மக்களுக்காக அரசை நோக்கி எறியப்பட்ட முதற்கல் – ராகுல்

0
627

ஒவ்வொரு முறையும் மக்கள் போராட்டத்துக்காக கூடும்போதும் அங்கு
ஒரு ‘கல்’ வீசப்படும், அந்தக் கல் போராட்டத்தை மடைமாற்றும்,அந்தக் கல் போராட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தும்,அந்தக் கல் போராட்டத்தில் துப்பாக்கிகளை முழங்கச் செய்யும்,அந்தக் கல் போராட்டத்தில் குண்டாந்தடிகளை சுழல வைக்கும்,அந்தக் கல் இந்த ஆளும் வர்க்கத்தினுடைய ஒட்டுமொத்த அதிகாரத்தையும் எளிய மக்களின் மீது கட்டவிழ்த்துவிடும்.

போராட்டத்தை குலைத்த,கலவரத்தை தூண்டிய,குண்டாந்தடிகளை சுழலச் செய்த,துப்பாக்கிகளில் இருந்து தோட்டாக்களை பாயச் செய்த அந்த கற்கள்,ஆளும் வர்க்கத்திற்கு ஆதரவாக ‘போராட்டக்காரர்களை’ நோக்கி வீசப்பட்ட கற்கள்,கற்களை வீசியதும் அவர்களே,போராட்டத்தை குலைத்தவர்களும் அவர்களே,போராட்டத்தில் கலவரத்தை தூண்டியர்களும் அவர்களே,கலவரத்தை கட்டுப்படுத்த லத்திகளை சுழற்றியவர்களும் அவர்களே,இறுதியில் போராட்டத்தை ஒடுக்க தோட்டாக்களை பாய்ச்சியவர்களும் அவர்களே.ஜாலியன் வாலாபாக்கில் கற்களை வீசியவர்கள்தான்,மாஞ்சோலையில் துப்பாக்கியால் சுட்டது.மாஞ்சோலையில் கற்களை வீசியர்கள்தான்,பின்னி மில்லில் துப்பாக்கியால் சுட்டது,பின்னி மில்லில் கற்களை வீசியவர்கள்தான், நடுக்குப்பத்தில் துப்பாக்கியால் சுட்டது.வீசியதும் ,சுட்டதும் அவர்கள்,செத்து மடிந்தது மட்டும் ராம்குமார்கள்.

மாணவர்கள் போராடினார்கள்,மருத்துவர்கள் போராடினார்கள்,விவசாயிகள் போராடினார்கள்,பழங்குடியினர் போராடினார்கள், செவிலியர்கள் போராடினார்கள்,வங்கி ஊழியர்கள் போராடினார்கள்,போக்குவரத்து ஊழியர்கள் போராடினார்கள்,கண்டுக்கொள்ளாமல் அத்தனையும் தனியார்க்கு தாரைவார்த்து,அமைதி காத்தது இந்த அரசினுடைய மிகப்பெரிய வன்முறை.

உண்ணாவிரதத்தில் கிடைக்காதது,தீக்குளிப்பில் கிடைக்காதது,ஊர்வலத்தில் கிடைக்காதது,கற்களில் கிடைக்கும் என்றால் அந்தக் கற்களே இந்தக் கட்டமைப்பை உருக்குலையச் செய்யும் ஆயுதமாகட்டும்.

பத்திரிக்கையாளர்களால் எறியப்பட்ட அந்த கல், இந்த அரசுக்கு எதிராக,நீதித்துறைக்கு எதிராக,காவல்துறைக்கு எதிராக,பெருமுதலாளிகளுக்கு எதிராக வீசப்பட்ட முதற்கல்.அரசைக் காப்பாற்ற மக்களை நோக்கி எறியப்பட்ட கற்களுக்கு மாற்றாக,மக்களுக்காக அரசை நோக்கி எறியப்பட்ட முதற்கல்.