அவதூறுகளை பரப்பி பத்திரிகையாளர்களை அச்சுறுத்த நினைக்கும், அதிமுக நிர்வாகிகளின் கீழ்த்தரமான செயலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

0
445

பண மதிப்பிழப்பு அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்ட அந்த சமயத்தில், நூறு ரூபாய்க்கு கூட வழியில்லாமல், வங்கிகள் மற்றும் ஏடிஎம்களின் வாசலில் மக்கள் தவித்துக்கொண்டிருந்த வேளையில், புத்தம் புதிதாக அச்சிடப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளை கட்டுக்கட்டாக வைத்திருந்த சேகர் ரெட்டியை யாரும் மறந்திருக்கமாட்டோம். எஸ்.ஆர்.எஸ் மைனிங் என்ற நிறுவனத்தின் பெயரில் மணல் கொள்ளையில் ஈடுபட்டுவந்த சேகர் ரெட்டிக்கு சொந்தமான வீடு மற்றும் நிறுவனங்களில், 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில், சுமார் 36 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய 2000 ரூபாய் நோட்டுக்கள் மட்டுமின்றி, சட்டவிரோத மணல் கொள்கையை நடத்துவதற்கு சேகர் ரெட்டி யாருக்கெல்லாம் பணம் கொடுத்தார் என்பதற்கு ஆதாரமாக அவர் எழுதி வைத்த டைரியையும் வருமான வரித்துறையினர் கைப்பறினர். அந்த டைரியின் பக்கங்கள் தற்போது ஊடகங்களுக்கு கிடைக்கப்பெற்று அவை ‘தி வீக்’ இதழ் உட்பட, பல ஊடகங்களிலும் செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.

தற்போது வெளியாகியுள்ள சேகர் ரெட்டியின் டைரியில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உட்பட பல அமைச்சர்களுக்கு சேகர் ரெட்டி பணம் வழங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த செய்தி அனைத்து ஊடகங்களிலும் வெளியானதை தொடர்ந்து, செய்தியாளர்கள் இதுகுறித்து மேலும் செய்தியை வெளியிடுவதை தடுக்கும் வகையில், சேகர் ரெட்டி சில செய்தியாளர்களுக்கும் பணம் வழங்கியுள்ளார் என்பது போன்ற, போலியான பட்டியல் ஒன்றை சிலர், சமூக வளைதளங்களில் பரப்பி வருகின்றனர். பெரும்பாலும், இந்த போலி பட்டியலை அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்தவர்களே அதிகமாக பரப்பி வருகின்றனர். இதை வைத்துப்பார்க்கும்போது, அவர்கள்தான் இந்த போலி பட்டியலை தயாரித்திருப்பார்கள் என்றும் சந்தேகப்படத் தோன்றுகிறது.

அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் செய்யும் தவறுகள் தொடர்பான, ஆதாரங்கள் கிடைக்கும்பட்சத்தில், அதை மக்களிடம் செய்தியாக கொண்டு சேர்க்க வேண்டியது பத்திரிகையாளர்களின் கடமை. அத்தகைய கடமையை செய்த பத்திரிகையாளர்களுக்கு எதிராக, அவர்களை அச்சுறுத்தும் வகையிலும் அவர்கள் தங்கள் பணியை சுதந்திரமாக தொடர்ந்து செய்வதை தடுக்கும் வகையிலும் இதுபோன்ற அவதூறுகளை பரப்புவது, அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையேயன்றி வேறில்லை. அதுவும், அரசியல்சானத்தின் மீது ஆணையிட்டு ஆட்சியில் அமர்ந்திருக்கும் ஒரு கட்சியின் நிர்வாகிகளே, இதுபோன்று பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் நோக்கத்தில் செயல்படுவது, அந்த கட்சி அரசியல் சாசனத்தை மதிக்கவில்லை என்பதையே உணர்த்துகின்றது.

ஆகவே, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களால் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், அந்த கட்சியின் நிர்வாகிகள் மேற்கொண்டுள்ள இந்த கருத்து சுதந்திர ஒடுக்குமுறை நடவடிக்கையை உடனடியாக கண்டிக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

காவல்துறை இலாக்காவிற்கு பொறுப்பு வகிக்கும் தமிழக முதலமைச்சர், பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில், இதுபோன்ற கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

அத்துடன், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர், பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறு பரப்பிய அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த நிர்வாகிகள் மீது கட்சி ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகளே பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறு பரப்பு துணிந்திருப்பதை அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து கண்டிக்க வேண்டும் என்றும், இதற்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க குரல் கொடுக்க வேண்டும் என்றும் அனைத்து பத்தரிகையாளர் அமைப்புகளையும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.