“வேலை நீக்கம், சம்பளப் பிடித்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை” என்பதில் உறுதியாய் இருப்போம். மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் ‘மே’ தின அறைகூவல்.

0
758

அன்பார்ந்த நண்பர்களே,

கொரோனா எனும் பெருந்தொற்று உலகையே உலுக்கி வருகிறது. நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் என அனைத்து உழைக்கும் தளங்களும் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலையின்றி வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். தாங்கள் வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்த சேமிப்பு, இந்த 40 நாட்களை கடத்துவதற்குக் கூட போதாது என்பதை அவர்கள் அறிந்துகொண்டனர். நாளை, உலகமே அழியப்போவதாக அறிவிப்பு வந்தாலும், எஞ்சியுள்ள 24 மணி நேரத்தில் எப்படி லாபம் சம்பாதிப்பது என்பதே முதலாளிகளின் நோக்கம் என்பதையும் கண்கூடாக தெரிந்துகொண்டனர்.

இந்த நெருக்கடியான நிலையில், தொழிலாளர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யாதீர்கள், தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்காதீர்கள் என்று அரசுத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால், அது நமக்கில்லை என்பதுபோல, “இன்று முதல் நீங்கள் வேலையை விட்டு நீக்கப்படுகிறீர்கள்” என்றும் “ஊரடங்கை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. வேலைக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது” என்றும் “அடுத்த மாதம் முதல் உங்களுக்கு சம்பளம் குறைக்கப்படுகிறது” என்றும், நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் கூறி வருகின்றன. தன்னுடைய கோரிக்கை செவிடன் காதில் விழுந்த சங்காக மாறியதை அறிந்தும், அரசுத் தரப்பிலிருந்து இதற்கு எதிராக எந்த ஒரு அழுத்தமும் தரப்படவில்லை. அப்போதுதான் புரிகிறது அந்த வேண்டுகோள் வெறுமனே கண்துடைப்பென்று.

ஊரடங்கு காலத்தில் மக்களுக்காக பணியாற்றுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மற்றொரு கோரிக்கையை அரசு முன்வைத்தது. ஆனால், அதுவும் எங்களுக்கில்லை என்பதுபோலத்தான் செயல்படுகின்றன பெரும்பாலான நிறுவனங்கள்.  முகக்கவசம், கிருமிநாசினி, கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்களைக் கூட வழங்க மறுத்துள்ளன. அப்படி வழங்கினாலும், அது போதுமானதாக இல்லை. எங்கள் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என்று கேட்ட சில பணியாளர்களை, உத்தரவை மதிக்க தவறுனீர்கள் என்று குற்றம்சாட்டியுள்ளது ஒரு நிறுவனம். அதிகாரத் திமிறில் அவர்களிடம் விளக்கக் கடிதம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளது அந்த நிறுவனம். அதே நிறுவனத்தில், மேல் மட்டத்தில் நிகழ்ந்த அரசியல் விளையாட்டு கீழ் மட்டத்தில் பணியாற்றும் இரண்டு தொழிலாளர்களை பலி வாங்கியுள்ளது. மேலிடம், தங்களுக்குள் உள்ளப் பகையை கணக்கு தீர்த்துக்கொண்டதில், இரண்டு தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். அவர்கள் என்ன செய்வார்கள், அவர்களின் குடும்பம் என்ன செய்யும் என்பது பற்றியெல்லாம் அந்த நிறுவனத்திற்கென்ன கவலை?

எந்த ஒரு கூச்சமும் இல்லாமல், இந்த மாதம் முதல் உங்கள் சம்பளத்தில், இத்தனை சதவீதம் குறைக்கப்படும் என்று கூறியுள்ளது ஒரு பிரபல வார இதழ். இத்தனை நாளாக தொழிலாளர்கள் உழைத்ததில் உருவான உபரியில், ஒருப் பகுதியை, இப்படிப்பட்ட ஒரு இக்கட்டான சமயத்தில் கூட செலவழிக்க தயாராக இல்லை அந்த நிறுவனம்.

