தோழர் முத்துக்குமரனுக்கு

0
592

மிகத்தெளிவாக கடிதம் அது.அந்த கடிதத்தின் ஒட்டுமொத்த சாராம்சம் இதுதான்

‘அங்கு கொத்து கொத்தாய் கொல்லப்படும் தமிழின உறவுகளை என் இறந்த உடலை வைத்து அரசியல் செய்தேனும் காப்பாற்றிவிடுங்கள்’.

முத்துக்குமரன் தன் உடலில் மற்ற வைத்த நெருப்பு, பெரிய கட்சிகளின் மீது நம்பிக்கையிழந்த ஒரு சாமானியன் தன்னுடைய தமிழின சகோதரர்களை நோக்கி,இந்த கட்டமைப்பின் பிடியில் சிக்கி பொது மக்களுக்கு எதிராக ஏவி விடப்படும் காவல்துறை நண்பர்களை நோக்கி,ஒரு தேசிய இனம் ஒடுக்கப்படுகிறது என தமிழ்நாட்டில் தங்கி வேலை பார்க்கும் வேற்று மொழி  தோழர்களை நோக்கி மிகத்தெளிவான அரசியல் பார்வையுடன் விடுத்த அறைகூவல் அது.

ஆட்சியை பிடிப்பதற்காக கொடுக்கப்படும் போலி வாக்குறுதிகளை நம்பி நம்பி வெறுத்துப்போய்விட்டது,மாநில சுயாட்சி என்ற வார்த்தையே பச்சை பொய்,மாநில அரசுகள் மத்திய அரசினுடைய கொத்தடிமைகள்,இவர்களால் ஒரு மாற்றத்தையும் நிகழ்த்த முடியாது,மாற்றம் மாற்றம் என்று பேசிக்கொண்டு,இந்த கட்டமைப்பை பாதுகாக்கும் பாதுகாவலர்களை நம்பி இனிமேலும் பயனில்லை.உண்மையான மாற்றத்திற்கு சாதி,மதம்,மொழிக்கடந்து மக்கள் அணிசேர வேண்டும் தமிழ் நெஞ்சங்களை சாலையில் கொண்டு வந்து நிறுத்தப்போகும் பெருநெருப்பு எது?அதை பற்றி வைக்கப்போவது யார்?மக்களை தெருக்களில் கொண்டு வந்து நிறுத்தப்போகிற அந்த உடனடிக்காரணம் என்னவாக இருக்க முடியும்?என தன் கண்முன்னே விரிந்த கேள்விகளுக்கு அண்ணண் முத்துக்குமரன் கண்டடைந்த பதில் ‘தன் பிணத்தின் மீதான அரசியல்’.என் உடலை ஆயதமாக்கி போராடுங்கள்,என் உடலை வைத்து ஒரு அரசியல் போராட்டத்தை நடத்துங்கள் என்பதே அண்ணண் முத்துக்குமரனுடைய கோரிக்கை.

இது ஒரு சர்வதேசிய பிரச்சனை,இந்திய ஒன்றியம் இலங்கைக்கு தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுக்கிறது.என் உடலை வைத்து நடத்துகிற போராட்டத்தின் மூலம் இந்திய ஒன்றியத்துக்கு குறைந்தபட்ச நெருக்கடியையேனும் கொடுத்துவிடுங்கள் என்பதே அண்ணண் முத்தக்குமரனுடைய கடைசி ஆசையாக இருக்க முடியும்.அண்ணண் முத்துக்குமரனுடைய இறப்பு அரசியலற்று சுற்றிக் கொண்டிருந்த இளைஞர் கூட்டத்தை ஊசுப்பிவிட்டது,மாணவர்,இளைஞர்கள் அமைப்புகள் காயடிக்கப்பட்டுவிட்டன,அவர்களால் எந்த அரசியல் போராட்டத்தையும் நடத்தவிட முடியாது என்ற ஆளும் வர்க்க கனவு அண்ணண் முத்துக்குமரன் வைத்த நெருப்பில் சாம்பலானது,அண்ணண் முத்துக்குமரனுடைய கடிதம் படிப்பவர்கள் நெஞ்சில் போராட்டத்தீயை பற்ற வைத்தது,கட்டுக்கடங்காத இந்த கூட்டத்தின் முன் இந்த அரசினுடைய ஒடுக்குமுறை கருவிகள் நிர்மூலமாக்கப்பட்டன,அண்ணண் முத்துக்குமரன் நினைத்தது சரியாகவே நடந்துக்கொண்டிருந்து.ஆம் அவருடைய உடலை வைத்து அரசியல் செய்யப்பட்டது,போராடிய சிறு சிறு குழுக்கள் தங்களுடைய குறைந்தபட்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரை உடலை அடக்கம் செய்யக்கூடாது என்ற கோரிக்கையை வைத்தனர்.போராட்டம் கிட்டத்தட்ட மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளால் கைப்பற்றப்பட்டது.

அரசுக்கெதிராக போராட்டம் திரும்புகிறது.அரசு இந்த போராட்டத்தை நீர்த்துப்போக செய்ய வேண்டும்.ஆயுதங்கள் மூலம் ஒடுக்குவது அரசுக்கு மேலும் நெருக்கடியை தரும்.இக்கட்டான சூழ்நிலையில் தவித்த அரசு ஒரு ஆயதத்தை பயன்படுத்தி இரண்டு நாட்களில் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்தது.

அரசு தேர்ந்தெடுத்த ஆயுதம் என்ன?அடுத்த மூன்று நாட்களில் போராட்டம் எப்படி கட்டுப்படுத்தப்பட்டது?அரசினுடைய ஏஜென்ட்டுகளாக முன்னின்று போராட்டத்தை கட்டுப்படுத்தியர்வர்கள் யார்?ஒட்டுமொத்த தமிழினமும் சேர்ந்து நின்று நடத்த வேண்டிய அந்த மாவிரனுடைய கடைசி ஊர்வலம் ஆள் அரவமற்ற ஒரு நடைபாதையில் கொண்டு செல்லப்பட காரணமாய் இருந்தவர்கள் யார்?இந்த ஒட்டுமொத்த கேள்விகளுக்கான பதில் உங்களுடைய ஓட்டரசியல் கட்சி கதாநாயகர்கள்.உங்களுடைய புரட்சிகர அண்ணண்கள் மற்றும் புரட்சிகர போராளிகள்.என் உடலை வைத்து அரசியல்  செய்யுங்கள் என அறைக்கூவல் விடுத்த முத்துக்குமரனுடைய தியாகம் ஒன்றிரண்டு ஓட்டுக்களுக்காக அடமானம் வைக்கப்பட்டு,போராட்டம் நீர்த்துப்போக செய்யப்பட்டது.

அண்ணண் முத்துக்குமரனுடைய நோக்கம் ஈடேறவில்லை,ஆனால் முத்துக்குமரனுடைய இறப்பு அதைத்தொடர்ந்து நடந்த சம்பவங்கள் இத்தனை நாள் புரட்சிகர வேடமணிந்த சந்தர்ப்பவாதிகளுடைய முகத்திரையை  கிழித்தெறிந்திருக்கிறது.

ஒரு மக்கள் திரளை அரசியல்படுத்தி முன்னோக்கி செலுத்துகிற ஒரு சரியான இயக்கம் மற்றும் தன்னலமற்ற தலைவன் இங்கு இல்லவே இல்லை என்பதே அண்ணண் முத்துக்குமரன் நமக்கு விட்டுச்சென்ற படிப்பினை.

தோழர் முத்துக்குமரனுக்கு வீரவணக்கம்.