பொய்யான கணக்கைகாட்டி தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்கியுள்ள விகடன் குழுமம்! ஆண்டறிக்கையை ஆராய்ந்ததில் பல்வேறு குளறுபடிகள் அம்பலம்!

0
733

விகடன் குழுமம், Ananda Vikatan publishers pvt Ltd., Vikatan Media service pvt Ltd., Vasan Publications pvt Ltd., Ananda Vikatan Productions pvt Ltd., Anand Vikatan Digital pvt Ltd., ஆகிய நிறுவனங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி இந்த நிறுவனங்களைச் சேர்ந்த 170க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை விகடன் நிறுவனம் கடந்த மே மாதம் பணிநீக்கம் செய்தது. அதற்கு முன்னரே 30 சதவீதம் சம்பள குறைப்பை அமல்படுத்திய விகடன் குழுமம், அதையும் மீறி அராஜகமாக இந்த பணிநீக்கத்தையும் செய்தது.

அந்தவகையில், நஷ்டத்தில் இயங்குவதாக விகடன் நிறுவனம் கூறுவது உண்மையா என்பதை கண்டறிய விகடன் குழுமத்தில் ஐந்து நிறுவனங்களும், கடந்த சில ஆண்டுகளாக தாக்கல் செய்த வரவு-செலவு ஆண்டறிக்கையை கணக்கு தணிக்கையாளர் மூலம் ஆய்வு செய்தோம். ஆய்வை மேற்கொண்ட தணிக்கையாளர் அதில் உள்ள பல குளறுபடிகளை சுட்டிக்காட்டியுள்ளார்.

2017ஆம் ஆண்டு வரை சிறப்பாக செயல்பட்டு வந்துள்ள Vikatan Media Services Private Limited நிறுவனத்தின் மொத்த வியாபாரம் (Turnover) அதன் பிறகு குறையத் தொடங்கியுள்ளது. இருந்தபோதும் 2017 ஆம் ஆண்டு தொழிலாளர்களுக்காக 4.9 கோடி ரூபாய் செலவிடப்பட்ட நிலையில், 2018 ஆம் ஆண்டு அது 5.21 கோடியாக அதிகரித்துள்ளது. அதற்கு அடுத்த ஆண்டு அதாவது 2019ஆம் ஆண்டு, தொழிலாளர்களுக்காக செலவிடப்பட்ட தொகை (Employee benefit expense) 3.14 கோடியாக திடீரென்று குறைந்துள்ளது. ஆகவே, சம்பளம் உட்பட தொழிலாளர்களுக்காக செலவிடப்படும் தொகையில் ஆண்டு தோறும் ஏற்பட்டுள்ள புரிந்துகொள்ள முடியாத இந்த ஏற்ற இறக்கம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாக தணிக்கையாளர் தெரிவித்துள்ளார். அதாவது, தொழிலாளர்களுக்கு செலவிடப்படும் தொகை முறையாக கணக்கிடப்படாமல், நிர்வாகத்தின் விருப்பத்திற்கு ஏற்ப சிலவற்றை மறைத்து, சிலவற்றை அதிகரித்து காட்டப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

அதேபோல், Vikatan Media Services Private Limited நிறுவனத்தின் மொத்த வியாபாரமும் (Turnover), அதன் சில நடவடிக்கைகளும், விகடன் குழுமத்தில் உள்ள வேறொரு நிறுவனத்திற்கு மடைமாற்றப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுவதாக தணிக்கையாளர் தெரிவிக்கிறார். அதாவது இந்த நிறுவனத்தின் செயல்பாட்டை, வேண்டுமென்றே குறைத்து காட்ட, நிர்வாகம் இப்படி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

அடுத்ததாக, Vasan Publications Private Limited நிறுவனத்தின் மொத்த வியாபாரம் 2015 முதல் சீராக உயர்ந்து வந்த நிலையில் 2019ஆம் ஆண்டு மட்டும் சிறிய அளவில் குறைந்துள்ளது. ஆனால், ஆச்சர்யம் அளிக்கும் வகையில், இந்த நிறுவனம் 2015, 2018 மற்றும் 2019 ஆண்டுகளில், தொழிலாளர்களுக்காக எதுவும் செலவிடப்பட்டதாக ஆண்டறிக்கையில் தெரிவிக்கவில்லை. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் குறிப்பிட்ட தொகை தொழிலாளர்களுக்காக செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதை உற்று நோக்கி ஆராயும்போது, அதுவும், நிறுவனத்தின் இயக்குனர்களுக்கான சம்பளம் மற்றும் அவர்களுக்கான பிற செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.