வாடகை தொடங்கி வங்கித் தவணை தொட்டு, வீட்டு செலவுகள் வரை அனைத்தும் மாதத்தின் முதல் வாரத்தில் ஒன்றாய் வந்து நிற்கும். சம்பளம் தாமதமானால் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும். இதை அறிந்து, பல பெரிய நிறுவனங்களும் கூட மாதத்தின் மத்தியப்பகுதி வரை சம்பளம் கொடுக்காமல் இழுத்தடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளன. ஊரடங்கு நடைமுறையில் உள்ள இந்தக் காலத்தில், அத்தியாவசியப் பொருட்களை முன் கூட்டியே வாங்கி வைக்க வேண்டிய தேவை உள்ளது. ஆகவே, இந்த மாதம் உரிய நேரத்தில் சம்பளம் கிடைத்து விடும் என்று நம்பியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. உனக்கு என்ன நேர்ந்தால் எனக்கென்ன? நான் செய்வதைத்தான் செய்வேன் என்பதுபோல ஏப்ரல் மாதத்திலும் சம்பளத்தை இழுத்தடித்துள்ளன சில நிறுவனங்கள்.

 

வீட்டில் கைக்குழந்தை உள்ளது, விடுமுறை வேண்டும் என்று கேட்டவர்களை வீட்டிலேயே இருந்துகொள்ளுங்கள், உங்களுக்கு இனி வேலை இல்லை என்று கூறியுள்ளது ஒரு நிறுவனம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டவர்களை பார்த்து சிரித்துள்ளார் ஒரு முதலாளி. நிறுவனத்தை இடைக்காலமாக மூடும் நிலை வந்துவிடும் என்பதற்காக, பணியாளர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டதையே கொஞ்சமும் மனசாட்சியின்றி மறைக்க முற்பட்டுள்ளார் ஒரு முதலாளி.

பத்திரிகையாளர்களின் ஊதியத்தை நிர்ணயிக்கும், ஊதிய நிர்ணயக்குழுவின் பரிந்துரையை பத்திரிகை நிறுவனங்கள் அனைத்தும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறது உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம். ஆனால், நிறுவனங்களோ, சட்டத்தில் உள்ள ஓட்டையை பயன்படுத்தி, ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி ஒரு சில பணியாளர்களுக்கு மட்டும் சம்பளம் வழங்கிவிட்டு, பெரும்பாலானவர்களுக்கு மிகக்குறைந்த சம்பளத்தையே வழங்குகின்றன. சில நிறுவனங்கள் இந்த பரிந்துரையை சல்லிக்காசுக்கு கூட மதிப்பதில்லை. இதன் உச்சமாக, சட்டப்படி அமைக்க வேண்டிய ஊதிய நிர்ணயக்குழுவை அமைப்பதற்கே போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் பத்திரிகையாளர்கள்.

செய்தி தொலைக்காட்சிகளோ, உழைக்கும் பத்திரிகையாளர்கள் சட்டம் தங்களுக்கு பொருந்தாது என்பதுபோல் ஊதிய நிர்ணயக்குழுவின் பரிந்துரைகள் பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை. காட்சி ஊடகங்கள் தொடங்கப்பட்டு கால் நூற்றாண்டு கடந்த பிறகும்கூட, அவற்றையும் உள்ளடக்கும் வகையில் உழைக்கும் பத்திரிகையாளர் சட்டம் இதுவரை திருத்தப்படவில்லை.

இப்படிப்பட்ட சூழலில்தான், ஊரடங்கு காலத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுக்க, முதலாளிகளை வற்புறுத்தக் கூடாது என்று பரிந்துரைத்துள்ளது நாடாளுமன்ற நிலைக்குழு. ஆனால், இந்த பரிந்துரை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னரே அது நடைமுறைக்கு வந்துவிட்டது என்பதுதான் உண்மை. தொழில் தகராறு சட்டப்படி, 100 தொழிலாளர்களுக்கு மேல் பணியாற்றும் நிறுவனங்கள், தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதற்கும் அல்லது நிறுவனத்தை மூடுவதற்கு அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்ற நிபந்தனையை, 300 தொழிலாளர்கள் என்று மாற்ற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது நாடாளுமன்ற நிலைக்குழு. இந்த பரிந்துரை நடைமுறைக்கு வந்தால், 299 தொழிலாளர்கள் பணியாற்றும் நிறுவனம், எந்த ஒரு தொழிலாளரையும், வேலையை விட்டு நீக்கலாம், எந்தவித இழப்பீடும் கொடுக்காமல் நிறுவனத்தை மூடிவிட்டு செல்லலாம். இது சட்டப்படி குற்றமாக கருதப்படாது. இந்த பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால் பத்திரிகையாளர்களின் பணிப் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். ஏனென்றால் பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்களில் 300க்கும் குறைவானவர்களே பணியாற்றுகிறார்கள்.

