அடக்கப்பட வேண்டிய மாடு எது?

0
1023

CMPC logo #1அடக்கப்பட வேண்டிய மாடு எது?

(ஜனவரி 1 2016)

ஜல்லிக்கட்டு தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் என்றும் நமது பாரம்பரியத்தை பறைசாற்றும் வீர விளையாட்டு என்றும் கூறுகின்றனர். ஜல்லிக்கட்டிற்கு தடை விதிப்பது தமிழர்களின் கலாச்சாரத்தை அழிக்கும் செயல் என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகின்றது.

ஜல்லிக்கட்டு நடத்துவது சரியா? தவறா? விலங்குகள் துன்புறுத்தப்படுவதும், மனித உயிர்கள் பலியாவதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதா? என்ற கேள்விகளுக்கு பதில் தேடுவதற்கு இது உகந்த சூழல் இல்லையென்றே தோன்றுகின்றது.

“பொருளாதாரமே, கலாச்சார உருவாக்கத்தின் அடிப்படை” அல்லது “பொருளாதாரமே, கலாச்சாரத்தை நிர்ணயிக்கின்றது” என்ற தத்துவத்திற்குள் பயணித்து தலை சுற்றவைக்கவும் விருப்பம் இல்லை. அதேபோல், ஜல்லிக்கட்டின் தோற்றம் வளர்ச்சி மற்றும் அதன் தற்போதைய நிலையை ஆராய்ந்து, வாடி வாசலை வாட்டத்துடன் பார்த்துக் கொண்டிருப்பர்களை கோபமுறச்செய்யவும் மனமில்லை.

ஆனால், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசு, தமிழர் கலாச்சாரத்தின் அடையாளமாக கருதப்படும் ஜல்லிக்கட்டை, தான் நினைத்தாலும் நடத்தமுடியாத கையறு நிலைக்குத் தள்ளப்பட காரணம் என்ன? என்ற கேள்வி தவிர்க்க முடியாமல் தொங்கி நிற்கின்றது. இதை யோசிக்கும்போது, ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் நினைவிற்கு வருகின்றது.

உச்சநீதிமன்றம் தன்னுடைய விடுதலைக்கு எதிராக வழங்கியிருந்த தீர்ப்பை தொடர்ந்து அந்த கடிதத்தை பேரறிவாளன் எழுதியிருந்தார். தமிழர் இறையாண்மை பேசுகின்ற திராவிட கட்சிகளும், அந்த கருத்தியலை தாங்கிய சமூக இயக்கங்களும் கவனிக்கத் தவறவிட்டதை அந்த கடிதம் நினைவுபடுத்தியது. அந்த நேரத்தில், சென்னை மாநகரத்தை மூழ்கடித்திருந்த வெள்ளத்தோடு சேர்ந்து அந்த கடிதமும், அதை எழுதுவதற்கு காரணமாக அமைந்த உச்சநீதிமன்ற தீர்ப்பும் தண்ணீரோடு தண்ணீராக பிசுபிசுத்துப்போயின.

ராஜீவ் கொலையாளிகளை தமிழக அரசு விடுதலை செய்ய முடிவெடுத்ததை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், அரசியல் சாசன அமர்வு மிக முக்கியமான ஒரு தீர்ப்பை கடந்த மாதம் வழங்கியிது. மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரம் குறித்த கேள்விகளுக்கு அந்த தீர்ப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. “இந்திய அரசியல் சாசனத்தின், 7வது அட்டவணையின், 3வது பட்டியலில் உள்ள விவகாரங்களில் அதிகாரம் செலுத்த மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளதா? அல்லது மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?” என்ற கேள்விக்கும், தீர்ப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்க முடியாமல், விழிபிதுங்கி நிற்கும் தமிழக அரசின் கையறு நிலைக்கான காரணம் அந்த பதிலில் அடங்கியுள்ளது.

தீர்ப்பின் விபரத்தையும், பேரறிவாளனின் கடிதத்தையும் பார்க்கும் முன், இந்திய அரசியல் சாசனத்தின் 7 வது அட்டவணை (7thSchedule) குறித்து தெரிந்துகொள்வது அவசியம்.

