“வைகோவின் அந்த பேச்சு “

0
914

” வைகோவின் அந்த பேச்சு ”

சமூக வலைதளங்களிலும் சரி, நிஜ உலகிலும் சரி, ஒருசேர கடும் எதிர்புகளை சந்தித்த ஒரு பேச்சு வைகோவிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது. இது ஒன்றும் முதல்முறையில்லை, என்றாலும் இந்த பேச்சை வைகோ ’தன் வாழ்நாள் குற்றமாக’ வருந்தும் அளவிற்கான் கண்டனத்திற்குரிய பேச்சு அது.

அதிலும், என்னதான் நேரலையில் வைகோவின் அந்த பேச்சு வந்தாலும் தொடர்ச்சியாக வெளிவரவில்லை. நியூஸ்7தமிழ், புதிய தலைமுறை என பெரும்பாலும் நேரலை செய்த தொலைக்காட்சிகள் அந்த நேரலையை குறிப்பிட்ட நேரத்திலேயே முடித்துக்கொண்டன. கேப்டன் டிவியில் முழுவதும் நேரலையாக வந்ததென அறிகிறேன். தனிப்பட்ட முறையில் வைகோவின் அந்த பேச்சை முழுவதும் கேட்கவில்லை. காரணம் வரலாற்றை நினைவுகூர்ந்து கொண்டிருந்தார் அவர்.

பெரும்பலும் வைகோவின் அந்தபேச்சை வெகுமக்கள் கேட்டிருக்க வாய்ப்பில்லாத அந்த சூழலில் ஃபேஸ்புக் மூலமே அந்த செய்தி முதலில் வெளிப்பட்டிருக்க கூடும். வைகோவின் அந்த பேச்சை முழுமையாக கேட்டிருக்க வாய்ப்பில்லாத நபர்கள் கூட வைகோவின் அந்த பேச்சிற்கு கண்டனங்கள் தெரிவித்து சமூக வலைதளங்களில் பொங்கி கொண்டிருந்தனர். அத்தகைய சமூக நீதி ”பொங்கலில்” வைகோவின் அந்த பேச்சு உள்ள ஏதாவது ஒரு லிங் இருந்தால் கொடுங்களேன் என்று பலரும் கதறிக்கொண்டிருந்தனர்.

சமூக வலைதள பதிவிடல் போராட்டத்தில் பங்கு பெறவேண்டும் என்ற அவர்களின் அவசரம் புரிந்தாலும், அதில் உள்ள பாங்கு சிறந்தது. அதேநேரம் உடனடியாக யாருக்கும் லிங்க் கிடைக்கவில்லை. வைகோவிற்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்ட சிலருக்கு கூட அந்த லிங்க் கிடைக்காதது தான் அந்தோ பரிதாபம்.

விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்று சிலர் சொல்லி கேட்டிருக்கிறேன். விடா முயற்சியெல்லாம் இல்லை. சும்மா. இவ்வளவு பேர் இதப்பத்தியே பேசுறாங்களே. வைகோ திராவிட இயக்கத்தவராச்சே. இப்படி சொல்ல வாய்ப்பில்லையே. ஒருவேளை வேற எதாவது சொல்லப்போய் இப்படி புரிந்து கொள்ளப்பட்டதா ?. சரி என்னதா சொல்லிருக்கார்னு பார்ப்போமே என்ற ஒரு அவா. தேடினேன். ரெட் பிக்ஸ்ல 40 நிமிட சொச்சமுள்ள வீடியோ லிங்க் இருந்தது. ப்ளே பன்னுவதற்கு முன்பு ஒரு தயக்கம் வேறு. ஒரு காலத்தில் எனது ஆதர்ச நாயகன் வைகோ. அவரது பேச்சை கால்கடுக்க நின்று பலமுறை கேட்டவன். சிலமுறை வைகோ வருவதற்கு முன்பே சென்று அமர்ந்து அவருக்காய் காத்திருந்தவன். இப்போது அவரது பேச்சை கேட்பதற்கு சிறுதயக்கம்.

ஓ இதுல எந்த இடத்துல அந்த பேச்சு இருக்குன்னு தெரியாது. ஓட்டி ஓட்டி பார்த்தால் அந்த பேச்சு மிஸ்ஸாக வாய்ப்பு உள்ளது என்பதால் முழுமையாக பார்க்கவேண்டும். வேறுவழியே இல்லை. பார்த்தேன். கிரேக்கமோ, லத்தினோ, திராவிட இயக்க வரலாறோ அவர் பேசவில்லை. திமுகவின் வஞ்சம், கருணாநிதியின் நயவஞ்சகம் என்று தான் நீண்டது அந்த பத்திரிகையாளர் சந்திப்பு. சாதிய ரீதியிலான பேச்சிற்கு முன்பே கூர்ந்து கவனிக்கபடவேண்டிய பலவற்றை அவர் பேசிவிட்டார்.

