புதிய தலைமுறை செய்தியாளர் எழில் மீதான கொலைவெறித் தாக்குதலுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கண்டனம்!

0
317

வெள்ளையர் ஆதிக்கத்திலிருந்து நாடு மீண்ட 74ஆவது ஆண்டை கொண்டாடும் வகையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் சுதந்திர தின விழா கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்றத் தலைவர் என்ற முறையில் அமிர்தம் என்பவர், கொடியேற்ற வந்துள்ளார். ஆனால், பட்டியலின வகுப்பைச் சார்ந்தவர் என்ற காரணத்தால் அமிர்தத்தை கொடியேற்ற விடாமல் அங்குள்ளவர்கள் தடுத்துள்ளனர்.

இந்நிகழ்வு தொடர்பாக செய்தி சேகரிப்பதற்காக இன்று (18-08-20) ஆத்துப்பாக்கம் ஊராட்சிக்கு புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தியாளர் எழில் சென்றுள்ளார். அதனையறிந்த ஊராட்சி மன்றச் செயலாளர் சசிகுமார் உள்ளிட்டோர், செய்தியாளர் எழிலை செய்தி சேகரிக்க விடாமல் தடுத்ததுடன் அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளனர். தன் பணியை செய்ய சென்ற ஒரு பொறுப்புள்ள
செய்தியாளரை தாக்கியதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இதை மாற்றத்திற்கான ஊடகவியலாளார்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

சுதந்திர தினத்தில் கொடியேற்ற சென்ற ஒரு மக்கள் பிரதிநிதிக்கே சாதியின் பெயரால் உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது. ஒரு கிராமத்தில் நடந்த இந்த சமூக அவலத்தை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டியது ஒரு பொறுப்புள்ள பத்திரிகையாளரின் கடமை. அக்கடமையை செய்யச் சென்ற செய்தியாளர் எழிலைத்தான் சமூக விரோதிகள் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டோர் மீது காவல்துறை தற்போது வழக்குப் பதிந்துள்ளது என்ற போதிலும், இது போன்ற மற்றுமொரு நிகழ்வு நடந்திடாத வகையில் காவல்துறை குற்றச்செயலில் ஈடுபட்டோர் மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

தாக்குதலுக்குள்ளான செய்தியாளர் எழிலுக்கு ஆதரவாக புதிய தலைமுறை தொலைக்காட்சி நிறுவனம் இருப்பதுடன், இவ்வழக்கு தொடர்பான சட்ட உதவிகளையும் அவருக்கு ஏற்படுத்தித்தர வேண்டுமென மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

மேலும், இதேபோன்ற மற்றுமொன்று நிகழாத வகையில் தமிழக அரசு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து பத்திரிகையாளர் சங்கங்களும் குரலெழுப்ப வேண்டும் என்றும் மாற்றத்திற்கான
ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.