இந்தியா என்பது ஒரு தேசமா? அல்லது பல தேசங்களின் கூட்டமைப்பா? என்ற கேள்விக்கு எந்த ஒரு அரசியல் சாசன வல்லுனரும் கூறும் பதில் “இதுவும் அல்ல, அதுவும் அல்ல” என்பதாகத்தான் இருக்கும். அரசியல் சாசனத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை வைத்து பார்க்கும்போது, யாராலும் இப்படித்தான் பதிலளிக்க முடியும். இந்திய ஆட்சி முறையில் மத்திய மாநில அரசுகளுக்கு, எந்தெந்த துறைகளில் தனிப்பட்ட அல்லது பொதுவான அதிகாரங்கள் உள்ளன என்பதை வகைப்படுத்தும் மிக முக்கியமான பிரிவே இந்த 7 வது அட்டவணை.

இந்த அட்டவணையில் மூன்று வரிசைகள் (Lists) இடம்பெற்றுள்ளன. முதல் வரிசை (List-I), எந்தெந்த துறைகளில் மத்திய அரசு தன்னுடைய முழு அதிகாரத்தை செலுத்த முடியும் என்பவை குறிப்பிடப்பட்டுள்ளன. மத்திய பட்டியல் என்று அழைக்கப்படும் இந்த வரிசையில் தற்போது 97 துறைகள் உள்ளன. இரண்டாவது வரிசை (List-II), மாநிலங்களுக்கான அதிகாரப் பட்டியலை குறிக்கின்றது. மாநிலப்பட்டியல் என்று அழைக்கப்படும் இந்த வரிசையில்  தற்போது 66 துறைகள் (ஜிஎஸ்டி மசோதா நிறைவேறாத வரை) உள்ளன. மூன்றாவது வரிசையில் (List-III), மத்திய, மாநில அரசுகள் பொதுவாக (Concurrent) அதிகாரம் செலுத்தும் துறைகள் இடம் பெற்றுள்ளன. இந்த பொதுப்பட்டியல் வரிசையில் தற்போது 47 துறைகள் உள்ளன.

முதல் இரண்டு வரிசைகளில் உள்ள துறைகளில் முறையே மத்திய, மாநில அரசுகள் தனிப்பட்ட முறையில் அதிகாரம் செலுத்துகின்றன. ஆனால், மூன்றாவது வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகள் மீது மத்திய, மாநில அரசுகள் பொதுவாக அதிகாரம் செலுத்துவதாக இருந்தாலும், யாருக்கு அதிக அதிகாரம் உள்ளது என்ற கேள்வி எழுவது சில நேரங்களில் தவிர்க்க முடியாததாகின்றது.

குற்றவியல் நடைமுறைச் சட்டம், அரசியல் சாசனத்தின் 7வது அட்டவணையில் மூன்றாவது வரிசையில், அதாவது பொதுப்பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், அந்த சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் தங்களுக்குள்ள சமமான அதிகாரத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். இருந்தாலும், அந்த குறிப்பிட்ட சட்டத்தில் உள்ள சில பிரிவுகளை பயன்படுத்தி, ராஜீவ் கொலையில், குற்றம் சாட்டப்பட்டவர்களை மத்திய அரசிடம் ஒப்புதல் பெறாமல், தமிழக அரசு தன்னிச்சையாக விடுதலை செய்தது தவறு என முன்வைக்கப்படும் கருத்து, பொதுப்பட்டியல் ஏற்படுத்தும் குழப்பங்களுக்கு மிகச்சிறந்த உதாரணம்.

