் முடக்கப்பட்டது தொடர்பாக, காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.