பொய் வழக்கு பதிவு செய்து பத்திரிகையாளர்களை மிரட்டும், நெல்லை மாவட்ட காவல்துறையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது

0
507

எங்கு என்ன நடந்தாலும், அதன் முக்கியத்துவம் கருதி, அந்த நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியை செய்ய கடமைபட்டவர்கள் பத்திரிகையாளர்கள். அந்த வகையில், கடந்த சனிக்கிழமையன்று (23.09.17) நெல்லை மாவட்டம் மேற்குதொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான, மகேந்திரகிரி மலையின், பனங்குடி என்ற கிராமத்திற்கு அருகே ஏற்பட்ட பாறை வெடிப்பும், அதைதொடர்ந்து ஏற்பட்ட வெண்புகை தொடர்பான செய்தியை நெல்லை மாவட்ட செய்தியாளர்கள் செய்தியாக வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அந்த செய்தியை வெளியிட்ட செய்தியாளர் ஒருவரிடம் நாம் பேசியபோது, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின், ராக்கேட் இன்ஜின் தயாரிக்கும் மையம் அமைந்துள்ள மகேந்திரகிரி மலைப்பகுதியில் வெடிச்சத்தம் கேட்டதாக அதன் அருகே அமைந்துள்ள பனங்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் செய்தியாளர்களுக்கு தகவல் தந்துள்ளனர். அத்துடன், பாறையில் வெடிப்பு ஏற்பட்டு, புகை வரும் வீடியோ பதிவையும் அவர்கள் செய்தியாளர்களிடம் தந்துள்ளனர். இதைத்தொடர்ந்து பனங்குடி செய்தியாளர்கள் இந்த நிகழ்வை உறுதி செய்த பின்பு தங்கள் நிறுவனங்களுக்கு செய்தியை வழங்கியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமையன்று செய்தித்தாள்களில் இந்த செய்தி வெளிவந்ததுடன், அன்றைய தினம் காலை முதல் செய்தி தொலைக்காட்சிகள் சிலவற்றிலும் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட மகேந்திர கிரி மலைப்பகுதியில் இந்த வெடிப்பு நடைபெற்றுள்ளதால், இந்த செய்தியின் முக்கியத்துவத்தை யாராலும் மறுக்க முடியாது. இந்த நிகழ்விற்குப் பிறகு, நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார், வெடிப்பு நடைபெற்றதை செய்தியாளர்களிடம் உறுதி செய்துள்ளார். இதன்மூலம் இந்த செய்தியின் நம்பகத்தன்மை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், விண்வெளி ஆய்வு மையத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் கொடுத்த புகாரின் அடிப்படையில், பனங்குடி கிராமத்தை சேர்ந்த தினகரன் நாளிதழ் செய்தியாளர் ஜெகன், புதிய தலைமுறை தொலைகாட்சியின் செய்தியாளர் ராஜீவ் கிருஷ்ணா, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நெல்லை மாவட்ட செய்தியாளர் நாகராஜ் ஆகியோர் மீது, பனங்குடி காவல்நிலையத்தில் இந்த செய்தியை வெளிட்டதற்காக, பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடந்த ஒரு நிகழ்வை அதுவும் காவல்துறை கண்காணிப்பாளரால் உறுதி செய்யப்பட்ட ஒரு நிகழ்வை செய்தியாக வெளியிட்டதற்கு செய்தியாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வது, அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறை என்பதை யாராலும் மறுக்க முடியாது. இது குறித்து நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் செய்தியாளர்கள் பேசியபோது, விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து வந்த நெருக்கடியினால், வேறு வழியின்றி வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால், செய்தியாளர்கள் விசாரித்தபோது, விண்வெளி ஆய்வு மைய அதிகாரிகளுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அத்துடன், அந்த புகாரை திரும்ப பெற மத்திய தொழில் பாதுகாப்பு படையினரை அவர்கள் வலியுறுத்தியதாகவும் தெரிகிறது.