அதில் முக்கியமானது, 2004 நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது கோபியில் தன்பேச்சிற்கு திரண்டிருந்த கூட்டம் குறித்து ஈவிகேஎஸ் இளங்கோவன், ஜெயலலிதாவிற்கும், கருணாநிதிக்கும் கூட இவ்வளவு கூட்டம் வரலைன்னு சொன்னார் என்றும், ஆனால் இப்போது அவர் மறுப்பார் என்றும் சொன்னார். அது வரை பரவாயில்லை. அதற்கடுத்து ஒன்று சொன்னார். ”அவர் அரசியல்வாதில்ல மறுப்பார். அதுவும் சரியான அரசியல்வாதி ” ஒரு மூத்த அரசியல்வாதியாய், ஒருகட்சியின் தலைவராய், ஒரு கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராய் இருந்து கொண்டு அரசியலின், அரசியலில் உள்ளவர்களின் கண்ணியத்தை கெடுக்கும் விதமான பேச்சு. ஒருவேளை இதுதான் தற்போதைய அரசியலின், அதில் உள்ளவர்களின் நிலை என்று அதில் அங்கம் வகிக்கும் வைகோ அப்ரூவராக எத்தனிக்கிறாரோ என்ற எண்ணமும் வலுப்பெறுகிறது.
கருணாநிதி எந்தெந்த கட்சிகளையெல்லாம் உடைத்தார் என்று சொல்லிவிட்டு ”கலைஞர் தொழில் கெட்டிக்காரத்தொழில் அவர் மகன் கத்துக்குட்டி, ஒன்னும் தெரியாது அந்தப்பையனுக்கு “ என்றதன் மூலம் கட்சியை உடைப்பதை கெட்டிக்காரத்தனம் என்று அவர் ஏற்றுக்கொள்வது போல் உள்ளதே. அவரது மகன் கத்துக்குட்டி என்றதன் மூலம் இன்னும் ஸார்ப்பாக கட்ச்சியை உடைக்க அவர் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தூண்டுவது போல் உள்ளதே.
அதன் பிறகு ஆதாரம் என்ற பெயரில் அந்த ஊரில இருக்குற அவருக்கு நெருக்கமான, முன்னெப்போதோ போட்டியிட்ட அவருக்கு பெண் எடுத்த இன்னொரு ஊரோட மாமனாரோட ன்னு ஒரு புதிர் போட்டி நடத்திவிட்டே சர்ச்சையை கிளப்பிய பேச்சிற்கு வந்தார்.
முன்னதாக ”கட்சியை இப்படி உடைப்பதற்கு பதிலா விஜயகாந்துக்கு ”பாலில்” விசத்த வச்சிறுக்கலாம், சோத்துல விசத்த போட்ருக்கலாம். போடுவீங்க நீங்க’ ன்னு ஒரு போடு போட்டார்.
உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற தொழில், ஆதித்தொழில், சட்டபூர்வமாக்க வேண்டும் என்று பலரும் கேட்டுக்கொண்டிருக்கும் தொழில், அந்த தொழில செய்யலாம். கலைஞரும் செய்யலாம் இவங்களும் செய்யலாம்” என்றார் வைகோ. பாலியல் தொழிலைத்தான் சொல்கிறார் என்பது நிச்சயம் குழந்தைகளுக்கு புரிந்திருக்காது. ஆனால் அதை சமாளிக்க அடுத்து ஒன்றை சொன்னார். இப்போது வரை அது மட்டுமே சர்ச்சையாக்கப்பட்டுள்ளது.

”நான் ஒன்னும் தப்பா சொல்லலைங்க. அவருக்கு நாதஸ்வரம் வாசிக்க தெரியும். அதத்தான் சொன்னேன்.” என்று வைகோ சொன்னது மிகப்பெரும் சர்ச்சையை கிளப்பி அந்த பேச்சின் மற்றதை மறைத்துவிட்டது. நான் தப்பா சொல்லைலனு வைகோ சொன்னது அவரது வாழ்நாள் தவறானது.

இதற்கு பிறகு இஸ்லாமியர்களை திமுகவிற்கு எதிராய் திருப்பிவிடும் வேலையை மேற்கொண்டார். எவரோ ஒருவர் ”நபிக்கு பிறகு கலைஞர் தான் இஸ்லாமியர்களை காப்பதாய்” சொன்னதை, சொன்னதோடு இல்லாமல், இறுதி தூதர் நபிக்கு பிறகு வேறொருவரை அடையாளப்படுத்தியதர்க்காய் நடந்த யுத்தங்களையும், ரத்த களறிகளையும், நபி குறித்த சர்ச்சைக்குறிய திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்புகளை குறித்தும் நினைவூட்டினார். அதன் பிறகு மேரிமாதாவாக ஜெயலலிதா சித்தரிக்கப்பட்டதை குறித்தும் விசனப்பட்டர்.

இடையிடையே சிறுதாவூர், மீத்தேன், 2ஜி, ஊழல்ன்னு சிலவற்றுக்கும் அவரது பேச்சில் இடம் கிடைத்து.

இறுதியாக் ஒரு பாட்ட கேட்டுட்டு போங்கன்னு அவருபாட்டுக்கு போக இருந்தார். செய்தியாளர்கள் கேள்வி கேட்கனும்னு சொல்லவும் நின்றார். ஒவ்வொரு கேள்விக்கும் எந்த மீடியா என்று கேட்க தவறவில்லை. அவ்வப்போது பாலிமர் தொலைகாட்சியை குறிப்பிட மறக்கவில்லை. ஒரு பத்திரிகையாளனை நிறுவனம் கொண்டு அடையாளப்படுத்துவதை வைகோவும் அந்தப் பேச்சில் செய்தார்.
நாவண்மை வைகோவின் அந்தப்பேச்சில் நா வனமம் மிகுந்திருந்தது.
பின்குறிப்பு :
வைகோவின் அந்த பேச்சில் சிபிஐ, சிபிஐ(எம்), வி.சி தோழர்கள் உடனிருந்தனர்.
சர்ச்சையான சிலமணி நேரங்களிலேயே சாதி குறித்த தமது பேச்சிற்கு வைகோ மன்னிப்பு கேட்டார்.