இந்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன அமர்வின் நீதிபதிகளில் ஒருவரான இப்ராஹிம் கலிஃபுல்லா, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய அரசியல் சாசன சபையில், அதன் உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட சந்தேகங்களையும், அதற்கு டாக்டர்.அம்பேத்கர் அளித்த பதிலையும் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அரசியல் சாசன சபையின் விவாதத்தின்போது, உறுப்பினர் ஒருவர் அரசியல் சாசனத்தின் பிரிவு 60 ல் திருத்தம் கோரி முன்வைத்த வாதத்தில்

”….. பொதுப்பட்டியலில் (List-III) உள்ள விவகாரங்களில், மாநில அரசுக்கு முடிவெடுக்கும் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்….” “….வரைவு அரசியல் சாசனத்தின் மீதான விவாதத்தின் போது, மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்ட, கூட்டாட்சி முறை உருவாக்குவதே எண்ணம் என்று கூறப்பட்டது. ஆனால் வரைவு சட்டத்தை பார்க்கும்போது உண்மையில் அவ்வாறு நடக்கவில்லை என்றே தோன்றுகின்றது…..”

என கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள டாக்டர் அம்பேத்கர்

“….உறுப்பினர்கள் முன்வைத்துள்ள திருத்தத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில் நான் இல்லை……” “….. பொதுப்பட்டியலை பொறுத்தவரை, பொதுவாக, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் விதிவிலக்காக, சில சமயங்களில் பொதுப்பட்டியலில் உள்ள விவகாரத்தில் மத்திய அரசு தனது அதிகாரத்தை கோரலாம்”  

என பதிலளித்துள்ளார். இதன் பின்னர் நடந்த வாக்குப் பதிவில் பொதுப்பட்டியலில் உள்ள விவகாரத்தில் மாநில அரசுக்கு முழு அதிகாரம் கோரும் திருத்தம் தோற்றகடிக்கப்பட்டதையும், நீதிபதி இப்ராஹிம் கலிஃபுல்லா தன்னுடைய தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இறுதியா தனது தீர்ப்பில், பொதுப்பட்டியிலில் உள்ள விவகாரத்தில் மத்திய அரசிற்கும், மாநில அரசிற்கும் இடையில் அதிகாரம் செலுத்துவதில் குழப்பம் ஏற்படும் பட்சத்தில், சட்டப்படி மாநில அரசுக்கும் அதிகாரம் இருந்தாலும், மத்திய அரசின் அதிகாரமே செல்லுபடியாகும் என்பதாக தெரிவித்துள்ளார்.

பொதுப்பட்டியலில் உள்ள விவகாரங்களில் மாநிலங்களுக்கு, வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே உள்ளது என்பது, இந்த தீர்ப்பின் மூலம் தெளிவாகியுள்ளது. ஆகவே, மாநிலப்பட்டியலில் உள்ள விவகாரங்கள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்படுவதும் கூட, மாநிலங்கள் அந்த குறிப்பிட்ட விவகாரங்களின் மீதான தன்னுடைய அதிகாரத்தை இழப்பதாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்த தீர்ப்பு உறுதிபடுத்துகின்றது. இந்த புரிதலின் அடிப்படையில் பார்க்கும்போது, இதுவரை 7வது அட்டவணையில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் மாநில அரசின் அதிகாரங்களை குறைத்துள்ளது என்பது தெளிவாகின்றது.

இந்திய அரசியல் சாசனத்தின் 7 வது அட்டவணையில் இதுவரை 8 முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல் நான்கு திருத்தங்கள்  மேற்கொள்ளப்பட்டபோது தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. 1976 ஆம் ஆண்டு 7 வது அட்டணவனையில் மிக முக்கியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோது தமிழகத்தில் ஆளுநர் ஆட்சியும் இந்தியாவில் எமர்ஜென்சியும் நடைமுறையில் இருந்தன. மற்ற மூன்று முறை திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டபோது, தமிழகத்தில் திராவிட கட்சிகள் ஆட்சியில் இருந்தன.

