கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதை தொடர்ந்து, நிறுவனங்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என்றும் சம்பள பிடித்தம் செய்யக் கூடாது என்றும் மத்திய உள்துறை அமைச்சகமும், தொழிலாளர் நலத்துறை அமைச்சகமும் அனைத்து நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளன. தமிழக அரசும் நிறுவனங்களுக்கு இதே வேண்டுகோளை விடுத்துள்ளது.
ஆனால், மத்திய மாநில அரசுகளின் இந்த உத்தரவையும், வேண்டுகோளையும் கிஞ்சித்தும் மதிக்காமல் ஏறக்குறைய அனைத்து ஊடக நிறுவனங்களும் சம்பளக்குறைப்பை செய்துவருகின்றன. ஒரு சில நிறுவனங்கள் இதுவரை தொழிலாளர்கள் செய்த பணியை மதிக்காமல், அவர்களுடைய எதிர்காலத்தை கருத்தில்கொள்ளாமல் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன.
ஆளும் கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய, திமுகவின் ஊதுகுழலான கலைஞர் தொலைகாட்சி, கொஞ்சமும் மனசாட்சியில்லாமல் 40 சதவீதம் வரை ஊதிய குறைப்பு செய்துள்ளது. தன்னை கம்யூனிஸ்ட்டு என்றும் தொழிலாளர்களின் தோழன் என்றும் காட்டிக்கொள்ளும் என்.ராம் தலைமையிலான இந்து குழுமமும் 30 சதவீதம் வரை சம்பள குறைப்பு செய்துள்ளது. இதேபோல், சம்பளத்தை குறைத்ததுடன், 176 தொழிலாளர்களை ஒரே இரவில் ஈவு இரக்கமின்றி பணிநீக்கம் செய்துள்ளது விகடன் நிர்வாகம். தொழிலாளர் இயக்கத்தை தோற்றுவித்த காரல் மார்க்சும் எங்கள் கட்சியின் முன்னோடிகளில் ஒருவர் என்று கூறிக்கொள்ளும் பாட்டாளி மக்கள் கட்சி, அதன் சார்பாக நடத்தப்படும் மக்கள் தொலைகாட்சியில் அநியாயமாக 50 சதவீதம் சம்பளகுறைப்பை அமுல்படுத்தியுள்ளது. தமிழகத்தின் முன்னோடி பத்திரிகைநிறுவனமான தினத் தந்தி, தனது ரேடியோவிலும், தொலைகாட்சியிலும் பணியாற்றும் சுமார் 100 பேரை சட்டத்திற்குப் புறம்பாக பணிநீக்கம் செய்துள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரரான அம்பானியால் நடத்தப்படும் நியூஸ் 18 குழுமம் கொஞ்சமும் நியாயமின்றி 10 சதவீதம் சம்பளத்தை குறைத்துள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய கல்வி குழுமமான எஸ்.ஆர்.எம் குழுமத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கோடீஸ்வரர் பாரிவேந்தரால் நடத்தப்படும் வேந்தர் தொலைகாட்சி 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை இரக்கமின்றி வேலை நீக்கம் செய்துள்ளது. இந்தியாவில் அதிகம்பேரால் வாசிக்கப்படும் ஆங்கில நாளிதழான டைம்ஸ் ஆஃப் இந்தியா, சம்பளகுறைப்பு மற்றும் ஆட்குறைப்பு செய்துள்ளது.
இந்த வரிசையில் தற்போது நியூஸ் 7 தமிழ் தொலைகாட்சியும் இணைந்துள்ளது. கடந்த 8 மாதங்களாக தொழிலாளர்களுக்கு உரிய நேரத்தில் சம்பளம் வழங்காமல் இழுத்தடித்து வந்த நியூஸ் 7 தமிழ் நிறுவனம் தற்போது திடீரென்று, ஆபிஸ் பாய் முதல் ஆசிரியர் வரை அனைவருக்கும் 15 சதவீதம் சம்பளத்தை குறைத்துள்ளது. இப்போதும், அந்த நிறுவனம் தொழிலாளர்களுக்கு இரண்டு மாத சம்பளபாக்கி வைத்துள்ளது.
