சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் நடவடிக்கை குழு சார்பாக, முன்னாள் நீதிபதி திரு.சந்துரு அவர்களிடம் வழங்கப்பட்ட மனு.

0
889

மாண்புமிகு முன்னாள் நீதிபதி திரு.கே.சந்துரு அவர்களுக்கு வணக்கம்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நேர்மையாக தேர்தலை நடத்தி முடிப்பதற்காக தங்களை, தேர்தல் ஆணையராக சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ளது எங்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜனநாயத்தின் நான்காவது தூணே, ஜனநாயகத்திற்காக போராடி வரும் ஒரு இக்கட்டான தருணத்தில், நியாத்தின் வழிநின்று, எளியோருக்கும் நீதி பெற்றுத்தந்த உங்களைப்போன்ற ஒருவர் இந்த பொறுப்பை ஏற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையளிக்கின்றது. இந்த முக்கியமான தருணத்தில், மன்றத்தின் தேர்தலை நேர்மையாக நடத்துவதற்காக தொடர்ந்து முயற்சியெடுத்துவரும் நாங்கள், தங்களிடம் சில முக்கிய விஷயங்களை பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.

எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும், அந்த துறையில் பணியாற்றும் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் அமைப்புகள் மிக முக்கியமானவை என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். அந்த வகையில், பத்திரிகையாளர்களின் திறனை மேம்படுத்துதல், அவர்களுக்குள்ளான சமூக தொடர்பை மேம்படுத்துதல் மற்றும் பத்திரிகையாளர்களின் நலன்களை பாதுகாக்கும் பணிகளை மேற்கொள்ளுதல் ஆகிய உயரிய குறிக்கோளுடன் உருவாக்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றம், கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக, செயல்பாடுகள் முடக்கப்பட்டு, ஜனநாயகம் நசுக்கப்பட்டு, தனது நோக்கத்திலிருந்து விலகி, ஒரு சில நபர்களின் தனிப்பட்ட நலனுக்கானதாக மாற்றப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக, தேர்தல் நடத்தப்படாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் யாரும் இல்லாமல், வருமானம் குறித்த எந்த தகவலையும் யாருக்கும் தெரிவிக்காமல் செயல்பட்டுவந்த பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தலை நடத்த வேண்டும் என, பல தருணங்களில் பல பத்திரிகையாளர்கள் முன்முயற்சி எடுத்துள்ளனர். ஆனால், பத்திரிகையாளர் மன்றத்தை தங்களுடைய தனிச் சொத்தாக கருதும் சிலர், இதற்கு இடமளிக்கவில்லை. தேர்தல் நடத்த வேண்டும் என்று குரல் கொடுத்த பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறுகள் பரப்பப்பட்டன. சில நேரங்களில் அவர்கள் நேரடியாகவும் அல்லது அவர்கள் பணி செய்யும் நிறுவனங்களின் மூலமாகவும் மிரட்டலுக்குள்ளாகினர். இதன் காரணமாகவே, நியாயமான பத்திரிகையாளர்கள் பலர், மன்றத்திற்கு வருவதையே நிறுத்திக்கொண்டனர். இறுதியில், பத்திரிகையாளர்களின் நலனுக்காக உருவாக்கப்பட்ட மன்றம், திருமணத்திற்கு வாடகைக்கு விடும் இடத்தைப்போல் மாற்றப்பட்டு, அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு வாடகைக்கு இடம் கொடுக்கும் இடமாக மாற்றப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில், ஒரு சிறு தொகை கூட பத்திரிகையாளர்களின் நலனுக்க பயன்படுத்தப்படவில்லை. இவற்றுடன் மிகவும் வருந்தத்தக்கவகையில், பத்திரிகையாளர்களின் திறன் வளர்ப்பை நோக்கமாக கொண்டு உருவாக்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றம், இரவு, பகல் பாராமல் எந்த நேரமும் மது அருந்துவதற்கு வசதியான இடமாக மாற்றப்பட்டது. 24 நான்கு மணி நேரமும் இயங்கும் இந்த மன்றத்தில், தங்களை நிர்வாகிகள் என்று கூறிக்கொள்ளும் நபர்களுக்கு ஆதரவான எந்த நபரும், அவர் பத்திரிகையாளராக இல்லாவிட்டாலும் கூட, எந்த நேரமும் மது அருந்திக்கொள்ளலாம் என்ற கேவலமான நிலைக்கு பத்திரிகையாளர் மன்றம் தள்ளப்பட்டது.

