பத்திரிகையாளர்களை அச்சுறுத்தும் வகையில் அவதூறு பரப்பி வரும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

0
2

ஜனநாயகத்தின் அடிநாதமான பத்திரிகை துறையும் அதில் பணியாற்றும் பத்திரிகையாளர்களும், தீவிர வலதுசாரியினராலும், சமூக விரோதிகளாலும், சாதி வெறியர்களாலும் அச்சுறுத்தலுக்குள்ளாவது கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, டைம்ஸ் ஆஃப் இந்தியா பத்திரிகையின் ஆசிரியர் அருண்ராம் மற்றும் நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியின் செய்தியாளர் தேவேந்திரன் தற்போது சாதி வெறியர்களால் குறிவைக்கப்பட்டுள்ளனர்.

அருண் ராம், தேவேந்திரன் மற்றும் சில அரசியல் கட்சி தலைவர்கள், இயக்கங்களின் தலைவர்களின் படங்களை வெளியிட்டு, அவர்கள் அனைவரும் வன்னியர்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று, சிலர் டிவிட்டர் உட்பட சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அத்துடன், செய்தியாளர் தேவேந்திரனுக்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கில், அவர் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை சுவரொட்டியாக தயாரித்து, பல இடங்களில் ஒட்டியுள்ளனர்.

அருண்ராம் மற்றும் தேவேந்திரன், செய்தியாளர்கள் என்ற அடிப்படையில், அவர்கள் வெளியிட்ட செய்தியின் காரணமாக, சில சமூக விரோதிகளால் குறிவைக்கப்பட்டிருப்பது, அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும்.

கடந்த ஆண்டு, இதேபோல் தீவிர வலதுசாரிகள், சமூக விரோதிகளுடன் கைகோர்த்துக்கொண்டு, பத்திரிகையாளர்களுக்கு எதிராக பரப்பிய அவதூறும், அதன் காரணமாக பத்திரிகையாளர்கள் பலரை ஊடக நிறுவனங்கள் பணிநீக்கம் செய்ததையும் அறிவோம். அதேபோன்றதொரு நோக்கத்தில், தற்போது பத்திரிகையாளர்களுக்கு எதிராக மீண்டும் அவதூறு பிரச்சாரத்தை சாதிவெறிக் கும்பல் கையில் எடுத்துள்ளது.
ஆகவே, தமிழக அரசும், காவல்துறையும் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறு பரப்பிவரும் சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

கடந்த காலத்தில், இதேபோன்ற அவதூறு பரப்பப்பட்டபோது, பத்திரிகையாளர்களை அவர்கள் சார்ந்த நிறுவனங்கள் கைவிட்டதுபோல் இல்லாமல், பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு நிறுவனங்கள் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

பத்திரிகையாளர்களின் குரல்வளையை நெறிக்கும் நோக்கத்தில், சமூக விரோதிகளும், சாதி வெறிக் கும்பலும், தீவிர வலதுசாரிகளும் இதுபோன்ற செயலை வாடிக்கையாக வைத்துள்ளனர். ஆனால், அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க தவறியதால், அவர்கள் தைரியமாக தொடர்ந்து இதுபோன்ற அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆகவே, இந்த அச்சுறுத்தல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒன்றிணைந்து அவதூறு பரப்புபவர்கள் மீது, அரசு உரிய நடவடிக்கை எடுக்க குரல் கொடுக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அழைப்பு விடுக்கிறது.