பத்திரிகையாளர்களை தேசதுரோகி என்று கூறிய பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

0
646

சமீப காலத்தில், தேச துரோகி என்ற சொல் ஆளும் தரப்பினரால் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. தனது உரிமைகளுக்காக போராடுபவர்களும், அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுபவர்களும், தேச துரோகிகள் என்று குற்றம்சாட்டப்படுவது தொடர்கதையாகி வருகின்றது.

இந்நிலையில், நேற்று பட்டுக்கோட்டையில் பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தொடர் போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகளை பிரதமர் சந்திக்காதது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இந்த கேள்விக்கு எச்.ராஜா மழுப்பலான பதிலையே அளித்தார். தமிழகத்தில் வறட்சி நிலவும் சூழ்நிலையில், போதுமான நிதியை தமிழகத்திற்கு ஒதுக்காமல், கென்யா நாட்டிற்கு மத்திய அரசு நிதி அளித்துள்ளதை செய்தியாளர்கள் சுட்டிக்காட்டினர். இந்த கேள்விக்கு பதிலளிக்காமல், கேள்வியை கேட்ட செய்தியாளர்களை தேச துரோகிகள் என்று எச்.ராஜா கூறியுள்ளார். மேலும், தமிழகத்தில் உள்ள ஊடகங்கள் பிரதமரை திட்டமிட்டு கொச்சை படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

கேள்வியெழுப்பும் செய்தியாளர்களிடம் எதிர்கேள்வி கேட்பதும், அவர்கள் எந்த ஊடகத்தை சேர்ந்தவர்கள் என்று கேள்வியெழுப்பி அந்த கேள்வியை திசைதிருப்புவதும், ஒரு தந்திரமாகவே பல அரசியல் தலைவர்கள் பயன்டுத்துகின்றனர். இது நிச்சயமாக கண்டிக்கத்தக்க ஒரு நடவடிக்கை. ஆனால், அதற்கு ஒருபடி மேலேபோய், கேள்வி கேட்ட செய்தியாளரை தேச துரோகி என்று எச்.ராஜா கூறியிருப்பது அரசாளும் ஒரு கட்சியின் தேசிய பொறுப்பு வகிக்கும் ஒரு தலைவருக்கு அழகல்ல. மேலும், இந்த செயல், பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையில் அமைந்துள்ளதால், பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை செய்யவிடாமல் தடுக்கும் ஒரு செயலாகவே பார்க்க வேண்டும். அதாவது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான ஒரு நடவடிக்கையாகவே பார்க்க வேண்டும். ஆளும் கட்சியின், தேசிய பொறுப்பில் உள்ள எச்.ராஜா, பத்திரிகையாளர்களுக்கு எதிராக தெரிவித்துள்ள இந்த கருத்து தவறான ஒரு முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, பத்திரிகையாளர்களுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை எச்.ராஜா உடனடியாக திரும்பபெறுவதுடன், பத்திரிகையாளர்களிடம் உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.