நக்கீரன் மற்றும் சன்டிவியின் செய்தியாளர்கள் மீது காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது

0
547

தமிழக ஆளுநர் மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் மற்றம் கருப்பசாமிக்கு சில தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிர்மலா தேவி இன்று (14.02.19) திருவில்லிபுதூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த அழைத்து வரப்படுவதாக இருந்தது. இதை அறிந்து இதுகுறித்து செய்தி சேகரிக்க செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்படக் கலைஞர்கள் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.

                வழக்கமாக செய்தியாளர்கள் நீதிமன்றத்திற்குள் சென்று வழக்கு விசாரணையை கேட்க அனுமதிக்கப்படுவார்கள். இது உலக அளவில் நடைமுறையில் உள்ள ஒன்று. ஆனால், இன்றையை தினம் வழக்கத்திற்கு மாறாக நீதிமன்றத்தில் நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்ட காவல்துறையினர், நீதிமன்றத்திற்குள் செல்ல பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுத்துள்ளனர். அத்துடன், நிர்மலா தேவியை நீதிமன்றதிற்கு அழைத்து வந்த காவல்துறையினர் அவரிடம் யாரையும் நெருங்கக் கூட அனுமதி மறுத்துள்ளனர்.

                நீதிமன்றத்தில் நேர் நிறுத்தப்பட்ட நிர்மலா தேவியை மீண்டும் சிறையில் அடைப்பதற்காக காவல்துறையினர் நீதிமன்ற கட்டிடத்திலிருந்து கீழே அழைத்து வந்துள்ளனர். அப்போது அவரை படம் பிடிக்க அங்கு கூடியிருந்த ஒளிப்பதிவாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் முயன்றுள்ளனர். அப்போது போலீசார் நிர்மலா தேவியை படம் பிடிக்க விடால் அவர்களை தடுத்ததுடன் அவர்களை பிடித்துதள்ளி விட்டதுடன் பத்திரிகையாளர்களை விரட்டியடித்துள்ளனர்.

                காவல்துறையின் இந்த காட்டுமிராண்டிதனத்தால், சன் டிவியின் செய்தியாளர் மணிகண்டனுக்கு கை எலும்பு மூட்டு இறங்கியுள்ளது. இதனால் அவர் உடனடியாக திருவில்லிபுதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ச்சியில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், அதற்கும் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதேபோல், காவல்துறையின் அத்துமீறலால் நக்கீரன் இதழின் செய்தியாளர் ராமகிருஷ்ணனின் கை முறுக்கப்பட்டு அவருடைய கேமரா மற்றும் கை கடிகாரம் உடைக்கப்பட்டுள்ளது.

                காவல்துறையின் இந்த கீழ்த்தரமான நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த பத்திரிகையாளர்கள் அனைவரும், டி.எஸ்.பி ராஜாவின் வாகனத்தை முற்றகையிட்டு முறையிட்டுள்ளனர். ஆனால், அவர் பத்திரிகையாளர்களுக்கு எந்த பதிலையும் தராமல் அங்கிருந்த சென்றுவிட்டார்.

                முக்கிய பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட இந்த வழக்கில், வழக்கு விசாரணையை அறிந்துகொள்வதற்கு காவல்துறையினர் திடீரென பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி, அவர்கள் மீது தாக்குதல் நடத்தி அவர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததன் மூலம் காவல்துறையினர் அரசியல் சானத்தை மீறியுள்ளனர் என்பது அப்பட்டமாகிறது.

                ஆகவே, பத்திரிகையாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்த காவல்துறையினர் மீது உடனடியாக வழக்கு தொடர தமிழக காவல்துறை தலைவர் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவிலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

                தாக்குதலில் காயமடைந்த பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்குவதுடன், சேதமடைந்த பத்திரிகையாளர்களின் சொத்துக்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

                நீதிமன்ற நடவடிக்கையை அறிந்துகொள்ள பத்திரிகையாளர்களுக்கு தடை விதித்த காவல்துறை அதிகாரி யார் என்பதையும், யாருடைய கட்டளையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பதையும் கண்டறிய தமிழக அரசு சிறப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

                பத்திரிகையாளர்களின் உரிமையை நிலைநாட்டவும், பாதுகாப்பை உறுதி செய்யவும், அச்சமின்றி நேர்மையாக பணி செய்வதை உறுதி செய்யவும் அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்பும் ஒருங்கிணைந்து மேற்கூறிய கோரிக்கைகளை வலியுறுத்த வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.