நன்றி சொல்லி எழுதிய கடிதத்தின் ஈரம் காயும் முன், கண்டன அறிக்கையை எழுத வைக்கலாமா? கொரோனாவால் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு திமுக சார்பில் நிவாரணம் வழங்கியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அதேநேரம், கலைஞர் தொலைக்காட்சியின் சம்பளக் குறைப்பு அறிவிப்பை திரும்பப்பெற, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலளார்கள் மையம் வலியுறுத்துகிறது.

0
1053

கொரோனா தொற்று உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், சென்னையில் நாற்பதுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்களை தொடர்ந்து அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கும் கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் முன்களப் பணியாளர்களுக்கு இணையாக பணியாற்றிவரும் பத்திரிகையாளர்களுக்கு தொற்று ஏற்பட்டதை அறிந்து, திமுக சார்பாக நிவாரணம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, அனைவருக்கும் தலா 10ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

காலத்தால் செய்த நன்றி, இந்த உலகத்தை விட மிகப்பெரியது என்ற வாக்கிற்கு இணங்க, பத்திரிகையாளர்களின் நிலையை அறிந்து தக்க தருணத்தில் உதவி செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
உதவிக்கு நன்றி தெரிவிக்கும் அதேநேரத்தில், கலைஞர் தொலைக்காட்சியில் பணியாற்றும் எங்கள் சக பத்திரிகையாளர்களின் சம்பளத்தை குறைக்கப்போவதாக, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியிருப்பதை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்துள்ளோம்.

கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி, ஆட்குறைப்பு மற்றும் சம்பளக் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், அதை பொருட்படுத்தாமல் பல நிறுவனங்கள் இதுபோன்ற செயலில் ஈடுபடத் தொடங்கிவிட்டன. இந்த தருணத்தில், எதிர்கட்சி என்ற அடிப்படையில், முதலாளிகளின் சுயநலப்போக்கை அரசுக்கு சுட்டிக்காட்டி, தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்க வேண்டியது திமுகவின் கடமையாகும்.

ஆகவே, கலைஞர் தொலைக்காட்சியில் அறிவிக்கப்பட்டுள்ள சம்பளக் குறைப்பு நடவடிக்கையை உடனடியாக கைவிட அந்த நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.

அதேபோல், சம்பளக் குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் நடவடிக்கையை எதிர்த்து குரல் கொடுத்துவரும் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு, திராவிட முன்னேற்றக் கழகம் தோள்கொடுக்க வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.