மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 7 ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் மே தின உறுதியேற்பு விழா நடைபெற்றது

0
1687

மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் இணைந்து, பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற, மே தின உறுதியேற்பு நிகழ்ச்சி மற்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் 7 ஆம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சியும், 06.05.17 (சனிக்கிழமை) அன்று, சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், மூத்த பத்திரிகையாளர் தீக்கதிர் குமரேசன், பொன்தனசேகரன், சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளர் மோகன், நக்கீரன் பிரகாஷ், உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் சகாயராஜ், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் புருஷோத்தமன் மற்றும் பல முன்னனி பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தின் துணை செயலாளர் தமிழரசன், கடந்த 6 ஆண்டுகளில் மையத்தின் செயல்பாடுகளை விளக்கிப் பேசினார். கூட்டத்தில் கலந்துகொண்டவர்களுக்கு, மாற்றதிற்கான ஊடகவியலாளர்கள் மையத்தால் முன்வைக்கப்பட்ட, பத்திரிகையாளர் பாதுகாப்பு மாதிரி சட்ட முன்வடிவு புத்தகமாக அச்சடிக்கப்பட்டு வழங்கப்பட்டது. இந்த சட்ட முன்வடிவு குறித்த கருத்துகளையும், இதில் செய்யப்பட வேண்டிய மாற்றங்களையும், பத்திரிகையாளர்கள் முன்வைக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன் பின்பு பேசிய மூத்த பத்திரிகையாளர்கள், மகாராஷ்டிரா மாநிலத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை போலவே, தமிழகத்தில் ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியத்தை விளக்கிப்பேசினர்.

இந்த கூட்டத்தில், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையத்தினால் முன்வைக்கப்பட்ட “தமிழ்நாடு பத்திரிகையாளர் பாதுகாப்பு மாதிரி சட்ட முன்வடிவு” குறித்து அனைத்து பத்திரிகையாளர்களிடமும் கருத்து பெறப்பட்டு, இந்த சட்டத்தை தமிழகத்தில் நிறைவேற்ற அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.