புதிய தலைமுறை இதழ் சட்டத்திற்கு புறம்பாக மூடப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்! சில ஆயிரம் ரூபாய்க்காக, பணிநீக்கம் செய்யும் முன் தொழிலாளர்களின் சம்பளத்தை குறைத்த அநியாயம்!

0
607

கொரோனாவை காரணமாக வைத்து தங்கள் லாபத்தை பெருக்கவும், இந்த நெருக்கடியில் கூட, லாபம் குறைவதை தடுக்கவும், அனைத்து நிறுவனங்களும் சிறிதும் வெட்கம் இல்லாமல், தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றன. அந்தவகையில், நியாயமற்ற முறையில் சம்பளக் குறைப்பு மற்றும் மனசாட்சியற்ற முறையில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றன. தங்களை முற்போக்கான ஊடகம் என்று அறிவித்துக்கொண்ட நிறுவனங்கள் தொடங்கி, இடதுசாரி ஆதரவாளர் என்று கூறிக்கொள்பவரால் நடத்தப்படும் பத்திரிகை வரை இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தொழிலாளர்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் இந்த கொடூரத் தாக்குதலை தட்டிக்கேட்க வேண்டிய எதிர்கட்சியான திமுக, அதன் சொந்த தொலைகாட்சியிலேயே 40 சதவீதம் வரை சம்பள குறைப்பை செய்துள்ளது.

இந்த வரிசையில் தற்போது புதிய தலைமுறை நிறுவனமும் இணைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்னர் புதிய தலைமுறை தொலைகாட்சி, இணையதளம், புதிய தலைமுறை இதழ்கள், அந்த நிறுவனத்தால் நடத்தப்படும் தி ஃபெடரல் என்ற ஆங்கில இணைய தளம் ஆகியவற்றில் அதிகபட்சமாக 50 சதவீதம் வரை சம்பள குறைப்பு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து புதிய தலைமுறை தமிழ் இணையதளம் மற்றும் தி ஃபெடரல் இணையதளத்தில் ஆட்குறைப்பும் செய்யப்பட்டது. இதன் உட்சபட்சமாக தற்போது புதிய தலைமுறை இதழ்களை ஒட்டுமொத்தமாக நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்போது வேலையிழந்துள்ளனர்.

தொழில் தகராறு சட்டத்தின்படி, ஒரு நிறுவனத்தை மூடுவதற்கு 3 மாதத்திற்கு முன்னர், அரசுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும். நிறுவனத்தை மூடுவதற்கு நிர்வாகம் சொல்லும் காரணத்தை அரசு ஏற்கும்பட்சத்தில் மட்டுமே நிறுவனத்தை மூட முடியும். அந்த குழுமத்தால் நடத்தப்படும் பிற நிறுவனங்கள் லாபத்துடன் இயங்கும்பட்சத்தில், இந்த குறிப்பிட்ட நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதை சுட்டிக்காட்டி நிறுவனத்தை மூடமுடியாது. இறுதியாக, சட்டப்படி ஏற்றுக்கொள்ளும் காரணமாக இருந்தாலும், அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிவிட்டே நிறுவனத்தை மூட வேண்டும்.

ஆனால், மேற்கூறிய எந்த விதிமுறையையும் பின்பற்றாமல் புதிய தலைமுறை இதழை சட்டத்திற்குப் புறம்பாக நிர்வாகம் மூடியுள்ளது. சட்டப்படி பார்த்தால், எஸ்ஆர்எம் குழுமத்தால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் மேலும் பல நிறுவனங்களும் லாபத்துடன் இயங்கிவரும் நிலையில், அந்த குழுமத்தினரால் நடத்தப்படும் புதிய தலைமுறை இதழை, நஷ்டத்தை காரணம் காட்டி நிர்வாகத்தால் மூட முடியாது. ஆகவே, புதிய தலைமுறை நிர்வாகம் அப்பட்டமாக சட்டத்தை மீறியுள்ளது.

இவற்றிக்கெல்லாம் மேலாக, கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கும் நிறுவனம், சில ஆயிரம் ரூபாயை மிச்சப்படுத்த, மிகவும் கீழ்த்தரமான ஒரு செயலை செய்துள்ளது. புதிய தலைமுறை தமிழ் இணையதளம் மற்றும் தி ஃபெடரல் இணையதளத்தில் பணியாற்றும் சிலரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ள நிறுவனம், அவர்களை பணிநீக்கம் செய்வதற்கு நான்கு நாட்களுக்கு முன் அவர்களின் சம்பளத்தை 50 சதவீதம் குறைத்துள்ளது. அதன் பிறகு நான்கு நாட்கள் கழித்து அவர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்துள்ள நிர்வாகம், திருத்தப்பட்ட சம்பளத்தின் அடிப்படையில், இரண்டு மாத சம்பளம் இழப்பீடாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அதாவது அவர்களுடைய பழைய சம்பளத்தின்படி பார்த்தால் அவர்களுக்கு ஒரு மாத சம்பளமே இழப்பீடாக வழங்கப்படும்.

இதைவைத்து பார்க்கும்போது, சம்பள குறைப்பு செய்ய முடிவெடுத்தபோதே, ஆட்குறைப்பு செய்யவும் முடிவெடுத்துள்ள நிர்வாகம், அவர்களுக்கு இழப்பீடு வழங்குதை குறைக்க நினைத்துள்ளது. அதன்படி, அவர்களுடைய சம்பளத்தை பாதியாக குறைத்து பின்னர் அவர்களை வேலையை விட்டு நீக்கியுள்ளது. ஒரு சில ஆயிரம் ரூபாயை மிச்சப்படுத்த, இப்படிப்பட்ட அறமற்ற செயலில் ஈடுபட்டுள்ள புதிய தலைமுறை நிர்வாகத்தை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

ஆகவே, சட்டத்திற்குப் புறம்பான சம்பள குறைப்பு, ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள புதிய தலைமுறை நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

புதிய தலைமுறை இதழை மூடுவதை பொறுத்தவரை, தொழில் தகராறு சட்டத்தை மதித்து அரசுக்கு முறையாக தெரிவித்து, அரசின் உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அந்த இடைப்பட்ட காலத்தில் இதழை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்றும் உறுதியளிக்கிறோம்.