ஜனநாயக முறைப்படி தேர்தலை நடத்தி முடித்த தமிழ் செய்திவாசிப்பாளர் சங்கத்திற்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது

0
2

தமிழ் செய்திவாசிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று (05.09.2021) நடைபெற்றுள்ளது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

தேர்தல் அறிவிப்பு தொடங்கி, வேட்பு மனு தாக்கல், தேர்தல் பரப்புரை, வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை என அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாகவும், ஜனநாயகப்பூர்வமாகவும் நடைபெற்றுள்ளதை பார்க்க முடிகிறது.

சென்னையில் செயல்படும் பத்திரிகையாளர் மன்றம், சென்னை நிருபர்கள் சங்கம் உட்பட சில பழமையான அமைப்புகள் அதிகபட்சமாக 20 ஆண்டுகளுக்கும் மேலாக தேர்தலை முறையாக நடத்தாமல், உறுப்பினர் சேர்க்கையைக் கூட முறையாக செய்யாமல், ஆண்டுக்கு ஒருமுறை கூட்ட வேண்டிய பொதுக் குழுவை கூட்டாமல் அமைப்புகளை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் பணிபுரியும் பத்திரிகையாளர்களின் நலன் கருதி பல மூத்த பத்திரிகையாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த அமைப்புகள் பெரும்பாலும் ஒரு சில தனி நபர்களின் கட்டுப்பாட்டில் ஆண்டுக்கணக்கில் இருந்து வருகிறது. எந்த நோக்கத்திற்காக இந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டனவோ அதிலிருந்து விலகி, ஒரு சில நபர்களின் நலனுக்காக மட்டுமே இயங்கி வருகிறது.

இந்த காரணத்தினால்தான் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் செயல்படும் அமைப்புகள் அனைத்தையும் கட்டுப்படுத்த தமிழ்நாடு பிரஸ் கவுன்சில் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது. பத்திரிகையாளர்களின் சங்கம் அமைக்கும் உரிமையை பறிக்கும் இந்த உத்தரவு, சென்னை பத்திரிகையாளர் மன்றம், சென்னை நிருபர்கள் சங்கம் போன்ற அமைப்புகளின் ஜனநாயகமற்ற நடவடிக்கையின் விளைவே என்பதை அனைத்து பத்திரிகையாளர்களும் அறிவார்கள்.

இப்படிப்பட்ட சூழலில், தமிழ் செய்திவாசிப்பாளர் சங்கத்தின் தேர்தல் எந்தவித குறைபாடும் இல்லாமல், ஜனநாயகப்பூர்வமாக நடந்து முடிந்திருப்பது, ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது. இதேபோல், ஆண்டுக்கணக்கில் தேர்தல் நடத்தாமல் உள்ள அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளுக்கும் ஜனநாயகப்பூர்வமாக தேர்தலை நடத்தி முடிக்கலாம் என்ற உற்சாகத்தை அளித்துள்ளது.

அந்தவகையில், ஜனநாயகப்பூர்வமாக தேர்தலை நடத்தி முடித்துள்ள தமிழ் செய்திவாசிப்பாளர் சங்கத்திற்கும், புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிர்வாகிகளுக்கும், தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்த தேர்தல் அதிகாரி மற்றும் குழுவினருக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் நன்றியையும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறது.