ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் அரசியல் கட்சிகள்! அதிகாரப்போட்டிக்கிடையில் சிக்கித்தவிக்கும் பத்திரிகையாளர்கள்!

0
551

அரசியல் கட்சிகளால், வாக்காளர்களுக்கு பெரிய அளவில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக கூறி நிறுத்தி வைக்கப்பட்ட ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் மீண்டும் அறிவிக்கப்பட்டது. வரும் வியாழக்கிழமை (21.12.17) வாக்குப்பதிவு நடைபெறவுள்ள சூழ்நிலையில், எந்த காரணத்திற்காக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதோ அது மீண்டும் நடைபெற்று வருகின்றது.

களத்தில் முக்கிய போட்டியாளர்களாக கருதப்படும் அதிமுக, திமுக மற்றும் சுயேட்சையாக போட்டியிடும் டி.டி.வி.தினகரன், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்கின்றனர். இந்த கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் அசிங்கங்கள் ஆர்.கே.நகர் முழுவதும் நடைபெற்று வருகின்றது.

இவை அனைத்திற்கும் சாட்சியாக விளங்கும் ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிகையாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் அவர்கள் சார்ந்த நிறுவனங்களுக்கு மத்தியில் மாட்டிக்கொண்டு விழிப்பதை பார்க்க முடிகிறது.

ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களுக்கான ஊடகத்தை நடத்தி வரும் தமிழ்நாட்டில், அவை சார்ந்த அரசியல் கட்சிகளை விட்டு விட்டு, அந்த ஊடகங்கள், பிற கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் வழங்கும் செய்திகளை மட்டுமே வெளியிட்டு வருகின்றன. ஆகவே, அனைத்து ஊடகங்களிலும் வெளியாகும் இந்த செய்திகளின் மூலம், பிரதான கட்சிகள் அனைத்தும் வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது உறுதி செய்யப்படுகிறது. நடுநிலை ஊடகங்கள் என்று கூறிக்கொள்பவர்களும், தங்கள் தொலைக்காட்சி தொடர்ந்து ஒளிபரப்பாவதை உறுதி செய்யும் வகையிலும், தங்கள் செய்தித்தாளுக்கு தொடர்ந்து அரசு விளம்பரம் கிடைப்பதை உறுதி செய்யும் பொருட்டும் ஒரு சார்பாகவே செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இவை ஒன்றும் புதிய விஷயம் அல்ல. தேர்தல் குறித்த செய்தி மட்டுமல்லாமல், எந்த செய்தியாக இருந்தாலும் மேற்கூறிய பிரச்சனைகளை கருத்தில் எடுத்துக்கொண்டே ஊடகங்கள் அனைத்தும் செய்திகளை வெளியிடுகின்றன.

யதார்த்தம் இவ்வாறாக இருக்க, இதற்கு மத்தியில்தான் பத்திரிகையாளர்கள் அனைவரும் தங்கள் பணியை நேர்மையுடன் செய்ய முயற்சி செய்து வருகின்றோம். செய்திகளை வழங்குவது மட்டுமே நம் பணியாகவுள்ளது. அதை வெளியிடலாமா வேண்டாமா என்பதை, மேற்கூறிய விஷயங்களை கருத்தில் எடுத்துக்கொண்டு ஊடக நிறுவனங்கள் இறுதி முடிவெடுக்கின்றன. ஆகவே, நம்முடைய நேர்மையும், நடுநிலைமையும் ஒரு வரம்பிற்குட்பட்டது என்பதை நாம் அறிந்துள்ளோம். அந்த வரம்பிற்குட்பட்டே நம்முடைய நேர்மையையும், நடுநிலைமையையும் பாதுகாக்க தினந்தோறும் போராடி வருகின்றோம்.

வரம்பிற்குட்பட்ட நம்முடைய ஜனநாயகத்தை பாதுகாக்கும் நடவடிக்கையில்,     அரசையும், ஆளும் கட்சியையும் பாதுகாக்க நினைக்கும் காவல்துறையினராலும், அதிகாரிகளாளும் நாம் தடுக்கப்படுகின்றோம், பல நேரங்களில் தாக்கப்படுகின்றோம். நம்மீது பொய் வழக்குகள் புனையப்படுகின்றன. நமக்கு எதிராக திட்டமிட்டு அவதூறுகள் பரப்பப்படுகின்றன. நாம் மிரட்டப்படுகின்றோம். நம்முடைய குறுகலான ஜனநாயக வெளி, மேலும் குறுக்கப்படுகிறது. நம்மில் சிலர் நம்பிக்கை இழக்கின்றோம். பலர், குறுக்கப்பட்ட அந்த ஜனநாயகவெளியை காப்பாற்றிக்கொள்ள தொடர்ந்து போராடுகின்றோம். இவ்வாறாக, நம்பிக்கைக்கும் அவநம்பிக்கைக்கும் மத்தியிலான நூலிழை வெளியில் நம்முடைய பணி தொடர்கிறது.

இதற்கு மத்தியில், இதுதான் உண்மை. இதை மாற்ற நினைக்காதே. இதற்குள் வாழ பழகிக்கொள் என்ற அறிவுரைகள் நம்மை மழுங்கடிக்கச் செய்கிறது. நீ நினைத்தால் எதுவும் இன்றே நடக்கும். நீ மாற வேண்டும், பிறகு மற்றவர்களை மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவுரைகள் நம்மை நம்பிக்கை இழக்கச் செய்கிறது. நம்முடைய ஜனநாயக வெளியை விரிவு படுத்தவும், இருக்கும் வெளியை தக்கவைக்கவும், ஒருங்கிணைவோம் என்ற முழக்கமே நமக்கு நம்பிக்கை அளிக்கின்றது.

யதார்த்தத்தை மட்டும் புரிந்துகொண்டு, அதற்கு ஏற்றாற்போல் நம்மை வளைத்துக்கொண்டு நம் பணிகளை செய்வதும் அல்லது யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் நாம் நினைத்தது அனைத்தும் இன்றே நடந்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் நடப்பதும் இறுதியில் வெறுமையையே மிஞ்சச்செய்யும். ஆகவே, யதார்த்தத்தை புரிந்துகொண்டு, திட்டமிட்டு, ஒருங்கிணைந்து செயல்படுவது மட்டுமே நம்முடைய ஜனநாயகவெளியை தக்கவைக்கவும், அதை மேலும் விரிவுப்படுத்தவும் பயன்படும். இதை புரிந்துகொண்டு நாம் அனைவரும் அமைப்பாக ஒருங்கிணைய வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.

  • ஆர்கே நகர் தொகுதியில் தங்கள் பணியை செய்யும் பத்திரிகையாளர்கள் அரசியல் கட்சியினராலும், காவல்துறையினராலும் தாக்கப்படும் நிகழ்வுகளை மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வன்மையாக கண்டிக்கிறது.
  • பத்திரிகையாளர்கள் தங்கள் பணியை சுதந்திரமாக செய்வதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் உறிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் வலியுறுத்துகின்றது.
  • எதிர்காலத்தில், இதுபோன்ற தேர்தல் அல்லது முக்கிய நிகழ்வுகள் நடைபெறுவதற்கு முன்னரே, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து பத்திரிகையாளர் அமைப்புகளும் ஒருங்கிணைந்து, ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்கி, அந்த ஒருங்கிணைப்புக்குழு சம்பந்தப்பட்ட நபர்களை சந்தித்து, பத்திரிகையாளர்களின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம் கேட்டுக்கொள்கிறது.