மக்கள் பணத்தை விழுங்கத்துடிக்கும் முதலைகள்

0
2727

நிரவ் மோடி மற்றும் பதவியில் இருக்கும் அரசியல்வாதிகளின் தூண்டுதலின் பெயரில் ஒரு சில அதிகாரிகள்  செய்த திட்டமிட்ட தவறால்  11500 கோடி இழப்பை சந்தித்திருக்கிறது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி.இந்தியாவின் முதன்மை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் வங்கிகளை தனியார்மயம் செய்வதற்கான சரியான சமயம் இதுதான் என்கிறார்.பெருமுதலாளிகளின் கூடாரமான ASSOCHAM வங்கிகளைத் தனியார்மயம் செய்யுங்கள் என்று அரசை பரிந்துரைக்கிறது.

பஞ்சாப் நேஷனல் வங்கியை கொள்ளையடுத்துவிட்டு ஒடிய நிரவ் மோடி முதல் வங்கியில் பல இலட்சம் கோடி கடன் வாங்கி திரும்பி செலுத்தாமல் பொதுத்துறை வங்கிகளால் Wilful defaulters என பட்டியலிடப்பட்ட எத்தனையோ பேர் இந்த ASSOCHAM னுடைய நிரந்தர உறுப்பினர்கள்.பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றுவதையே வாடிக்கையாகக் கொண்டிருக்கும் இந்த மாதிரியான பணம் படைத்த முதலைகளின் கூட்டமைப்பு,வங்கிகளை தனியார்மயமாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை மத்திய அரசிடம் எந்த கூச்சமுமின்றி வைக்கிறது.அதையே இந்திய அரசின் பொருளாதார ஆலோசகர் முதல் கடைசியாக உருவாக்கப்பட்ட Banks board bureau வினுடைய வினோத் ராய் வரை கிளிப்பிள்ளையைப்போல் திரும்ப சொல்கிறார்கள்.

1990 களில் இதேப்போன்ற நெருக்கடியில் சிக்கித்தவித்த இந்தியன் வங்கியை ‘So called weak banks’ பட்டியலில் சேர்த்தது மத்திய அரசு.இந்தியன் வங்கியை இழுத்து மூடிவிடுங்கள் அல்லது அதை நாங்கள் எடுத்து நடத்திக்கொள்கிறோம் என்று ஏளனமாக அறிவித்தது அறிவித்தது CII எனும் பண முதலைகளின் கூட்டமைப்பு.அதற்கடுத்த நாள் CII இலிருந்து இந்தியன் வங்கியில் கடன் வாங்கி திரும்ப செலுத்தாமல் ஏமாற்றிக்கொண்டிருக்கும் ‘Wilful defaulters’ பட்டியலை வெளியிட்டு,நாடு முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி,CII இன் அத்தனை அலுவலகங்களுக்கு எதிரில் கடும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தி,CII இல் உள்ள பண முதலைகள் செய்த மோசடியை அம்மலப்படுத்தியது இந்தியன் வங்கி ஊழியர்கள் சங்கம்(IBEU).அதோடு மட்டும் நில்லாமல் பொதுக்குழுவைக் கூட்டி,வங்கி இழப்பிலிருந்து மீளும் வரை வங்கியிலிருந்து சம்பளம் தவிர்த்து கிடைக்கும் அத்தனை சலுகைகளையும் இழக்க தாயாராகிறோம் என்கிறோம் என்கிற பகிரங்க முடிவை எடுத்தது வங்கி ஊழியர் சங்கம்.அன்றிலிருந்து அடுத்த ஐந்து ஆண்டுகள் அத்தனை சலுகைகளையும் இழந்து வங்கியை சரிவிலிருந்து மீட்டு இன்று இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக வளர்ந்து நிற்கும் இந்தியன் வங்கியை காப்பாற்றியது இந்தியன் வங்கி ஊழியர் சங்கம் தானே ஒழிய இந்தியாவின் மூத்த பொருளாதார ஆலோசகரோ,வினோத் ராயோ,CII யோ,ASSOCHAM ஓ இல்லை.பொதுத்துறை வங்கிக்கும்,அந்த வங்கியின் வளர்ச்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த வங்கி ஊழியர்களுக்குமான பந்தத்தை நேற்று மத்திய அரசால் தனியார் நிறுவனங்களிலிருந்து பொதுத்துறை வங்கிகளின் இயக்குனர்களாக நியமிக்கப்பட்ட நபர்களால் புரிந்துக்கொள்ளவே முடியாது.