1973 ஆம் ஆண்டு, தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பில் இருந்தபோது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு, 7வது அட்டவணையில் சிறிய அளவில் ஒரு திருத்தத்தை கொண்டு வந்தது. 1982 ஆம் ஆண்டு, அதிமுக ஆட்சியில் காங்கிரஸ் அரசால் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் மூலம், மாநிலங்களுக்கிடையிலான சரக்குபோக்குவரத்திற்கான வரி புதிதாக மத்திய பட்டியலில் (List-I) சேர்க்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் இருந்தபோது, மத்தியில் ஆண்ட பாஜக அரசு கொண்டு வந்த திருத்தத்தின் மூலம் “சேவை வரி” புதிதாக மத்திய பட்டியலில் (List-I) சேர்க்கப்பட்டது.

இவற்றையெல்லாம் விட, 1976 ஆம் ஆண்டு எமர்ஜென்சி நடைமுறையில் இருந்தபோது காங்கிரஸ் அரசு 7 வது அட்டவணையில் மேற்கொண்ட திருத்தம் மிக முக்கியமானது. இதன் மூலம், “கல்வி” உட்பட மாநிலப்பட்டியலில் இருந்த பல துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அதுவரை மாநிலங்களின் தனிப்பட்ட அதிகாரத்தில் இருந்த, நீதித்துறை நிர்வாகம், வனம், வனவிலங்கு பாதுகாப்பு, மக்கள் தொகை கட்டுப்பாடு, தொல்நுட்ப கல்வி, மருத்துவ கல்வி, பல்கலைக்கழகங்கள் ஆகிய முக்கியமான துறைகளும் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டன. அதாவது, இந்த துறைகளின் மீதான தன்னுடைய கட்டுப்பாட்டை மாநில அரசுகள் இழந்தன.

எமர்ஜென்சி தளர்த்தப்பட்ட பிறகு 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில், தனி தமிழ்நாடு கோரிய திராவிட கட்சியின் வழித்தோன்றலான அதிமுக, ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்தது மட்டுமல்லாமல், மாநில உரிமைகளை நசுக்கிய காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தது. அதன் பிறகு மூன்றே ஆண்டுகளில் நடைபெற்ற மற்றொரு பொதுத் தேர்தலில், இன்றளவும் மாநில சுயாட்சி கோரிக்கையை விடாமல் பிடித்து நிற்கும் திராவிட மணிச்சுடரான திமுக, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தது. இந்த இரண்டு கட்சிகளும், திராவிட அரசியலின் அடிநாதமான, மாநில சுயாட்சி கோரிக்கைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, அவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் மாற்றி, மாற்றி செய்துகொண்ட தேர்தல் கூட்டணியின் மூலம் விளங்கிக்கொள்ளலாம்.

கல்வி உட்பட மிக முக்கியமான துறைகள் மீதான மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டபோதே நாம் எதிர்க்கத் துணிந்திருந்தால், பொதுப்பட்டியலில் உள்ள “மிருக வதை தடுப்பில்”, தான் இயற்றிய சட்டத்தில், காளையையும் இணைக்கும் தைரியம் மத்திய அரசுக்கு எங்கிருந்து வந்திருக்கும்?

இந்நிலையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதாவை நிறைவேற்றும் வகையில், 7 வது அட்டவணையில் மீண்டும் திருத்தம் கொண்டு வர மத்திய அரசு மும்முரம் காட்டி வருகின்றது. இந்த திருத்தம் நடைமுறைக்கு வரும் பட்சத்தில், இந்தியாவில் உற்பத்தியாகும் கச்சா பெட்ரோலியம், உயர் வேக டீசல், பெட்ரோல், இயற்கை எரிவாயு, விமான எரிபொருள், புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்களுக்கான கலால் வரி ஆகிய இனங்கள் புதியதாக மத்திய பட்டியலில் (List-I) இணைக்கப்படும். பயன்பாட்டிற்கான அல்லது விற்பனைக்கான பொருட்களின் நுழைவு வரி மாநிலப்பட்டியலிலிருந்து நீக்கப்படும். செய்தித்தாள் விற்பனையை தவிர மற்ற அனைத்திற்குமான விற்பனை வரி இதுவரை மாநிலப்பட்டியலில் இருந்தது. ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்படும்பட்சத்தில், கச்சா பெட்ரோலியம், உயர் வேக டீசல், பெட்ரோல், இயற்கை எரிவாயு, விமான எரிபொருள், மதுபானங்களுக்கான விற்பனை வரி ஆகியவை மட்டுமே மாநிலப்பட்டியலில் நீடிக்கும். விளம்பரங்களுக்கான வரியும், சொகுசு வரியும் கூட மாநிலப்பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