தொழில் தகராறு சட்டம் தற்போதைய நிலையில் தொடரும்போதே, அதை மதிக்காமல் பத்திரிகை துறையில் பணிநீக்கங்கள் வெகு சாதாரணமாக நிகழ்கின்றன.  எந்தவித முன்னறிவிப்பும் இன்றி நிறுவனங்கள் மூடப்படுகின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் பலர் தொழிலாளர் நல ஆணையத்திலும், தொழிலாளர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துவிட்டு தீர்ப்பிற்காக காத்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்டால், தற்போதுள்ள பெயரளவிலான பணி பாதுகாப்பையும் கூட பத்திரிகையாளர்கள் இழக்க நேரிடும்.

8 மணிநேர வேலை என்பது தொழிலாளர்களின் அடிப்படை உரிமையாகும். நூற்றாண்டாக போராடி பெற்ற இந்த உரிமையை நீர்த்துப்போகச் செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது மத்திய அரசு. 8 மணி நேர வேலையை உறுதி செய்யும் சட்டம் நடைமுறையில் இருக்கும்போதே அதை பெரும்பாலான நிறுவனங்கள் பின்பற்றுவதில்லை. ஒரு செய்தி தொலைகாட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள், கண்டிப்பாக 10 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என்று சட்டத்திற்குப் புறம்பாக உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பல செய்தி நிறுவனங்கள் 8.30 மணிநேர வேலை, 9 மணிநேர வேலை என்று பணிநேரத்தை உயர்த்தி வருகின்றன.

தொழில்துறை முடங்கியுள்ளதால், சம்பளத்தை குறைக்கிறோம் என்றும், தொழிலாளர்களை பணிநீக்கம் செய்கிறோம் என்றும் முதலாளிகள் கூறுகின்றனர். தொழில்துறை சிறப்பாக இருந்த காலத்தில் தொழிலாளர்கள் உழைத்துக் கொடுத்ததில் சேர்த்து வைத்துள்ள செல்வத்தின் ஒரு பகுதியை, இப்படிப்பட்ட இக்கட்டான காலத்தில் முதலாளிகள் ஏன் செலவு செய்யக்கூடாது? அது தொழிலாளர்களின் உழைப்பால் உருவாக்கப்பட்ட செல்வமல்லவா? தொழில்துறை மீளும்போது குறைந்துபோன அந்த உபரியை, மீண்டும் சேர்த்துக்கொள்ளலாம் என்று முதலாளிகள் ஏன் யோசிப்பதில்லை? இதை கேட்பது தொழிலாளர்களின் உரிமை என்று மேதின உறுதியேற்போம்.

தொழில்துறை முடக்கம் என்ற பெயரிலும், வேறு பல காரணங்களை கூறியும், வேலை நீக்கத்தையும், சம்பளக் குறைப்பையும் நியாயப்படுத்துவதை எதிர்ப்போம்.

வேலை நீக்கம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதில் உறுதியாய் இருப்போம்.

பெருந்தொற்றுக்கிடையே பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனைத்து வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து தர நிறுவனங்களை வலியுறுத்துவோம்.

கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்கு இணையாக பத்திரிகையாளர்களும் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு அளிக்கும் அனைத்து சலுகைகளையும் பத்திரிகையாளர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துவோம்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் பத்திரிகையாளர்களுக்கு எந்தவித நிபந்தனையுமின்றி நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துவோம்.

ஊதிய நிர்ணயக்குழுவை முறையாக அமைக்க வேண்டும் என்றும் அதன் பரிந்துரைகள் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அரசை வலியுறுத்துவோம்.

காட்சி ஊடகத்தில் பணியாற்றுபவர்களும் உழைக்கும் பத்திரிகையாளர்களே என்பதை உறுதி செய்யும் வகையில் உழைக்கும் பத்திரிகையாளர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசை வலியுறுத்துவோம்.

ஊதிய நிர்ணயிக்குழுவின் பரிந்துரை, காட்சி ஊடகங்களுக்கும் பொருந்தும் என்று அறிவிக்க வேண்டும் என அரசை வலியுறுத்துவோம்.

பத்திரிகையாளர், காவல்துறை மற்றும் அரசு ஊழியர்களுக்கிடையே இணக்கமான செயல்பாட்டை உறுதி செய்ய மூன்று துறைகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டுமென அரசை வலியுறுத்துவோம்.

தொழில் தகராறு சட்டம், குறைந்தபட்ச ஊதிய சட்டம் உட்பட தொழிலாளர் நல சட்டங்களை, முதலாளிகளுக்கு ஆதரவாக மாற்றியமைக்க நினைக்கும் மத்திய அரசின் முயற்சிகளை முறியடிப்போம்.

8 மணிநேர வேலை, தொழிலாளர்களின் அடிப்படை உரிமை. அதை எந்த காலத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று மேதின உறுதியேற்போம்.