CMPC
POLITICS / அரசியல்

வரலாறு- மனித வளர்ச்சியின் குறிப்பேடு…

ஒரு சமூகத்தின் ஆட்சி கட்டமைப்பை மாற்றியமைப்பது என்பது எளிதான காரியமல்ல. அது ஒரு அசாதாரணசெயல். சுரண்டப்படும் மக்கள் தாங்கள் சுரண்டப்பட காரணம், கடவுள் என்று மத போதையில் ஆழ்த்தப்பட்டு அடிமைகளாகவே நடத்தப்படுகின்றனர். சில சமயங்களில் கொடுமைகளுக்கு எதிராக உழைக்கும் வர்க்கம் ஒன்று கூடும்போது, சீர்த்திருத்தவாதிகள் என்னும் “தண்ணீர் மனிதர்களின்” உதவியால் மக்களின் கோபத்தை ரொட்டி துண்டுகளை வீசி முடித்து வைக்கின்றது ஆளும் வர்க்கம். “நீ படும் எல்லா இன்னல்களுக்கும் நீயே காரணம்” என்று சொல்லி அதுவரை மக்களை ஏமாற்றி வந்த ஆளும் வர்க்கம்,  உலக வறுமையின் காரணம், உபரி என்னும் கேடுகெட்ட பதுக்கள் என்பதை மக்களுக்கு சொன்ன காரல் மார்க்சை கண்டு அஞ்சியது. அவர் பெயரை சொல்லவோ, எழுத்துகளை வாசிக்கவோ தடைவிதித்தது.

இப்படி காலம் சென்று கொண்டிருக்க 1905ம் ஆண்டு அக்டோபரில், ரஷ்யாவில், சுரண்டப்பட்ட உழைக்கும் வர்க்கம் புரட்சியில் ஈடுபட்டது. ஆனால் அந்த புரட்சி ஜார் அரசினால் நசுக்கபட்டது. பின்னர் 1917ம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற புரட்சியின் விளைவாக முடியரசு கலைக்கப்பட்டு, முதலாளிகளை உள்ளடக்கிய இடைக்கால அரசாங்கம் “கேரன்ஸ்கி” என்பவரது தலைமையில் அமைக்கப்பட்டது. மக்கள் புரட்சியின் விளைவாக உருவான இடைக்கால அரசு, நாளுக்கு நாள் முதலாளிகளின் அடிவருடி அரசாகவே மாறிப்போனது. அது மட்டுமின்றி, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற நாடுகளின் கட்டாயத்தின் பேரில், ரஷ்யா உலக போரில் தேவையின்றி ஈடுபடுத்தப்பட்டது.

தொடர் போரினால் அவதிப்பட்டு வந்த தொழிலாளர்கள், போர் வீரர்கள், விவசாயிகள் என அனைவரையும் மீண்டும் ஒன்று திரட்டிய லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியினர், மக்களின் எழுச்சியின் மூலம்  1917ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி “ஸ்மோல்னி” எனப்படும் ரஷ்யாவின் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு, ஆட்சியை கைப்பற்றியதாக அறிவித்தனர். அன்றைய தினம், உலகில் நாகரீகம் என்ற பெயரில் சுரண்டப்பட்ட மக்கள், தங்களுக்கான முதல் சோசியலிச ஆட்சியை அமைத்தனர்.

ஆட்சி மாறியும் சமூகத்தின் காட்சி மாறவில்லை. நம் நாட்டிலேயே புதிய அரசாங்கம் வந்தவுடன் செயல்படுவதில் பல பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம். அதேபோல், ரஷ்யாவில் ஆட்சி கட்டமைப்பையே மாற்றியமைத்த போல்ஷ்விக் கட்சியின் அரசுக்கு நெருக்கடி என்பது நினைத்து கூட பார்க்கமுடியாத அளவிற்கு இருந்தது. அரசு அதிகாரிகளின் வேலைநிறுத்தம், ரயில்வே அதிகாரிகளின் வேலைநிறுத்தம் என, அரசே முடக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது. அப்போது போல்ஷ்விக் கட்சி, காட்டு தர்பார் போன்று மோசமான ஆட்சி நடத்துவதாக பிரபல எழுத்தாளர் மார்க்சிம் கார்கி உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அந்த நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய லெனின், டிராக்ஸ்கி ஆகியோர், “முதலாளி வர்கத்தின் மீதான மென்மையான போக்கு என்பது உழைக்கும் வர்கத்திற்கு செய்யும் துரோகம், எனவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் தொடரும்” என்று வெளிப்படையாக தெரிவித்தனர்.

