சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் நடவடிக்கை குழு சார்பாக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டம்

0
859

“சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் நடவடிக்கைக் குழு” – வின் ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டதன் பின்னனியும், அதில் எடுக்கப்பட்ட முடிவுகளும்.

கடந்த 16 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாமல், ஒரு சில தனி நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நேர்மையாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், பல்வேறு ஊடகங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர்கள் மேற்கொண்ட முன் முயற்சியினால், கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி, “சென்னை பத்திரிகையாளர் மன்றம் யாருக்கானது?” என்ற தலைப்பில் சென்னையில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கில், “சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நேர்மையாக தேர்தலை நடத்தி முடிப்போம் என்ற” தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை நடைமுறை படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, மூத்த பத்திரிகையாளர்களை உள்ளடக்கிய, 19 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவிற்கு “சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் நடவடிக்கைக் குழு” என்று பெயரிடப்பட்டது.

இந்த கூட்டத்திற்கு பிறகு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களை, இந்த குழுவின் உறுப்பினர்கள் நேரில் சந்தித்து, கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கினர். அதன் பின்னர், பல இழுத்தடிப்புகளுக்குப் பிறகு, 04.10.2015 அன்று, பல ஆண்டுகளாக கூட்டப்படாத, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுக்குழு கூட்டப்பட்டது. பொதுக்குழுவில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கைக்கு ஒரு மாதம் அவகாசம் வழங்குவது, நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்ப பெற நடவடிக்கை எடுப்பது, நேர்மையாக தேர்தலை நடத்தி முடிப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கண்ட தீர்மானங்களை நடைமுறைப் படுத்துவதற்காக, தற்போது தங்களை நிர்வாகிகள் என்று அழைத்துக்கொள்பவர்களுக்கு வழிகாட்டும் வகையில், மூத்த பத்திரிகையாளர்களான மயிலை பாலு, பொன் தனசேகரன், நூருல்லா மற்றும் துரை ஆகியோர் அடங்கிய நால்வர் குழு உருவாக்கப்பட்டது. இந்த நால்வர் குழுவிற்கு பொதுக்குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இதன் பின்னர், பொதுக்குழு முடிவின் படி, புதிய உறுப்பினர்கள் சேர்க்கை தொடங்கப்பட்டது. 5.10.15 தொடங்கி, 5.11.15 வரை, ஒரு மாதம் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கையில், சுமார் 1500 புதிய விண்ணப்பங்கள் வழங்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து, சுமார் நான்கு மாத இழுத்தடிப்பிற்குப் பிறகு, கடந்த 24.02.2016 அன்று, புதிய உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், புதிதாக விண்ணப்பித்தவர்களின், ஐந்தில் நான்கு பங்கு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருந்தன. அதாவது, சுமார் 1500 விண்ணப்பங்களில் 328 விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தன. விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதன் காரணம் ஏதும் தெரிவிக்கப்படாத நிலையில், நிராகரிக்கப்பட்டவர்கள் முறையீடு செய்வதற்கான கால அவகாசமும் வழங்கப்படாமல், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் என்று தங்களைக் கூறிக்கொள்பவர்களிடம், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட பலரும் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர்கள் சரியான விளக்கத்தை கொடுக்க தயாராக இல்லை. இதன் மூலம், விண்ணப்பங்கள் பரிசீலினை செய்யப்பட்டதில் பாரபட்சம் காட்டப்பட்டதுடன், முறைகேடாக பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதும் அம்பலமானது.

இதுதொடர்பாக, பொதுக்குழுவால் அங்கீகாரம் வழங்கப்பட்ட நால்வர் குழுவிடம் முறையிட்டபோது, விண்ணப்பங்கள் பரிசீலினை செய்ததில் தாங்கள் எந்தவித வழிகாட்டுதலையும் வழங்கவில்லை என்று கூறிவிட்டனர். அத்துடன், விண்ணப்பங்கள் முறைகேடாக நிராகரிக்கப்பட்டுள்ளதை அந்த குழுவில் உள்ள சில மூத்த பத்திரிகையாளர்கள் ஏற்றுக்கொண்டனர். இதன் மூலம், பொதுக்குவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் எதுவும், முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதும், புதிய உறுப்பினர்களை சேர்த்து, நேர்மையாக தேர்தலை நடத்த, தற்போது தங்களை நிர்வாகிகள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு மனமில்லை என்பதும் அப்பட்டமாக தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் நடவடிக்கை குழுவின் ஆலோசனைக் கூட்டம், ஞாயிறு (06.03.2016) மாலை 7 மணியளவில், சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், பல்வேறு ஊடகங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் கலந்துகொண்டு தங்களுடைய கருத்துகளை முன்வைத்தனர். அதில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு, நேர்மையாக தேர்தலை நடத்த, போதுமான காலஅவகாசம் வழங்கப்பட்டும், அவர்கள் அதற்கு தயாராக இல்லை என்பது பலராலும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன், இனியும் அவர்கள் நேர்மையாக தேர்தலை நடத்துவார்கள் என்று நம்புவதற்கில்லை என்றும் பலர் தங்களுடைய கருத்துகளை முன்வைத்தனர்.

இதனை தொடர்ந்து, இனியும் காலம் தாழ்த்தாமல், தேர்தலை நேர்மையாக நடத்தி முடிப்பதற்கு, பத்திரிகையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒரு தீர்மானகரமான முடிவை எடுக்க வேண்டும் என்ற கருத்து வலுப்பெற்றது. அந்த கருத்தின் படி, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுக்குழுவை உடனடியாக கூட்ட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவை கூட்டுவதற்கான ஏற்பாட்டை செய்வதற்காக மூத்த பத்திரிகையாளர்களை உள்ளடக்கிய குழு உருவாக்கப்பட்டது. தேவை ஏற்படின், இந்த குழுவில் புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்தக்குழு விரைவில் கூடி, பத்திரிகையாளர் மன்றத்தின் பொதுக்குழுவை கூட்டுவதற்கான ஏற்பாட்டை செய்யும் என்றும், அவ்வாறு கூட்டப்படும் பொதுக்குழுவில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்தலை நேர்மையாக நடத்தி முடிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.