நாங்கள் விடுதலை வேண்டியே செல்கிறோம் நெடும்பயணம் – அருண்மொழி வர்மன்

0
304

நெடுஞ் சாலை ஓரம்,
தெற்கிலிருந்து வடக்குமாய் மேற்கிலிருந்து கிழக்குமாய்
நெடுந்தூரம் செல்கிறது
எங்கள் பயணங்கள்.

கூடாரங்களில்,
உணவகங்களின் புழக்கடையில், சிறைவைக்கப்பட்ட நாங்கள் விடுதலை வேண்டியே
செல்கிறோம் நெடும்பயணம்.

இரண்டாம் நாளே
கிழிந்தது என் பழைய செருப்பு மூன்றாம் நாளோ
என் பாதங்கள்
கருப்பு ரோட்டில்
சிகப்பு கோலங்கள் வரையும் நாங்களும் ஓவியர்களே. எங்களுக்குள்ளும்
இன்னும் பலர் உண்டு
நடுரோட்டில்
பிள்ளை பெற்ற தாய்
சவரக் கத்தியால்
மருத்துவம் பார்த்த மருத்துவச்சி
என இன்னும் பலர்….

பயணத்தின் ஊடாய் பல நடந்தது சோறு கொடுத்த இளசுகள்
ஓட ஓட அடித்த தடிகள்
மழை பொழிந்த மேகங்கள்
மருந்தை தெளித்து அதிகாரிகள்….

பாதங்களால் மண்ணளந்த நாங்கள் விஷ்ணுக்கள் அல்ல
கனவான்களின் கருணையைப் பெற நாங்கள் பசுக்களும் அல்ல
வெறும் பஞ்சம் பிழைக்க
காடுகளை விட்டு வெளியேற்றப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்…..