உலகமே கொடுங்கோன்மை என எதிர்த்த இந்த பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, புரட்சியின் போது ரஷ்யாவில் தங்கியிருந்த  அமெரிக்க ஊடகவியலாளர் ஜான் ரீட்  “நீதியை நிலைநாட்டும் போர்” என பிரகடனப்படுத்தினார். இந்த போரில் உயிர்நீத்த புரட்சியாளர்களுக்கு மாஸ்கோவில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வை தனது புத்தகத்தில் அவர் காட்சிப்படுத்தும்போதும்,  “செங்காவலர்களின் நினைவஞ்சலி கூட்டத்தில் கூடிய மக்கள் தங்களுக்காக உயிர் துறந்த அந்த வீரர்களின் நினைவுகளை போற்றும் வாசகங்களை, சின்ன தகரத்திளும் அட்டைகளிளும் செவ்வண்ணத்தில் எழுதிய எழுத்துக்கள், உலகின் எல்லா சிறந்த ஓவியங்களையும் விடவும் உயர்ந்தது”  என்று பதிவுசெய்துள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த ஜான் ரீட், தான் வாழ்ந்த சூழ்நிலைக்கு முற்றிலும் எதிரான ஆட்சி கட்டமைப்பின் உருவாக்கத்தை இயல்பு மாறாமல் பதிவு செய்துள்ளார். மார்க்சியம் என்பது வெறும் ஐரோப்பிய தத்துவம் என்னும் தெளிவற்றவர்களின் எண்ணத்தை உடைத்தெரியும் ஜான் ரீட், ரஷ்ய புரட்சி குறித்து கூறுகையில், “அனைத்து மக்களும் அரசியல் தெளிவுபெறாமல் புரட்சி சாத்தியமல்ல என்றால், இன்னும் ஐநூறு ஆண்டுகள் கடந்தும் புரட்சி சாத்தியமல்ல..” என்கிறார். இந்த வார்த்தைகளின் மூலம் ரஷ்ய உழைக்கும் வர்கத்தில் பெரும்பான்மையினோர் அரசியல் தெளிவுபெறாமல் இருந்திருக்கலாம், ஆனால் அனைவரும் அரசியல் மயப்பட்டிருந்தனர் என்ற உண்மையை அவர் பதிவு செய்திருக்கிறார்.

கத்திகளாளும் துப்பாக்கிளாலும் மட்டும் சாத்தியப்படுவதில்லை புரட்சி. அது நிலைத்திருத்தலும், அதை பரவிட செய்தலும்தான் உண்மையான புரட்சி. அப்படி, வியட்நாம், சீனா என ஒன்றன் பின் ஒன்றாக பொதுவுடமை தத்துவத்தை எற்று கொண்டு மக்களுக்கான அரசுகள் படைக்கப்படுவதை கண்டு அஞ்சிய வல்லூறுகள், பல ஆண்டுகால போராட்டத்திற்கு பின் மக்களுக்கான சோவியத்தை அழித்தனர். சோசியலிசம் தனிதீவாக இயங்க முடியாது என்ற அறிவியல் தத்துவத்தின் படியே அந்த மக்களுக்கான விஞ்ஞான சமூகம் வீழ்ந்தது. அதே அறிவியல் தத்துவத்தின் படி அது மீண்டும் வந்தே தீரும்.

வரலாறு என்பது வெறும் பதிவு அல்ல, சமூக வளர்ச்சியை நோக்கி மனிதனை இட்டு செல்ல பயன்படும் குறிப்பேடு. அப்படி இந்த உலத்தின் எல்லா மூலைகளிலும் புரட்சிக்காக போராடும் உழைக்கும் மக்களின் குறிப்பேடான ரஷ்ய புரட்சியின் 100வது ஆண்டு தொடக்க நாளில், இந்த சமூகத்தை மாற்ற போராடி உயிர் நீத்த தோழர்களுக்கும் தொடர்ந்து போராடும் மக்களுக்கும் செவ்வணக்கங்களை உரித்தாக்குவோம்…

Related posts

பரியன், ஆனந்தன், சங்கரலிங்கம் கூட்டணியே சாதி ஓழிப்பை சாத்தியப்படுத்தும்

CMPC EDITOR

மரியாதைக்குரிய தோழர் தொல்.திருமாவளவனுக்கு

admin

“வைகோவின் அந்த பேச்சு “

admin