பத்திரிகையாளர் மோசஸ் படுகொலைக்கு நியாயம் வேண்டும். அவர் குடும்பத்திற்கு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்

0
222

தமிழன் தொலைகாட்சியில் செய்தியாளராக பணியாற்றி வரும் மோசஸ் நேற்று இரவு அவருடைய வீட்டின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஏரி ஆக்கிரமிப்பு, கஞ்சா வியாபாரம் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து நேர்மையாகவும், தைரியமாகவும் மோசஸ் தொடர்ந்து செய்தி வெளிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்னர், சமூக விரோதிகள் சிலர் மோசசுக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். மிரட்டல் குறித்து மோசஸ் சார்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (08.11.2020) இரவு சுமார் 10.30 மணியளவில் மோசஸ் தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது, யாரோ சிலர் அவரிடம் வந்து பேசியுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் மோசசின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனே அவர் வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து பார்த்துள்ளனர். அப்போது, மோசஸ் வெட்டப்பட்டு கீழே விழுந்து கிடந்துள்ளார். அப்போது இரண்டுபேர் கத்தியுடன் அங்கிருந்து ஓடியதை மோசசின் தந்தை பார்த்துள்ளார்.

உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த மோசசை உடனே குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோசஸ் உயிரிழந்துள்ளார்.

தனது பணியை செய்த பத்திரிகையாளர் படுகொலை செய்யப்பட்டிருப்பது, ஜனநாயகத்தின் மீது விழுந்த மிகப்பெரிய சம்மட்டி அடி. பத்திரிகையாளர் மீது நடத்தப்பட்ட இந்த கொலை வெறித்தாக்குதல், அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்து சுதந்திர உரிமையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.

ஆகவே, மோசஸ் படுகொலைக்கு காரணமான ஒவ்வொரு நபரும் கண்டுபிடிக்கப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

அச்சுறுத்தல் தொடர்பாக ஏற்கனவே புகார் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த புகார் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது என்பது குறித்தும் விசாரிக்கப்பட வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

படுகொலை செய்யப்பட்ட மோசஸ் குடும்பத்திற்கு தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடயவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

பத்திரிகையாளர்களை பாதுகாக்க தமிழக அரசு ஒரு சிறப்புச் சட்டதை நிறைவேற்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்தி வருகிறது. இதுதொடர்பான ஒரு வரைவுச் சட்ட மாதிரி, அமைப்பின் சார்பாக தமிழக முதலமைச்சரிடம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. ஆகவே, இனியும் தாழ்த்தாமல் பத்திரிகையாளர் பாதுகாப்புச் சட்டத்தை தமிழக அரசு உடடினயாக நிறைவேற்ற வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்புகளும் ஒன்றிணைந்து கோரிக்கைகளை வென்றெடுப்போம் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அழைப்பு விடுக்கிறது.