தேவர்மகன்களின் தோல்வியும் கபாலிகளின் வெற்றியும் – அருண்மொழிவர்மன்

3
6927

சமீபத்தில் அரிமா சங்க நிகழ்ச்சியில் பேசியுள்ள கவிஞர் வைரமுத்து தொலைந்து போன விமானத்தின் வரிசையில் கபாலியின் தோல்வியை ஏற்றுக்கொண்டாக வேண்டும் என்று கூறியுள்ளார். இதே போன்று கலைஞானி கமலஹாசனோ கபாலி திரைப்படத்தின் வெற்றி வெறும் ரஜினியின் ஜிகினாவித்தையின் வெற்றி என்பது போலவே வாழ்த்தியுள்ளார். “நீ அரசியலை விட்டு விலகி இருக்கலாம், ஆனால் அரசியல் உன்னை விட்டு விலகுவதில்லை, அது உன்னுடனேயே இருக்கின்றது’. என்ற வைரமுத்துவின் வார்த்தையிலேயே இவர்கள் இருவரின் விமர்சனத்தின் உள் அரசியல் புதைந்திருப்பது தெளிவாகின்றது.

கபாலி திரைப்படம் தோல்வியா?

உலகம் முழுக்க திரையிடப்பட்டு மிக பெரிய வெற்றி அடைந்துள்ள கபாலி எந்த வகையில் வைரமுத்துவின் பார்வையில் தோல்வியடைந்துள்ளது என்பதை நாம் புரிந்துகொண்டாக வேண்டும். அவருக்கு வாய்ப்பு வழங்கபட வில்லை என்பதால் இதை தோல்வி என்று கூறுகின்றாரா?, அப்படி கூறுவதென்றால் அவரால் எழுத முடியாத எல்லா படங்களுக்கும் இதை சொல்லியுள்ளாரா என்று பார்த்தால் இல்லை என்பது தான் விடையாக வருகின்றது. பின் என்ன காரணம்,
திரைமொழியில் குற்றமா? அப்படி பார்த்தாலும் திரைக்கதையில் என்ன என்பது பற்றி தெரிவித்திருக்கலாமே? ஏன் தெரிவிக்கவில்லை? அவர் சொல்லும் தோல்வி அதுவும் அல்ல பின் என்னதான் காரணம்? என்ற கேள்வி எழலாம். அதே மேடையில் கபாலி திரைப்படம் குறித்து அவர் மற்றொரு கருத்து நமக்கு தெளிவாக்கலாம். “அரிமா சங்கத்தை பார்த்து தான் ரஞ்சித் ரஜினிக்கு கோட்டு மாட்டியுள்ளார்” “கபாலிக்கு முன்னரே கோட்டு மாட்டியவர்கள் அரிமா சங்கத்தினர்” அதையும் தாண்டி அதை சொன்னது அவர் நாவின் சுழற்சி இவை விலக்குகின்றது அதன் விடையை. “நான் முன்னேறது புடிக்கலனா, நான் முன்னேறுவேண்டா, கோட்டுசூட்டு போடுவேண்டா ஸ்டைலா கெத்தா” இந்த ஒற்றை வசனத்திலேயே வைரமுத்து சொல்லும் தோல்வியும், ரஞ்சித்தின் வெற்றியும் நமக்கு காட்டு கின்றது.

கிழக்கு சீமையிலே படத்திலே வரும் முரட்டு மீசை வைத்தவர்களின் கதை என்றால் வைரமுத்துவிற்கு வெற்றிக்கான கதையாக பட்டிருக்குமோ என்னவோ, டேய் கபாலி என்று நம்பியார் அழைத்தவுடன் சொல்லுங்க எசமானு வந்து நிற்கும் கபாலிகள் கோட்டு சூட்டு போட்டது தோல்விக்கான காரணமாகியுள்ளது. ரஞ்சித் கோட்டை காப்பி அடித்துள்ளார் என்பது உண்மைதான், அது எங்கு யாரிடமிருந்து என்பதையும் அவர் தெரிவித்த பிறகும் அம்பேத்கரை நிராகரித்து அரிமா சங்கம் என்று சொல்லும் போதே புரிகின்றதே படம் தோல்வியா அல்லது வைரமுத்து என்ற முரட்டு மீசை காரரின் வாரிசுக்கா? பிறப்பால் உயர்வு தாழ்வு பார்ப்பவரே பார்ப்பனியர். என்பது போல் வைரமுத்துவும் என்பதை நிரூபித்துவிட்டார். மார்க்சிய வாதியாக அறியபட்ட வைரமுத்து பிற்காலத்தில் கலைஞரின் ஒத்தாக மாறி தருண்விஜய்க்கு பாராட்டு விழா நடத்தும் போதே புரிய வேண்டாமா வைரமுத்து சொல்லும் தோல்வி எதுவென்று.

கமலஹாசனின் பாராட்டுக்கள்

கலைஞானி, முற்போக்கு கலைஞன் என்றெல்லாம் தன்னை அழைத்து கொள்ளும் கமலஹாசன் கபாலி படத்திற்கு எழுதிய பாராட்டு மடல் அவரது ஞானத்தை காட்டியுள்ளது. கபாலி என்பது ரஜினியின் திரைப்படம் அல்ல அது ரஞ்சித்தின் திரைப்படம் என்று ஊரே சொல்லும் போது ரஜினியை மட்டும் ரசிதிருக்கும் கமல். கலை என்பது பாமர மக்களிடம் அரசியலை கொண்டு செல்லும் ஆயுதம் என்பதையே புறக்கணித்துள்ளார்.

அம்பேத்கர் கோட்டை போட்டதற்கும், காந்தி கோட்டை கழட்டியதற்கும்
வைரமுத்து கேலிசெய்ததற்கும், கமலஹாசன் பாராட்டியதற்கும் பின்னால் பெரிய அரசியல் உள்ளது.

கபாலிகளின் வெற்றியே தேவர்மகன்களின் எதிர்ப்புதான். நடைபோடுங்கள் தோழர். பா. ரஞ்சித்.

– அருண்மொழிவர்மன்