கொரோனாவால், தொடரும் பத்திரிகையாளர்கள் உயிரிழப்பு. ஊடக நிறுவனங்களின் லாபத்திற்கும் தொழில் போட்டிக்கும் பத்திரிகையாளர்கள் பலி ஆவதா? தமிழக அரசு உடனடியாக தலையிட மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் கோரிக்கை.

0
2

கொரோனா இரண்டாம் அலை கோரத் தாண்டவமாடிக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், நாம் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் நமக்கு நெருங்கியவர்களை இழந்துள்ளோம். இந்த இழப்புகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

கொரோனாவை கட்டப்படுத்த தமிழக அரசு முழு அடைப்பை அமல் படுத்தியிருந்தாலும், கொரோனா தொடர்பான தகவல்களையும், விழிப்புணர்வுகளையும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும், அரசின் அறிவிப்புகளை மக்களிடம் சேர்க்கவும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசு தவறவிடும் விஷயங்களை சுட்டிக்காட்டுவதற்கும் பத்திரிகையாளர்கள் செயல்பட வேண்டிய தேவை உள்ளது. இதையாரும் மறுக்க முடியாது. இந்த கடமையைச் செய்வதற்காக செய்தியாளர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்து வருகின்றனர்.

ஆகவே, களத்தில் சென்று செய்தி சேரிக்கும் பத்திரிகையாளர்களை பாதுகாக்க வேண்டியது நிறுவனங்களின் கடமை. அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதும், போதுமான ஓய்வை வழங்குவதும், வேலை நேரத்தை குறைப்பதும் மிகவும் முக்கியம். அதேபோல், கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ள பகுதிக்குச் சென்று பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை அனுப்புவதை தவிர்ப்பது அதை விட மிக மிக முக்கியமான பாதுகாப்பு நடவடிக்கையாகும்.

ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள், பத்திரிகையாளர்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படையான பாதுகாப்பு அம்சங்களான கிருமிநாசினி, முகக் கவசத்தை கூட வழங்குவதில்லை. அதேபோல், அவர்களுக்கு போதிய ஓய்வும் வழங்குவதில்லை. பத்திரிகையாளர்களை சுழற்சி முறையில் பணிக்கு வரச் சொல்லும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதில்லை. மேலும், பத்திரிகையாளர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்து தருவதில்லை. இதற்கெல்லாம் மேலாக, கொரோனா பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்குச் சென்று, செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்களை நிறுவனங்கள், சிறிதும் மனசாட்சியின்றி வற்புறுத்தி வருவதாக பத்திரிகையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த பத்து நாட்களில் தமிழகத்தித்தில் நான்கு பத்திரிகையாளர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், நிறுவனங்கள் தங்களின் போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால், இந்த உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

ஆகவே, பத்திரிகை நிறுவனங்கள் கீழ்காணும் நடவடிக்கைகளை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

1)            கொரோனா பெருந்தொற்றிலிருந்து பத்திரிகையாளர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு தேவையான உபகரணங்கள் அனைத்தையும் உடனே வழங்க வேண்டும்.

2)            பத்திரிகையாளர்களின் பணி நேரத்தை குறைத்து, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.

3)            பத்திரிகையாளர்களை சுழற்சி முறையில் பணி செய்ய அனுமதிக்க வேண்டும்.

4)            பத்திரிகையாளர்கள் தங்களை தனிமைப் படுத்திக்கொள்வதற்கு ஏதுவாக, தங்குமிடம் வழங்கும் ஏற்பாட்டைச் செய்ய வேண்டும்.

5)            பத்திரிகையாளர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டால், எந்தவித கேள்வியுமின்றி, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கி, அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதற்கான ஏற்பாட்டை செய்வதுடன், அவர்களது மருத்துவ சிகிச்சைக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

6)            எந்த ஒரு சமயத்திலும், கொரோனா தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள ஆபத்தான இடங்களுக்கு பத்திரிகையாளர்களை அனுப்பவே கூடாது.

7)            இதுவரை, பணியாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், மருத்துவக் காப்பீடு வழங்காத நிறுவனங்கள், இனியும் தாமதிக்காமல் உடனே வழங்க வேண்டும்

அரசுக்கு முன்வைக்கப்படும் கோரிக்கைகள்.

1)            பத்திரிகையாளர்கள் சந்திப்புகள் அனைத்தையும் காணொலி வாயிலாக நடத்த வேண்டும்.

2)            கொரோனா சிகிச்சை மையங்களில் ஆய்வு மேற்கொள்ளும் அமைச்சர்களும், அதிகாரிகளும், பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு விடுக்காமல் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.

3)            பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு தடுப்பு மருந்து அளிக்கும் சிறப்பு முகாமை உடனடியாக தொடங்க வேண்டும்.

4)            கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் பத்திரிகையாளர்களுக்கும் அவ்ரகளின் குடும்பத்தினருக்கும் சிகிச்சை அளிக்க சிறப்பு சிகிச்சை மையத்தை உடனடியாக தொடங்க வேண்டும்.

5)            ஏற்கனவே கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு, முன்களப் பணியாளர்கள் என்ற அடிப்படையில் 25 லட்சம் ரூபாய் நிதியை உடனடியாக வழங்க வேண்டும்.

மேற்காணும் கோரிக்கைகளை பத்திரிகை நிறுவனங்களும், அரசும் உடனடியாக நிறைவேற்றி, இனி ஒரு பத்திரிகையாளர் கொரோனாவால் பாதிக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

நிறுவனங்கள் அலட்சியம் மற்றும் பொறுப்பற்ற தன்மையினால் பத்திரிகையாளர்கள் பாதிக்கப்படும்பட்சத்தில், அந்த நிறுவனங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை (Culpable homicide) எடுக்க மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தயங்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.