பத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்படும் அவதூறை கண்டித்து, கருத்து சுதந்திர ஒடுக்குமுறைக்கு எதிரான கண்டனக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

0
818

சென்னை பத்திரிகையாளர் சங்கம், மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், தமிழ்நாடு பிரஸ் போட்டோகிராபர்ஸ் அசோசியேஷன், தமிழ்நாடு மீடியா கேமராமேன் அசோசியேஷன், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் ஆகிய அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய, கருத்து சுதந்திர ஒடுக்குமுறைக்கு எதிரான கண்டனக்கூட்டம் நேற்று (26.03.17) மாலை 6 மணிக்கு சென்னை பத்திரிகையாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், வி.வி.மினரல்ஸ் தொடர்பாக எழுதிய கட்டுரையை தொடர்ந்து, பத்திரிகையாளர் சந்தியாவுக்கு எதிராக சமூக வளைதளங்களில் தொடரப்படும் அவதூறுகள் தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராக விடுக்கப்படும் மிரட்டல்கள் ஆகியவற்றிற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கப்பட்டது. சந்தியா மட்டுமின்றி மேலும் பல பத்திரிகையாளர்கள் இந்த குறிப்பிட்ட நிறுவனத்தால் மிரட்டப்பட்டுள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டது. சந்தியாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள இந்த அவதூறு பிரச்சாரம் மற்றும் மிரட்டல்கள் அனைத்தையும் ஒட்டுமொத்த பத்திரிகையாளர்களுக்கும் எதிரானதாக பார்க்க வேண்டும் என கூட்டத்தில் பேசியவர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் பேசிய சந்தியா, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், தனக்கு எதிராக வி.வி.மினரல்ஸ் அதிபர் தெரிவித்துள்ள அவதூறான கருத்துகளை சுட்டிக்காட்டி பேசினார். இந்த விசாரணையை நடத்திய அதிகாரிகள் தன் தரப்பு கருத்தை கேட்காமல் ஒருதலை பட்சமாக செயல்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டி பேசினார். இதன்பின் பேசிய பத்திரிகையாளர்கள், அந்த குறிப்பிட்ட அறிக்கையில், சந்தியாவுக்கு எதிராக இடம்பெற்றுள்ள கருத்துகளை திருத்தம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தனர். அதேபோல், தொலைபேசி மற்றும் சமூகவளைதளங்களில் அவதூறு பரப்பியவர்கள் மீது சந்தியா, தனிப்பட்ட முறையில் கொடுத்துள்ள புகார் மீது, காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கங்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அடுத்த இரண்டு தினங்களில், பத்திரிகையாளர் அமைப்புகள் ஒருங்கிணைந்து, இந்த கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கருத்துகளை செயல்படுத்துவது தொடர்பாக திட்டம் வகுக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது.