தமிழக அரசே, பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கைக்காக போராடிய, நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடு

0
719

நெல்லை மாவட்டத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ள மகேந்திர கிரி மலைப்பகுதியில், பாறையில் ஏற்பட்ட வெடிப்பை, செய்தியாக வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மூன்று பேர் மீது, பனங்குடி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தங்களுடைய பணியை செய்த பத்திரிகையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்வது, அவர்களின் பணியை செய்யவிடாமல் தடுப்பது மற்றும் மிரட்டுவதற்கு சமம் என்ற அடிப்படையில், அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்பும் காவல்துறையின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளன. காவல்துறையின் இந்த செயல், அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கை என்றும் பத்திரிகையாளர் அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

இந்நிலையில், பத்திரிகையாளர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை இன்று (29.09.17) காலை 10 மணிக்குள் திரும்ப பெற வேண்டும் என்றும், இல்லையெனில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்றும் நெல்லை மாவட்ட பத்திரிகையாளர்கள் மன்றம் மற்றும் இதர பத்திரிகையாளர் அமைப்புகள் இணைந்து அறிவித்திருந்தனர். ஆனால், வழக்கு திரும்ப பெறப்படாததை தொடர்ந்து, அறிவித்தபடி, கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட 100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் திரண்டுள்ளனர். அங்கு கூடியிருந்த காவல்துறையினர், கண்காணிப்பாளரை சந்திப்பதற்கு பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுத்ததை தொடர்ந்து அங்கிருந்து டிஐஜி அலுவலகத்தை நோக்கி பத்திரிகையாளர்கள் பேரணியாக செல்ல முற்பட்டுள்ளனர். அவர்களை தடுத்துள்ள காவல்துறையினர் அவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், பாரதிராஜா, மனு, ஞானதுரை ஆகிய பத்திரிகையாளர்கள் கடுமையாக காயமடைந்துள்ளனர். காயமடைந்த பத்திரிகையாளர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கின்றனர். அத்துடன், பேரணியாக சென்ற 60க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தங்கள் பணியை செய்ததற்காக பொய் வழக்கு போட்டதை கண்டித்து பத்திரிகையாளர்கள் நடத்திய போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய தாக்குதலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

பொய் வழக்கு போட காரணமாக இருந்த காவல்துறையினர் மீதும், பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீதும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

காயமடைந்த பத்திரிகையாளர்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரணம் வழங்க மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

இந்த நேரத்தில், நம்முடைய நீண்ட நாள் கோரிக்கையான, பத்திரிகையாளர் பாதுகாப்பு சிறப்புச் சட்டத்தை நிறைவேற்ற அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்பும் ஒருங்கிணைந்து தமிழக அரசை வலியுறுத்த வேண்டும் என அனைத்து பத்திரிகையாளர்கள் அமைப்பையும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.