இந்தியா சுதந்திரம் அடைந்த 1947 ல் இருந்து 1968 வரையிலான காலகட்டத்தில் ஏறக்குறைய 736 தனியார் வங்கிகள் செயல்பட முடியாமல் திவாலாகி ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சேமிப்பை இழக்கும் அவலநிலை ஏற்பட்டது,1969 வங்கிகள் தேசியமயமாக்கலுக்கு பின்னர் நஷ்டத்தில் சென்ற,திவாலாகும் நிலையில் இருந்த பாங்க் ஆப் தஞ்சாவூர்,பாங்க் ஆப் தமிழ்நாடு உட்பட 25 க்கும் மேற்பட்ட வங்கிகள் பொதுத்துறை வங்கிகளுடன்  இணைக்கப்பட்டுதான் மக்களின் பணம் காப்பாற்றப்பட்டது. தேசியமயமாக்கப்பட்டதிலிருந்து இன்று வரை மக்களின் பணம் ஓரு ரூபாய் கூட வங்கிகள் நஷ்டம் என்றோ,திவால் என்றோ பொதுத்துறை வங்கிகளால் மக்களிடம் இருந்து அபகரிக்கப்படவில்லை.

பெரும் பணம் படைத்த பண்ணையார்களுக்கும்,முதலாளிகளுக்கும் சேவை செய்யவே வங்கிகள் என்ற நிலையிலிருந்து,வங்கி சேவையை அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும்படி செய்தது பொதுத்துறை வங்கிகள்தானே ஒழிய தனியார் வங்கிகள் இல்லை.அரசு அறிவிக்கும் விவசாயிகளுக்கான திட்டங்கள்,சிறுதொழில் முனைவோருக்கான திட்டங்கள்,மாணவர்களுக்கான உதவித்தொகைகள்,கல்வி கடன்கள்,விவசாய கடன்கள்அனைத்தையும் நடைமுறைப்படுத்தி வெகுமக்களை பயனடைய செய்வது பொதுத்துறை வங்கிகள்தானே ஒழிய தனியார் வங்கிகள் இல்லை.சாலைகளால் இணைக்கப்படாத மலை கிராமங்களில் கிளைகளை ஆரம்பித்து நடத்தி வருவது பொதுத்துறை வங்கிகள்தானே ஒழிய தனியார் வங்கிகள் இல்லை.தனியார் வங்கிகளைப்போல இலாப வெறியில் பெரும் பணம் படைத்தவர்களுக்கு மட்டும் சேவை  செய்யாமல்,வங்கி சேவையை அனைத்து தரப்பு மக்களுக்கும் கொண்டு சேர்ப்பது பொதுத்துறை வங்கிகளால் மட்டுமே சாத்தியம்.

வங்கிகள் பலவீனமாகிறது என்று குறை சொல்லும் அரசு,அதற்கு காரணம் பெருமுதலாளிகள் திருப்பி செலுத்தாமல் வைத்து இருக்கும் வாராக்கடன் என்பதை வெளியிட மறுக்கிறது.வங்கிகளைக் காப்பாற்ற அந்த பெருமுதலாளிகளிடம் இருந்து வாராக் கடனை வசூலிக்க வேண்டுமே ஒழிய வங்கிகளை மொத்தமாக தூக்கி அவர்கள் கையில் கொடுப்பது என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களை வங்கிச்சேவையிலிருந்து தனிமைப்படுத்தவே செய்யும்.