பத்திரிகையாளர் ஜாபர் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது!

0
863

பத்திரிகையாளர் ஜாபர் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது!
ஜாபர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது வழக்கு பதிவு செய்வதுடன், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றது.

உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாளான இன்று (03.10.16), வேட்பு மனு தாக்கல் குறித்த செய்தி சேகரிப்பதற்காக, தீக்கதிர் பத்திரிகையின் செய்தியாளர் ஜாபர், மணலி புதுநகரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அலுவலகத்திற்கு சற்று அருகே தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த மணலி புதுநகர் காவல் நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர், வாகனத்தை அங்கு நிறுத்தக் கூடாது என்று தகராறு செய்துள்ளனர். ஜாபரை தாகத வார்த்தைகளில் திட்டியுள்ள அவர்கள், செய்தி சேகரிக்க மாநகராட்சி அலுவலகத்திற்குள் செல்வதற்கும் அனுமதி மறுத்துள்ளனர்.
செய்தி சேகரிக்க தடை ஏற்படுத்திய காவல்துறையினரின் அரஜாகபோக்கை எதிர்த்து கேள்வி கேட்ட ஜாபரை, பத்திரிகையாளர் என்றும் பாராமல், காவல்துறையினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் ஜாபரின் கன்னப்பகுதியில் பெரும் வீக்கம் ஏற்பட்டதுடன், அவருடைய காதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது ஜாபர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜாபர் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது.
இந்த தாக்குதலுக்கு காரணமான காவல்துறையினர் மீது உரிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வதுடன், அவர்கள் மீது துறைரீதியிலான நடவக்கை எடுக்க தமிழக டிஜிபி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.
பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற தொடர் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பணியிலிருக்கும் பத்திரிகையாளர்களை பாதுகாக்கும் சிறப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒன்று கூடி வலியுறுத்த வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கின்றது.