பத்திரிகையாளர்கள் மீது தொடரும் தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கின்றது! தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென்று, தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகின்றது!

0
659

நேற்றைய தினம் (04.05.16) சென்னை பெருங்குளத்தூரில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனம் மீது எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அங்கு செய்தி சேகரிக்கச் சென்ற நியூஸ் 7 மற்றும் சன் தொலைக்காட்சியை சேர்ந்த செய்தியாளர்களை, அந்த நிறுவனத்தின் காவலர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர். காவல்துறையிலிருந்து ஓய்வு பெற்ற உதவி ஆணையர் ஒருவரும், பத்திரிகையாளர்களை தாக்கியுள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, பீக்கங்கரணை காவல்நிலையத்தில் தாக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிகழ்வு தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பத்திரிகையாளர்கள் மீது கொலை வெறி தாக்குதலை நடத்திய, காவல்துறையின் முன்னாள் துணை ஆணையர் உட்பட இதுவரை யாரையும் கைது செய்ததாக தகவல் இல்லை.

இந்த நிகழ்வை தொடர்ந்து இன்றைய தினம் (05.05.16), செய்தி சேகரிக்கும் அலுவல் நிமித்தமாக, நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளர் சஞ்சீவி, சென்னை அவ்வை சண்முகம் சாலையில் அமைந்துள்ள, அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு கூடியிருந்த ஒரு கும்பல், நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும், தேர்தல் கருத்து கணிப்பு நிகழ்ச்சியை சுட்டிக்காட்டி, சஞ்சீவியிடம் தகராறு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில், சஞ்சீவியை அடிக்கப்பாய்ந்துள்ள அந்த கும்பல், நியூஸ் 7 அலுவலகத்தை, தீயிட்டு கொலுத்திவிடுவோம் என்றும் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளனர். நிலைமை மோசமாகவிட்ட சூழ்நிலையில், சஞ்சீவி, அதிமுக அலுவலத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

ஜனநாயகத் திருவிழா என்று அழைக்கப்படும் இந்த தேர்தல் நேரத்தில், கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல், கால நேரம் பாராமல் களத்தில் நின்று மக்களுக்கான செய்தியை, பத்திரிகையாளர்கள் வழங்கி வருகின்றனர். இந்த செய்திகள், மக்கள் தங்களின் சரியான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கு மிகவும் உதவிகரமாக அமையும் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த வகையில், தேர்தல் காலத்தில் பத்திரிகையாளர்கள் ஆற்றும் பணி, மற்ற காலங்களில் அவர்களால் செய்யப்படும் பணியை விடு மிக மிக முக்கியமானது. ஒருவகையில், ஜனநாயத்தை பண்படுத்தக்கூடிய பணி என்று கூட இதை கருதலாம். அப்படிப்பட்ட மேன்மையான பணியை மேற்கொண்டு வரும் பத்திரிகையாளர்களை பணிசெய்யவிடாமல் தடுக்கும் நோக்கத்தில், குண்டர்கள் நடத்தும் தாக்குதலை, ஜனநாயத்தின் மீது நம்பிக்கை கொண்டு யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அந்தவகையில், தேர்தலை நேர்மையாக நடத்தி முடிக்க உறுதியேற்றிருக்கும் தேர்தல் ஆணையம், தான் ஏற்றுக்கொண்டுள்ள பணியின் ஒருபகுதியாக, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது. அத்துடன், பத்திரிகையாளர்களிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என, அனைத்து கட்சியின் தலைவர்களும் தங்கள் தொண்டர்களுக்கு வலியுறுத்த வேண்டும் என, தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கின்றது.