இஸ்ரேலின் பெகசிஸ் ஸ்பைவேர் மூலம் பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் இறையாண்மையையும், அரசில்சாசன உரிமையையும் உறுதி செய்ய, யார் வேவு பார்த்தது என்ற உண்மை வெளிப்பட வேண்டும்.

0
3

இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ குரூப் என்ற நிறுவனத்தின் தயாரிப்பான பெகசிஸ் என்று அழைக்கப்படும் ஸ்பைவேர் (உளவு மென்பொருள்) மூலம் பத்திரிகையாளர்கள், செயல்பாட்டாளர்கள் உட்பட பலரும் உளவு பார்க்கப்பட்டதாக ஒரு அதிர்ச்சியளிக்கும் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

பிரான்சை சேர்ந்த ஃபர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் ஆம்னெஸ்டி இண்டர் நேஷனல் என்ற சர்வதேச மனித உரிமை அமைப்பிற்கு கிடைத்த சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்களை, உலகத்தின் தலை சிறந்த 16 பத்திரிகை நிறுவனங்கள் ஒன்றிணைந்து ஆராய்ந்ததுடன், அது தொடர்பாக புலன் விசாரணையை நடத்தியுள்ளனர்.

இந்த விசாரணையின் முடிவில், என்எஸ்ஓ குரூப் நிறுவனம் தயாரித்துள்ள, பெகசிஸ் என்ற ஸ்பைவேரை பயன்படுத்தி, இந்தியாவில் சுமார் 40 பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர், பத்திரிகையாளர்கள் வேவு பார்க்கப்பட்டள்ளனர்.

கண்காணிக்கப்பட்டோரின் பட்டியலில், டெல்லியில் இருந்து செயல்படும் முக்கிய பத்திரிகையாளர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர். அதில், உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா மற்றும் நிகில் எனும் தொழிலதிபருக்கும் இடையே நடந்த ஒப்பந்தங்கள் பற்றி செய்தி வெளியிட்ட தி வயர் இணையதளத்தைச் சேர்ந்த் ரோகிணி சிங், அந்த இணையதளத்தின் நிறுவனர்கள் சித்தார்த் வரதராஜன் மற்றும் எம்.கே.வேணு, தி வயர் இணையதளத்திற்கு எழுதிவரும் தேவிரூபா மித்ரா, பிரேம்குமார் ஜா மற்றும் ஸ்வாதி சதுர்வேதி, ரஃபேல் விமான ஊழல் பற்றி தொடர்ச்சியாக எழுதி வந்த தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையைச் சேர்ந்த் சுஷாந்த் சிங், கல்வி மற்றும் தேர்தல் ஆணையம் தொடர்பான செய்திகளை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் எழுதி வரும் ரித்திகா சோப்ரா, காஷ்மீர் தொடர்பான செய்திகளை எழுதிவரும் முசாமீல் ஜமீல் ஆகியோர் இடம் பெற்றிப்பதாக தெரியவந்துள்ளது.

பெகசிஸ் ஸ்பைவேர் குறித்து கருத்து தெரிவித்துள்ள என்எஸ்ஓ குரூப் நிறுவனம், அந்த மென்பொருளை தனியாருக்கோ, தனி நபருக்கோ தாங்கள் விற்பதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளது. அதேபோல், நம்பகமான அரசுகளுக்கு மட்டுமே அதை விற்பதாகவும், தீவிரவாதத்தை தடுப்பதற்கும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்குமே பெகசிஸ் ஸ்பைவேர் பயன்டுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

என்எஸ்ஓ நிறுவனத்தின் இந்த கருத்து, பெகசிஸ் ஸ்பைவேர், அரசுகளுக்கு மட்டுமே விற்கப்படுவதை உறுதி செய்துள்ளது. அப்படியிருக்கும்போது, அது உண்மையென்றால், இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்களை பெகசிஸ் ஸ்பைவேரை பயன்படுத்தி அரசை தவிர வேறு யார் வேவு பார்த்திருக்க முடியும்?

ஆனால், ஒன்றிய அரசு பத்திரிகையாளர்களை உளவு பார்க்கவில்லை என்று கூறியுள்ளது. அப்படியென்றால் யார் உளவு பார்த்தது? மற்றொரு நாட்டை சேர்ந்த அரசா? அப்படி நடந்திருந்தால் இது நாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இல்லையா? இதை கண்டுபிடிக்க வேண்டியது அரசின் கடமை இல்லையா?

ஆகவே, நாங்கள் வேவு பார்க்கவில்லை என்று கூறிவிட்டு இந்த விவகாரத்திலிருந்து விலகிவிடாமல், யார் வேவு பார்த்தது என்பதை கண்டுபிடிக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை. அந்த கடமையை நிறைவேற்றுவதன் மூலம், இந்தியாவின் இறையாண்மையையும், அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் ஒன்றிய அரசை வலியுறுத்துகிறது.