டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்து பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாமகவினரின் செயலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

0
643

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் அலுவலகத்திற்குள் புகுந்து பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாமகவினரின் செயலை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.

பத்திரிகையாளர்களை அச்சுறுத்தி, அராஜகத்தில் ஈடுபட்ட பாமகவினர் மீது கொலை முயற்சி உட்பட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு ப்பதிவு செய்து, அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் எத்தனை நாட்கள் கலந்துகொண்டனர், எத்தனைக் கேள்விகள் கேட்டார்கள், எத்தனை விவாதங்களில் பங்கேற்றார்கள் என்ற விபரம், நாடாளுமன்றம் சார்பாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படப்படும். இந்தத் தகவல்களின் அடிப்படையில், நாடாளுமன்ற உறுப்பினரின் செயல்பாடு குறித்து பத்திரிகைகள் செய்திகள் வெளியிடுவது வழக்கம்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற நிகழ்வில் கலந்துகொண்டு, மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கிறார்களா என்பதை, ஓட்டுபோட்டு ஒவ்வொரு மக்களும் தெரிந்துகொள்வது அவசியம். அந்த வகையில், நாடாளுமன்ற உறுப்பினரின் செயல்பாடு குறித்த இந்தச் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது.

அந்தவகையில், 17 ஆவது நாடாளுமன்றம் அமைந்த பிறகு நடைபெற்ற இரண்டு கூட்டத் தொடர்களில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாடு குறித்தத் தகவல், நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் தகவலின் அடிப்படையில் பார்க்கும்போது, பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ், தமிழகத்தின் சார்பாக, நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களோடு ஒப்பிடும்போது, குறைந்த நாட்களே நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ளது உறுதியாகிறது.

நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியான இந்த அதிகாரப்பூர்வத் தகவலின் அடிப்படையில், அன்புமணி ராமதாஸ் குறித்தச் செய்தி, இன்றைய தினம் (25.12.2019) டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் வெளியாகியுள்ளது. முழுக்க, முழுக்க அதிகாரப்பூர்வமான தகவலின் அடிப்படையிலேயே இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. உண்மைக்குப் புறம்பான எந்தத் தகவலும் இதில் இடம்பெறவில்லை.

இருந்தபோதும், பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சிலர், இன்று (25.12.2019) சென்னையில் உள்ள டைம்ஸ் ஆஃப் இந்தியா அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். அங்கு பணியாற்றிக் கொண்டிருந்தவர்களிடம் அன்புமணி குறித்த செய்தியை யார் வெளியிட்டது என்று கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும், இதுபோன்ற செய்தியை வெளியிட்டால் அனைவரையும் தொலைத்து விடுவோம் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். அத்துடன் அனைவரையும் அச்சுறுத்தும் வகையில், அலுவலகத்தின் மேசையில் இருந்த பொருட்களை கீழே தள்ளிவிட்டு அராஜகத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

பாமகவினர் பத்திரிகையாளர்களை மிரட்டுவது இது புதிதல்ல. இதற்கு முன்னர் பல்வேறு சந்தர்ப்பங்களில், கேள்வி கேட்ட பத்திரிகையாளர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் உட்பட, அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் அவமதிக்கும் வகையிலும், மிரட்டும் வகையிலும் பேசியுள்ளனர். கடந்த ஜூன் மாதம் நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய ராமதாஸ், ‘இனி இந்தக் கேள்வியை கேட்டால் மரத்தை எல்லாம் வெட்ட மாட்டோம், இப்படி கேள்வி கேட்கிற ஆளை வெட்டி போட்டுட்டு அப்புறம் போராட்டம் பண்றோம் ‘ என்று பகிரங்கமாகவே மிரட்டிப் பேசினார். இது தொடர்பாக, பாமக நிறுவனர் ராமதாசுக்கு எதிராக பத்திரிகையாளர் அமைப்புகளின் சார்பாக சில மாதங்களுக்கு முன்னர் சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படாத நிலையில், தற்போது பாமகவினர் இதுபோன்ற ஒரு அராஜக செயலில் ஈடுபட்டுள்ளனர்.

ஆகவே, பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்டதுடன், பத்திரிகையாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்த பாமகவினர் மீது கொலை முயற்சி உட்பட, கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என காவல்துறையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

பாமக நிறுவனர் ராமதாசுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் மீது, இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் காவல்துறையை கேட்டுக்கொள்கிறோம்.
பத்திரிகையாளர்களையும், பத்திரிகை அலுவலகங்களையும், பாதுகாக்கும் வகையில், மகாராஷ்ட்ராவில் கொண்டு வரப்பட்டது போன்ற ஒரு சிறப்பு சட்டத்தை, தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேற்கண்ட கோரிக்கைகளுக்காக, அனைத்து பத்திரிகையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர் அமைப்புகள் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் எனவும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் அழைப்பு விடுக்கிறது.