ஆகவே, Vasan Publications Private Limited நிறுவனம் தாக்கல் செய்துள்ள 5 ஆண்டுகளுக்கான ஆண்டறிக்கைகளை ஆராயும்போது, தொழிலாளர்களே இல்லாமல், வியாபாரம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளது அம்பலமாகிறது. ஆகவே, விகடன் குழுமம் சட்டப்படி ஆண்டறிக்கையை தயார் செய்யாமல், தாங்கள் விரும்பியபடி தங்களுக்கு சாதகமாக ஆண்டறிக்கையை தயாரித்துள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது. Vikatan Media Services Private Limited நிறுவனத்தின் ஆண்டறிக்கையை ஆராயும் போது இந்த சந்தேகம் வலுப்பெறுகிறது. ஏனென்றால், Vikatan Media Services Private Limited நிறுவனத்தின் செயல்பாட்டிற்கும் அந்த நிறுவனம் தொழிலாளர்களுக்காக செலவிடப்பட்டதாக கூறப்பட்டுள்ள தொகைக்கும், மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் இருப்பதாக தணிக்கையாளர் கூறுகிறார்.

ஆகவே, Vikatan Media Services Private Limited நிறுவனத்தில் தொழிலாளர்களுக்காக செலவிடப்பட்ட தொகை, Vasan Publications Private Limited போன்ற, விகடன் குழுமத்தில் உள்ள பிற நிறுவனங்களில், தொழிலாளர்களுக்கு செலவிடப்பட்ட தொகையில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என்று தணிக்கையாளர் கூறுகிறார்.

அடுத்ததாக, Ananda Vikatan Productions Private Limited நிறுவனத்தின் மொத்த வியாபாரம், 2015ஆம் ஆண்டு தொடங்கி சீராக வளர்ச்சியடைந்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் லாபம் சிறிது குறைந்திருந்தாலும், ஒட்டுமொத்தத்தில் இந்த நிறுவனம் லாபகரமாக இயங்கியுள்ளது. ஆனால், இந்த நிறுவனத்தில் தொழிலாளர்களுக்காக செலவிடப்படும் தொகை 2016ஆம் ஆண்டு தொடங்கி தொடர்ச்சியாக குறைந்துள்ளது. அதாவது, சீராக வளர்ச்சியடைந்து வந்த நிறுவனத்தில், லாபமும் உயர்ந்து வந்த நிறுவனத்தில், தொழிலாளர்களுக்கு செலவிடப்பட்ட தொகை தொடர்ந்து குறைந்து வந்துள்ளது ஏன்? என தணிக்கையாளர் கேள்வி எழுப்புகிறார்.

Ananda Vikatan Publishers Private Limited நிறுவனத்தின் 2019ஆம் ஆண்டு ஆண்டறிக்கை மட்டுமே நமக்கு கிடைத்தது. அதை தணிக்கையாளர் ஆராய்ந்தபோது, 2019ஆம் ஆண்டில் 54.62 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்துள்ளதும், 9.66 கோடி ரூபாய் தொழிலாளர்களுக்காக செலவிடப்பட்டதும் தெரியவந்துள்ளது. அந்த ஆண்டில் Ananda Vikatan Publishers Private Limited நிறுவனம் 41.69 லட்சம் நிகர லாபம் ஈட்டியுள்ளது.

ஒட்டுமொத்தத்தில் விகடன் குழுமத்தின் கீழ் செயல்படும் 5 நிறுவனங்களையும் ஆராய்ந்த தணிக்கையாளர் அனைத்து நிறுவனங்களும் சீராக வளர்ச்சியடைந்து வந்ததையும், லாபமும் சீராக உயர்ந்துள்ளதையும் சுட்டிகாட்டுகிறார். ஆகவே, தொழிலாளர்களுக்கு செலவிடப்படும் தொகையை குறைப்பதற்கு, அதாவது தொழிலாளர்களை வேலையை விட்டு நீக்குவதற்கான தேவை, எந்த நிறுவனத்திற்கும் ஏற்படவில்லை என்று தணிக்கையாளர் கூறுகின்றார். இதன்மூலம், விகடன் நிறுவனம் கணக்கு புத்தகத்தை தனக்கு சாதகமாக மாற்றி எழுதிக்கொண்டு, அதை காரணமாக காட்டி, தொழிலாளர்களின் வயிற்றில் அடித்துள்ளது தெரியவந்துள்ளது.

ஆகவே, லாபத்தை பெருக்க, பொய்யான காரணங்களை கூறி, வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை, விகடன் நிர்வாகம் எந்த நிபந்தனையுமின்றி மீண்டும் வேலையில் அமர்த்த வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

விகடன் குழுமம் லாபத்தில்தான் இயங்குகிறது என்பதையும், அது சீராக வளர்ச்சியடைந்ததற்கும், லாபம் உயர்ந்ததற்கும் உங்களின் உழைப்பே காரணம் என்பதை உணர்ந்து, பணிநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களின் உரிமையை வென்றெடுக்க ஒன்றிணைய வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அழைப்பு விடுக்கிறது.