சம்பள குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனங்கள் அனைத்தும் கோடீஸ்வரர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள். தொழிலாளர்களின் வியர்வையும், ரத்தமுமே இன்று அவர்கள் பணத்தில் புரள்வதற்கும், படோபடமாக வாழ்வதற்கும் காரணமாகும். ஆனால் அந்த நன்றியை மறந்த அவர்கள், தொழிலாளர்களுக்கு எதிராக இப்படிப்பட்ட அநியாயத்தை செய்துவருகின்றனர்.
இதுவரை உலகம் கண்டிராதவகையில், கொரோனா என்ற பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஆனால், இப்படிப்பட்ட சூழலிலும், சிறிய அளவு லாபம் குறைவதைக்கூட முதலாளிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அத்துடன் தொழிலாளர்களின் உழைப்பால் தாங்கள் சேர்த்து வைத்த சொத்தின் ஒரு சிறு பகுதியைக்கூட இதுபோன்ற அவசரகாலத்தில் செலவழிக்க அவர்களுக்கு மனமில்லை. மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தாலும் அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பிணத்தை அடக்கம் செய்வதில் அவர்கள் லாபம் பார்க்க துணிவார்கள் என்பதையே இது உணர்த்துகிறது.
பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு ஒரு குடும்பம் இருப்பதோ, அந்த குடும்பத்தில் பாலுக்காக ஏங்கும் ஒரு குழந்தை இருப்பதோ, அந்த தொழிலாளியின் சம்பளம்தான் அந்த குழந்தையின் பசியை போக்கும் என்பதோ இந்த முலாளிகளுக்கு தெரியாதா என்ன? இவை அனனைத்தையும் தெரிந்துகொண்டுதான், சிறிதளவு லாபத்தைக் குறைத்துக்கொள்ளகூட அவர்கள் தயாராக இல்லை.
ஒரு நிறுவனத்தில் தொடங்கிய சம்பள குறைப்பு தற்போது அனைத்து நிறுவனங்களுக்கும் பரவியுள்ளது. ஒரு நிறுவனத்தில் தொடங்கிய ஆட்குறைப்பை தற்போது மற்ற நிறுவனங்களும் பின்பற்றத் தொடங்கியுள்ளன. இதை இப்படியே விட்டால் மனசாட்சியை கழற்றிவைத்துவிட்டு இன்னும் பல கொடுமைகளை செய்யத்துணியும் இந்த நிறுவனங்கள்.
ஆகவே, பத்திரிகைதுறையில் பணியாற்றும் அனைவரும் ஒருங்கிணைந்து நமக்கு எதிராக தொடுக்கப்படும் இந்த அநீதிகளுக்கு எதிராக குரல்கொடுக்க வேண்டிய தருணம் இது.
இந்த நிறுவனங்கள் மேற்கொண்டுள்ள சட்டமீறல் தொடர்பாக, பேரிடர் மேலாண்மைச்சட்டம், தொழில் தகராறு சட்டம் மற்றும் குறைந்தபட்ச ஊதிய சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய தொழிலாளர் நலத்துறைக்கு மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் சார்பாக புகார் அனுப்பப்பட்டது. இந்த புகாரை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறை, மாநில தொழிலாளர் நலத்துறைக்கு கடந்த 28.05.2020 அன்று உத்தரவிட்டுள்ளது.
ஆகவே, மத்திய தொழிலாளர் நலத்துறையின் உத்தரவின்படி, மாநில தொழிலாளர் நலத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க அனைத்து பத்திரிகையாளர்களும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.
சம்பள குறைப்பு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்றும், அநியாய பணிநீக்கத்தை உடனே நிறுத்த வேண்டும் என்றும், பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்றும் அனைவரும் அமைப்பாக திரண்டு நிறுவனங்களை வலியுறுத்த வேண்டும் என்று அழைக்கிறோம்.
கொள்ளை நோயிலும், கொள்ளை லாபத்தை விட்டுக்கொடுக்க மறுக்கும் இந்த நிறுவனங்களின் இந்த அநியாயத்தை எதிர்த்து மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம், அனைத்து பத்திரிகையாளர்களையும் ஒருங்கிணைத்து, அனைத்து தளங்களிலும் போராடும் என்று உறுதியளிக்கிறோம்.