ஜெயா டிவி செய்தியாளர் மாரியப்பன் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்!

0
1043

ஆகஸ்ட் 19 2015

ஜெயா டிவி செய்தியாளர் மாரியப்பன் தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம்!

பொதுவாழ்க்கையில் இணைந்து மக்கள் பணியாற்றுபவர்கள், மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டியது கட்டாயம். அரசியல் கட்சிகளை பொறுத்தவரை, மக்கள் அளிக்கும் வாக்குகளின் மூலமே அதிகாரத்தை பெறுவதால், அவர்கள் மக்களுக்கு கூடுதலாக கடமைப்பட்டவர்கள் என்றே கூறலாம். பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களிடமும், அரசியல் தலைவர்களிடமும், மக்களின் கேள்விகளை முன்வைக்கும் மிக முக்கிய பணி, பத்திரிகையாளர்களையே சாரும். இவ்வாறு, பத்திரிகையாளர்கள் எழுப்பும் கேள்விகள், அவர்களின் சொந்த கேள்விகள் என்பதை விட, மக்களின் கேள்விகள் என்றே கூற வேண்டும். ஆனால், சில நேரங்களில், இதுபோன்று பத்திரிகையாளர்கள் சில கேள்விகளை எழுப்பும்பட்சத்தில், அதன் எதிர்விளைவாக அவர்கள், அரசியல்கட்சி தலைவர்களால், மிரட்டப்படுவதும், தாக்கப்படுவதும் தொடர்கதையாகிவருகின்றது.

 

இதுபோன்ற ஒரு சம்பவம் இன்று, சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனிடம், ஜெயா டிவி செய்தியாளர் மாரியப்பன் எழுப்பிய கேள்வியின் எதிரொலியாக, அங்கு கூடியிருந்த காங்கிரஸ் தொண்டர்கள், மாரியப்பனை தாக்கியுள்ளனர். தன் கண்முன்ணே இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றபோதும், காங்கிரஸ் தொண்டர்களை, இளங்கோவன் தடுக்க முற்படவில்லை என்பது வருத்தமளிக்கும் நிகழ்வு. பத்திரிகையாளர்கள் கேள்வியெழுப்பும்போது சில வரையறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது மறுக்க முடியாது என்றாலும், கேள்வியெழுப்பிய பத்திரிகையாளரை தாக்குவது, கண்டிக்கத்தக்க செயல். பொறுப்பான பதவியில் உள்ள ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தன்னுடைய தொண்டர்களை தடுக்கத்தவறிய பொறுப்பற்ற செயலும் கண்டிக்கத்தக்கது.

 

ஆகவே, ஜெயா டிவி செய்தியாளரை தாக்கிய காங்கிரஸ் தொண்டர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகிறது.

 

பத்திரிகையாளர்கள் மீது இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க, சிறப்புச் சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற, பத்திரிகையாளர்களின் கோரிக்கையை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் மீண்டும் வலியுறுத்துகின்றது.