அம்மா…
ஓர் உயிரெழுத்து..
ஒரு மெய்யெழுத்து…
ஓர் உயிர்மெய்யெழுத்து….
உயிரும் மெய்யுமாய் ஆனவளே…
உயிர்கூட்டிற்குள் என்னைச் சுமந்தவளே…
திருமணத்திற்கு முன் பட்டாம் பூச்சியாய் இருந்தவள் நீ…
மணமான பின் கூண்டுக்குள் அடைப்பட்ட செல்லப்பறவையானாய் அப்பாவிற்கு…
எனைச்சுமந்த ஈரைந்து மாதங்கள் உன் நடை கூட பூமிக்கு வலிக்கவில்லை.
எனக்குப் பிடிக்காத எதையும் நீ உண்ணவில்லை…
தொப்புள் கொடி வழியாக நீ எனக்கு அனுப்பிய உணவுகளின் சுவை
இன்னுமிருக்கிறது எனக்குள்…
உன் இருபத்தைந்து கால பழக்கத்தை மாற்றினாய் எனக்காக..
நான் அழும் போது கலங்கி,
சிரிக்கும் போது பூரிப்படைந்து,
இரவு நேரத்தில் சிணுங்கினால் கூட எழுந்து பசியாற்றுவாய் நீ…
என்னோடு நடந்து
என்னோடு விளையாடி
எனக்கு சோறூட்டி….
எனக்கு உலகமானாய் நீ..
உனக்கு உலகமானேன் நான்…
என்மீது சிறுதுரும்பு பட்டாலும் உன் கண்களில் நீர் கசியும்…
சிரிக்கும் என் கண்களில் கண்ணீர் வர சம்மதிக்க மாட்டாய் நீ…
என் கள்ளமில்லாச் சிரிப்பில் நெக்குறுகிப் போவாய் நீ…
கட்டியணைத்து கன்னம் நனைத்து நெஞ்சுக்குள் தாலாட்டுவாய் நீ…
உனக்கு இணையாய்ச் சொல்ல இன்னும் எதையும் படைக்கவில்லை இறைவன்…
இறைவன் கூட வருத்தப்படுவான் இன்று … வாழ்த்துச் சொல்ல தனக்கு அன்னை இல்லையே என்று…
இப்போதும் கூட உன் மடி சாய்ந்து கொள்ளும் போது நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றது என் மனது..
எனக்காக சிரித்தாய்
அழுதாய்
தியாகம் செய்தாய்
பாராட்டி மகிழ்ந்தாய்
சீராட்டி சிங்காரித்தாய்
எனக்காக உன்சுகம் துறந்தாய்
இத்தனையும் எனக்காக செய்தாயே
என் தாயே…
உனக்கு என்ன கைமாறு செய்யப்போகின்றேன்…
நீ தந்த அன்பையே உனக்குப் பரிசாகத் தருகின்றேன்…
பரிசு தருவதற்கு அன்பை விட பரிசுத்தமாய் எதுவுமில்லை என்னிடம்…..
அனைத்து அம்மாக்களுக்கும் இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள்….