இதனைதொடர்ந்து, மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தாங்கள் அளித்த புகாரை திரும்ப பெறுவதாக கூறினாலும், பனங்குடி காவல்நிலைய ஆய்வாளர் ஸ்டீபன் ஜோன்ஸ் அதை ஏற்க மறுப்பதாகவும் நெல்லை மாவட்ட செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், வழக்கு பதிவு செய்யப்பட்ட செய்தியாளர்களுக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகலையும் ஆய்வாளர் ஸ்டீபன் ஜோன்ஸ் தர மறுப்பதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். ஒருவேளை மத்திய தொழில்பாதுகாப்பு படையினர் தங்கள் புகாரை திரும்ப பெறுவதில் உறுதியாக இருந்தால், இந்த செய்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், முன்னேற்பாடாக, பனங்குடியை சேர்ந்த வருவாய்துறை அதிகாரியிடம் செய்தியாளர்களுக்கு எதிராக ஒரு புகாரை ஆய்வாளர் ஸ்டீபன் ஜோன்ஸ் பெற்றுள்ளார்.

இவற்றை வைத்து பார்க்கும்போது, நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் மற்றும் பனங்குடி காவல்நிலைய ஆய்வாளர் ஸ்டீபன் ஜோன்ஸ் செய்தியாளர்கள் மீது வேண்டுமென்றே வழக்கு பதிவு செய்திருப்பது தெளிவாக தெரிகின்றது. ஏற்கனவே, பனங்குடி கிராமத்தில் நடைபெற்ற மணல்கொள்ளை தொடர்பான செய்திகளை வெளியிட்டதால், ஆய்வாளர் ஸ்டீபன் ஜோன்ஸ் செய்தியாளர்கள் மீது கோபமாக இருந்துள்ளார். ஆகவே, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டு அவர்களை பழிவாங்க நினைப்பதாக செய்தியாளர்கள் கருதுகின்றனர்.
செய்தியாளர்கள் தங்கள் பணியை செய்ததற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்வதென்பது, அவர்கள் தங்கள் பணியை நியாயமாக செய்யவிடாமல் மிரட்டுவதற்கு சமமாகும். அதாவது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திர உரிமைக்கு எதிரானதாகும். புகார் அளித்தவர் அதை திரும்ப பெறுவதாக கூறினாலும் அதை ஏற்க மறுப்பதும், குற்றம்சாட்டப்பட்டவருக்கு சட்டப்படி வழங்கப்பட்டுள்ள உரிமையை மறுக்கும் வகையில், முதல் தகவல் அறிக்கையின் நகலை கூட செய்தியாளர்களுக்கு வழங்க மறுப்பதும் அப்பட்டமான சட்ட மீறல் நடவடிக்கையாகும்.
ஆகவே, பொய்வழக்கு போடுவதன் மூலம் செய்தியாளர்களை நியாயமாக பணிசெய்ய விடாமல் தடுக்க நினைக்கும் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் பனங்குடி காவல்நிலைய ஆய்வாளரை மாற்றத்திற்கான ஊடகவியலாளர் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

அரசியல்சாசன உரிமையை மீறும் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண் சக்திகுமார் மற்றும் பனங்குடி காவல்நிலைய ஆய்வாளர் ஸ்டீபன் ஜோன்ஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர், காவல்துறை தலைவருக்கு உத்தரவிட வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

செய்தியாளர்கள் ஜெகன், ராஜீவ் கிருஷ்ணா, நாகராஜன் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தமிழக அரசை வலியுறுத்துகின்றது.

நெல்லை செய்தியாளர்களுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த உள்நோக்கம் கொண்ட பொய் வழக்கு, ஒட்டுமொத்த பத்திரிகை சமூகத்திற்கும் எதிராக தொடுக்கப்பட்டுள்ள அடக்குமுறை என்பதை உணர்ந்து, அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து, நெல்லை செய்தியாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.

செய்தியாளர்களுக்கு எதிரான இதுபோன்ற அராஜக நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழகத்தில் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசை அனைத்து பத்திரிகையாளர்களும் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.