Wednesday, November 18, 2020

MISSION / பணிகள்

     அன்றாடம் நடக்கும் நிகழ்வுகள் செய்தியாக மக்களை சென்றடைகின்றன. அந்த செய்திகளுக்குப் பின்னால் உள்ள அரசியலை மக்கள் புரிந்துகொள்ளும்போது மட்டுமே சமூகத்தின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகின்றது. ஆனால், இந்த அரசியல் பெரும்பாலும் மக்களை சென்றடைவதில்லை. இந்த குறையை நிறைவு செய்ய, நிகழ்வுகளுக்குப் பின்னால் உள்ள அரசியலை முதலில் ஒவ்வொரு செய்தியாளனும் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இதை உறுதிப்படுத்துவதே, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் நோக்கம். இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், பத்திரிகையாளர்கள் தங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் செய்துகொள்வதற்கும், ஆரோக்கியமான விவாதங்களை நடத்துவதற்குமான தளத்தை, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் ஏற்படுத்தித் தருகின்றது.

அரசியல் புரிதல், சமூகத்தின் நிகழ்வுகளுக்கு சரியானவகையில் எதிர்வினையாற்றுவதில் முடிவடையும் என்ற வகையில், நம்மை பாதிக்கும் நிகழ்வுகளுக்கு, ஊடகவியலாளர்களுக்கான அமைப்பு என்ற தளத்தில் நின்று, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் எதிர்வினையாற்றி வருகின்றது.

தாங்கள் பணிசெய்யும் துறையில், சக பணியாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கும், பணிச்சூழலை பாதிக்கும் நிகழ்வுகளுக்கும், அந்த குறிப்பிட்ட துறையில் பணிசெய்யும் ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்குரல் எழுப்புவது அவர்களின் சமூக கடமையாகும். இதை உணர்ந்து, ஊடகத்துறையில் பணியாற்றும் அனைவரின் நலனையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் ஈடுபட்டுவருகின்றது.

எந்ததுறையாக இருந்தாலும் அதில் பணியாற்றுபவர்களுக்கு சமூகபாதுகாப்பு உறுதி செய்யப்படும்போது மட்டுமே, பணியாளர்கள் தங்களின் சமூக கடமைகள் அனைத்தையும் முழுமையாக மேற்கொள்ள முடியும். இதன்படி, பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் சமூக பாதுகாப்பை உறுதிசெய்யும் திட்டங்களை நடைமுறைபடுத்துவதை, தனது எதிர்கால இலக்காக்கொண்டு, மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் செயல்பட்டு வருகின்றது.

VISION / இலக்கு

          ஒட்டுமொத்ததில், ஊடகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட சூழலை உருவாக்குவதும், சமூக அக்கறைகொண்ட, திறன் படைத்த ஊடகவியலாளர்களை உருவாக்குவதுமே மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் லட்சியமாகும்.