பத்திரிகையாளர்களாக தங்கள் பணியை செய்த, கன்னியாகுமரி மாவட்ட ஜூனியர் விகடன் செய்தியாளர் மற்றும் புகைப்பட கலைஞர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

0
492

குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து, அதில் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க, வழிவகை செய்யும் ஷரத்துகளை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றம் சமூக செயல்பாட்டாளர்களால் முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், முகாம்களில் வசிக்கும் இலங்கை அகதிகளிடம் கருத்து கேட்க ஜூனியர் விகடன் வாரஇதழ் திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அந்தந்த மாவட்டங்களில் வசிக்கும் இலங்கை தமிழர்களிடம் கருத்து கேட்டு அனுப்புமாறு செய்தியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்தொடர்ச்சியாக, கன்னியாகுமரி மாவட்டத்தின் ஜூனியர் விகடன் செய்தியாளர் சிந்து மற்றும் புகைப்படக் கலைஞர் ராம்குமார், தங்கள் பணியை செய்வதற்காக, அங்குள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர், இலங்கை தமிழ் அகதிகளிடம் சிந்துவை பேச விடாமல் தடுத்துள்ளனர். மேலும், சிந்து மற்றும் ராம்குமாரை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளனர்.

இந்நிலையில், செய்தியாளர் சிந்து மற்றும் புகைப்படக் கலைஞர் ராம்குமாருக்கு எதிராக மார்த்தாண்டம் காவல்நிலையத்தில் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 447 (குற்ற எண்ணத்துடன் அத்துமீறி நுழைதல்), 188 (அரசாங்க அதிகாரிகளை பணிசெய்ய விடாமல் தடுத்தல்), 508 (b) (மக்களிடம் பீதியை ஏற்படுத்தி, அரசுக்கு எதிரான செய்தியை பரப்புதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஐபிசி பிரிவு 508 (b) பிணையில் வெளிவரமுடியாத பிரிவு ஆகும்.

செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளரை பணி செய்யவிடாமல் தடுத்தது காவல்துறையினர். அவர்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியது காவல்துறையினர். காவல்துறையின் இந்த செயல், இந்திய அரசமைப்பில் வழங்கப்பட்ட கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் செயலாகும். இந்திய அரசமைப்பு சட்டத்தை மதிக்காமல், இதுபோன்ற அடாவடி நடவடிக்கையில் ஈடுபட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்மை இவ்வாறு இருக்க, செய்தியாளர் மீதும், புகைப்படக்கலைஞர் மீது வழக்கு தொடர்ந்திருப்பது, அதிகாரத்தில் உள்ளவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்று வெளிப்படையாக கூறுவதைப்போல் உள்ளது. அத்துடன், ஒவ்வொரு பத்திரிகையாளர்களையும் மறைமுகமாக மிரட்டும் வகையிலும் உள்ளது.

ஆகவே, இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும், அரசமைப்பு சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையை பறிக்கும் வகையில், மார்த்தாண்டம் காவல்துறையினர் நடந்துகொண்டுள்ளதை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

செய்தியாளர் சிந்து மற்றம் புகைப்படக்கலைஞர் ராம்குமார் மீது போடப்பட்டுள்ள வழக்கை, காவல்துறையினர் உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

கருத்துச்சுதந்திரத்தை பாதுகாக்க, அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகள் ஒன்றிணைந்து, இந்த கோரிக்கைகளை வென்றெடுக்க குரல் கொடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.