அரியலூர் மாவட்ட நியூஸ் 18 தமிழ்நாடு செய்தியாளர் கலைவாணன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் காட்டு மிராண்டித்தனமான நடத்திய தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

0
808

விடுதலைசிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியில், அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமமும் உள்ளடங்கிய ஒரு பகுதி. இந்த கிராமத்தில் நேற்று (19.04.19) நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. அப்போது, விடுதலை சிறுத்தைகளின் சின்னமான பானை சின்னத்தை ஒரு குறிப்பிட்ட சாதியை சேர்ந்தவர்கள் உடைத்ததாக கூறப்படுகிறது. இதை தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் தட்டிக்கேட்டதால், பொன்பரப்பி கிராமத்திற்குள் புகுந்த ஆதிக்க சாதியினர் அங்குள்ள தாழ்த்தப்பட்டவர்களின் வீடுகளின் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதல் குறித்து தகவல் அறிந்து பல்வேறு ஊடகத்தை சேர்ந்த செய்தியாளர்கள் பொன்பரப்பி கிராமத்திற்கு செய்தி சேகரிப்பதற்காக சென்றுள்ளனர். அதற்குள், ஆதிக்கசாதியினர் அப்பகுதியிலிருந்து வெளியேறிவிட்டதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆதரவு தெரிவிப்பதற்காக அக்கம்பக்கம் உள்ள கிராமங்களை சேர்ந்த விடுதலை சிறுத்தை கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் அங்கு வந்துள்ளனர். அப்போது செய்தி சேகரிப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நியூஸ் 18 தமிழ்நாடு தொலைகாட்சியின் செய்தியாளர் கலைவாணனை விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த தலித் வெற்றி, கருணாநிதி, கலைராஜன் உட்பட பலர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

தாக்குதலை நடத்தியவர்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி குறித்த செய்தியை ஊடகங்கள் வெளியிடுவதில்லை என்ற குற்ச்சாட்டை முன்வைத்து, கலைவாணன் செய்தியாளர் என்பதை அறிந்தே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலால் இடது கண்ணில் பலத்த காயமடைந்த கலைவாணன் தற்போது அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சாதிய மோதல் தொடங்கி பல்வேறு கலவர நிகழ்வுகளில் ஆபத்தான சூழலிலும் செய்தி சேகரிக்கும் பணியை மேற்கொள்ளும் பத்திரிகையாளர்களை, அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும், காவல்துறையினரும் அவர்கள் பத்திரிகையாளர்கள் என்பது தெரிந்தும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஆகவே, எதிர்காலத்தில் அரசியல் கட்சியை சேர்ந்த தொண்டர்களும், நிர்வாகிகளும் இதுபோன்ற கீழ்த்தரமான செயலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தாக்கதலை நடத்திய அக்கட்சியின் நிர்வாகிகள் மீது கடும் நடவக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறத்துகின்றது.

தாக்குதலில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் கலைவாணனுக்கு அக்கட்சியின் சார்பாக உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

கலர காலங்களில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்நடத்தும்  அரசியல்வாதிகளுக்கு பாடம் புகட்டும் வகையில், தாக்குதலை நடத்திய விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது காவல்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.