இந்தநிலையில், விற்பனை வரி மீதான மாநில அரசின் கட்டுப்பாட்டை பறிக்கும் ஜிஎஸ்டி மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம், என்ற உறுதியான முடிவை எடுக்காமல், வெள்ள பாதிப்பை தொடர்ந்து, தமிழக அரசு விற்பனை வரியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த திமுக தலைவர் கருணாநிதியின் செயல் யாருக்கும் முரண்பாடாக ஏன் தோன்றவில்லை?

இன்னும் சில வாரங்களில், திமுகவின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும். அதில், மாநில சுயாட்சி குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்படும். அதற்குள் ஜிஎஸ்டி மசோதாவும் நிறைவேற்றப்பட்டிருக்கும். உணவு பாதுகாப்புச் சட்டம் தொடங்கி, திட்ட கமிஷன் கலைப்பு வரை எதிர்ப்பை பதிவு செய்து வரும் அதிமுகவும் மாநிலத்தின் அதிகாரம் பறிக்கப்படக்கூடாது என்ற அரசியலில் நின்று, எதையும் உண்மையாக எதிர்த்துவிடப்போவதில்லை. இந்த கட்சிகளுக்கு தேர்தல் என்ற தேவை உள்ளது. ஆனால் தேர்தலில் போட்டியிடாத திராவிட கருத்தியலைக்கொண்டு இயங்கும் சமூக அமைப்புகளும், தமிழ் தேசிய அமைப்புகளும் கூட இவற்றை கவனிப்பதில்லை. மாறாக, ஆண்டுக்கு ஒரு முறை ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்காக போராட்டம் நடத்துவது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை எதிர்த்து போராட்டம் நடத்துவது, அவ்வப்போது முல்லை பெரியருக்கும், ஆந்திராவின் கிருஷ்ணா நதிக்கும் போராட்டத்தை நடத்துவதுமே, மாநில உரிமைக்காகவும், தமிழ் தேசியத்தை உயர்த்திப்பிடிப்பதற்கான போராட்டங்கள் என இந்த அமைப்புகள் கருதுகின்றன. தற்போது ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க வேண்டும் என்று முன் களத்தில் நின்று இந்த அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன.

தன்னுடைய விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதும், பேரறிவாளன், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், இந்த தீர்ப்பு மாநில உரிமைகளுக்கு எதிரானது என்பதை அழுத்தமாக சுட்டிக்காட்டியுள்ளார். அந்த கடிதத்திற்கு, பிரதமரிடமிருந்த பதில் கிடைக்கும் என்ற நம்பிக்கை பேரறிவளானுக்கு இருந்திக்காது என்பதை நாம்மால் நிச்சம் கூற முடியும். ஆனால், அதில் குறிப்பிட்டுள்ள விஷயம் யாரை சென்று சேர வேண்டுமோ அவர்களை சென்று சேருமா என்பதுதான் தற்போதைய கேள்வி.

அரசியல் சாசனம் நடைமுறைக்கு வந்தது தொடங்கி தற்போது வரை, 7வது அட்டவணையில் உள்ள மாநில பட்டியல் தொடர்ந்து சுருங்கி வருவதும், மத்திய பட்டியலும், பொதுப்பட்டியலும் நீண்டு கொண்டே போகக்கூடிய சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு மட்டுமல்லாமல் எந்த ஒரு பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் இறையாண்மையுள்ள அரசால் மட்டுமே காப்பற்ற முடியும் என்பதை உணரும்போது, எதிர்வரும் பயங்கரத்தை அனுமானிக்க முடிகின்றது.