பத்திரிகையாளரை தாக்க முற்பட்ட, மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசனின் அராஜக நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம்.

0
2

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முடிவுற்ற நிலையில், இன்று காலை (07.04.21) மிண்ணனு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கோவை அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் வைக்கப்பட்டு சீல் வைக்கும் பணி நடைபெற்றுள்ளது.

இதை பார்வையிடுவதற்காக, தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் அங்கு வந்துள்ளனர். அப்போது, கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசனும் அங்கு வந்துள்ளார். சீல் வைக்கும் பணி முடிவடைந்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து விட்டு அவர் அங்கிருந்து கிளம்பும்போது, சன் செய்திகள் தொலைகாட்சியின் செய்தியாளர் மோகன், அவர் வெளியே செல்வதை படம் பிடித்துள்ளார்.

தனது பணியை செய்த செய்தியாளர் மோகனை கமல்ஹாசனின் பாதுகாவலர்கள் தடுக்க முற்பட்டுள்ளனர். உடனே, தான் செய்தியாளர் என்று மோகன் அவர்களிடம் தெரிவித்துள்ளார். மோகன் கூறியதை கமல்ஹாசனும் கேட்டுளளார். இருந்தபோதும் கமல்ஹாசன், தனது ஊன்றுகோலை பயன்படுத்தி மோகனை தாக்க முற்பட்டுள்ளார். மோகன் சற்று விலகியதால் அவர் தாக்குதலிலிருந்து தப்பியுள்ளார். உடனே அருகிலிருந்த செய்தியாளர்கள் மோகனுக்கு ஆதரவாக குரல்கொடுக்கவே, கமல்ஹாசன் அந்த இடத்திலிருந்து வேகமாக புறப்பட்டுச் சென்றுள்ளார்.

செய்தி தொலைகாட்சிகள் ஒரு செய்தியை ஒளிபரப்புவதற்கு காட்சிகள் மிகவும் அவசியம். அந்த வகையில், கமல்ஹாசன் புறப்பட்டுச்செல்லும் காட்சியை மோகன் படம் பிடித்தது எந்த வகையில் தவறாகும்?

சன் செய்திகள் தொலைகாட்சியின் கோவை மாவட்ட செய்தியாளராக பணியாற்றும் மோகனை, பல்வேறு இடங்களிலும், பத்திரிகையாளர்கள் சந்திப்பிலும் கமல்ஹாசன் பார்த்துள்ளார், அவருடைய கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளார். ஆகவே, மோகன் ஒரு பத்திரிகையாளர் என்பதை தெரிந்திருந்தும் கமல்ஹாசன் அவரை தாக்க முற்பட்டிருப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒருவேளை, பொதுமக்கள் ஒருவர் கமல்ஹாசனை இவ்வாறு படம் பிடித்திருந்தாலும் கூட, கமல்ஹாசன் அவருக்கு எதிராக இவ்வாறு நடந்திருந்தாலும் அது தவறுதான்.

ஆகவே, தனது பணியை செய்த செய்தியாளரை தாக்க முற்பட்ட கமல்ஹாசன், செய்தியாளர் மோகனிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

கமல்ஹாசனின் இந்த அராஜக நடவடிக்கையை அனைத்து ஊடகவியலாளர்களும், ஊடக அமைப்புகளும் கண்டிக்க வேண்டும் என்று மாற்றதிற்கான ஊடகவியலளார்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.