இந்தநிலையில், சில இளம் பத்திரிகையாளர்களின் முன் முயற்சியின் காரணமாக, கடந்த 23.08.2015 அன்று சென்னையில், பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தலை நடத்துவது தொடர்பான ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் பல மூத்த பத்திரிகையாளர்கள் உட்பட, இருநூறுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். நாங்கள் அறிந்தவரை, கடந்த 16 ஆண்டுகளில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கூட்டப்பட்ட முதல் கூட்டம் இதுதான். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், “சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு நேர்மையாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும்” என்ற மிக முக்கியமான தீர்மானம், அனைத்து பத்திரிகையாளர்களின் ஒப்புதலுடன், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை நடைமுறைபடுத்துவதற்காக “சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் நடவடிக்கைக் குழு” என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பை வழிநடத்துவதற்காக, மூத்த பத்திரிகையாளர்கள் மயிலை பாலு, தீக்கதிர் குமரேசன் உட்பட அச்சு, காட்சி மற்றும் இதர ஊடகங்களை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய 19 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டது.

இதன் பிறகு, ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதிநிதிகள், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்களை சந்தித்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை வழங்கினர். அந்த சந்திப்பின்போது, கடந்த பல ஆண்டுகளாக கூட்டப்படாத மன்றத்தின் பொதுக்குழு, உடனடியாக கூட்டப்பட வேண்டும் என்றும் பொதுக்குழுவில், தேர்தல் நடத்துவது குறித்து அறிவிக்க வேண்டும் என்றும் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக வலியுறுத்தப்பட்டது. பத்திரிகையாளர்கள் அனைவரும் தங்களுக்கு எதிராக ஒருங்கிணைந்திருப்பதை உணர்ந்துகொண்ட அவர்கள், 04.10.15 அன்று பொதுக்குழு கூட்டப்படும் என அறிவித்தனர்.

சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டப்பட்ட அந்த பொதுக்குழுவில், அத்தனை ஆண்டுகளாக சமர்பிக்கப்படாத நிதிநிலை குறித்த ஆண்டறிக்கை மொத்தமாக சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆண்டறிக்கையை படிக்கும்போதே, அதில் பல குளறுபடிகள் இருப்பதை அனைவராலும் உணரமுடிந்தது. இருப்பினும், 16 ஆண்டுகளாக தேர்தல் நடத்தப்படாத பத்திரிகையாளர் மன்றத்திற்கு, தேர்தல் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், நிதி குளறுபடிகள் குறித்து அப்போது கேள்வியெழுப்பினால், தேர்தலும் நடக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் யாரும் அப்போது கேள்வி எழுப்பவில்லை. பொதுக்குழுவில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை 5.10.15 தொடங்கி, 5.11.15 வரை (ஒரு மாதம்) நடை பெறும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன், தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளை திரும்பப் பெறும் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், தேர்தலை நடத்துவதில் உள்ள சட்ட சிக்கல்களை களையவும், தேர்தல் நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரிக்கு உதவவும், மூத்த பத்திரிகையாளர்கள் திரு.மயிலை பாலு, திரு.நூருல்லா, திரு.பொன்தனசேகரன், திரு.துரை ஆகிய நால்வர் அடங்கிய குழுவை அமைப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்கிடையில், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தற்போதைய நிர்வாகிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளப்படுபவர்களில் ஒருவரான, திரு.கீதப்பிரியன் என்பவர் தேர்தல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டார். தற்போதைய நிர்வாகி தேர்தல் அதிகாரியாக செயல்படுவது இயற்கை நீதிக்கு எதிரானது என்பது அனைவரும் அறிந்தது. இதுகுறித்து கேள்வியெழுப்பினால், இதைக் காரணம் காட்டி தேர்தலை நிறுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தில், தேர்தல் நடந்தால் போதும் என்ற முடிவின் அடிப்படையில், அதுகுறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை.

பொதுக்குழுவின் முடிவின் படி, உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் ஒரு மாதத்திற்கு பெறப்பட்டன. எங்களுக்கு தெரிந்தவரை சுமார் 1500 புதிய விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக கூறப்படுகின்றது. உறுப்பினர் சேர்க்கைக்கான கால அவகாசம் முடிந்து, பல முறை நினைவூட்டலுக்குப் பிறகு, சுமார் நான்கு மாதம் இழுத்தடிப்பு செய்து, 24.02.2016 அன்று, புதிய உறுப்பினர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன்படி, விண்ணப்பித்த, சுமார் 1500 பேரில்,328 விண்ணப்பதாரர்கள் மட்டுமே உறுப்பினர்களாக சேர தகுதியுள்ளவர்கள் என்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் தெரியவந்தது. அதாவது, உறுப்பினராக சேர விண்ணப்பித்த பத்திரிகையாளர்களில், சுமார் ஐந்தில் நான்கு பேரின் விண்ணப்பங்கள் தகுதியற்றவை என்று கூறி நிராகரிக்கப்பட்டன. அனைவராலும் அறியப்பட்ட, நூற்றுக்கணக்கான முழு நேர பத்திரிகையாளர்களின் விண்ணப்பங்களும் இதில் அடங்கும்.

நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் தெரிவிக்கப்பட்டு, அவை திருத்திக்கொள்ளக்கூடிய தவறுகளாக இருக்கும் பட்சத்தில், திருத்தப்பட்ட விண்ணப்பங்களை மீண்டும் சமர்ப்பிப்பதற்கான கால அவசகாசம் வழங்கப்பட்டு, அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்களை, மறுபரிசீலினை செய்ய வேண்டும் என்பது அனைவரும் அறிந்த நடைமுறை. ஆனால், அப்படிப்பட்ட கால அவகாசம் எதுவும் வழங்கப்படாமல், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களும் கூறப்படாமல், ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்கள் குறித்த தகவல் மட்டும் வெளியிடப்பட்டது. அத்துடன், ஏற்கனவே உறுப்பினர்களாக உள்ளவர்களையும், புதிதாக உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்பட்டவர்களையும் உள்ளடக்கிய, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடாமலேயே, அவசரகதியில், தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு, முற்றிலும் எதிராக நடைபெற்ற இந்த நிகழ்வுகள், அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இயற்கை நீதிக்கு எதிராக, தற்போதைய நிர்வாகியே, தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு, பெயரளவில் ஒருசில நபர்களை மட்டுமே உறுப்பினர்களாக சேர்த்துக்கொண்டு, இறுதி வாக்காளர் பட்டியலை கூட வெளியிடாமல் தேர்தல் நடத்தப்படுவது ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் நிகழ்வாகவே அனைத்து பத்திரிகையாளர்களாலும் பார்க்கப்பட்டது.

தேர்தல் நடத்துவதில் உள்ள சிக்கல்களை களைவதற்காக, பொதுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட குழுவிற்கும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதன் காரணம் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து அந்தக் குழு, தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட கீதப்பிரியன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியது. இருந்தபோதும் எந்த விளக்கமும் தரப்படவில்லை. இதைத்தொடர்ந்து, பத்திரிகையாளர் திரு.செல்வராஜ் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அப்போது அறிவிக்கப்பட்ட தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்குடன், பத்திரிகையாளர் திரு.மோகன் தொடர்ந்த வழக்கில் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம், தேர்தலை நடத்த பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள் என்று கூறிக்கொள்பவர்கள் தொடர்ந்து மேல் முறையீட்டு மனு, இந்த குறிப்பிட்ட வழக்கில் தங்களை இடை மனுதாரர்களாக சேர்த்துக்கொண்ட பத்திரிகையாளர்கள் திரு.மணிகண்டன் மற்றும் திரு.சுப்பையா தாக்கல் செய்த மனுக்கள் என இவை அனைத்தும் மொத்தமாக விசாரிக்கப்பட்டு, நீதிபதி திரு.எம்.எம்.சுந்தரேஷ் அவர்கள் தற்போது தேர்தலை நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேற்கூறிய நிகழ்வுகளையும் அதற்குப் பின்னால் உள்ள காரணங்களையும் தொகுத்துப் பார்க்கும்போது கீழ்காணும் முடிவுகள் தெளிவாகின்றன.

1)   சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தற்போதைய நிர்வாகிகள் என்று தங்களை அழைத்துக்கொள்பவர்கள், அனைத்து பத்திரிகையாளர்களையும் உறுப்பினர்களாக சேர்த்து, நியாயமாக தேர்தலை நடத்த தயாராக இல்லை என்பது வெளிப்படையாக தெரிகின்றது.

2)   பத்திரிகையாளர் மன்றம் அமைந்துள்ள இடம், அனைத்து பத்திரிகையாளர்களின் நலனுக்காக, தமிழக அரசால், மானிய விலையில் நீண்ட கால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது. மன்றத்தை, பத்திரிகையாளர் சந்திப்புகளுக்கு வாடகைக்கு விடுவதன் மூலம், மாதந்தோறும் பல ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கின்றது. இந்தப் பணம் எவ்வாறு செலவிடப்படுகின்றது என்பது குறித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக எவருக்கும் தெரிவிக்கப்படவில்லை. சமீபத்தில் மொத்தமாக தாக்கல் செய்யப்பட்ட 10 ஆண்டுகளின் நிதிநிலை அறிக்கையிலும் பல குளறுபடிகள் உள்ளன. அனைத்து பத்திரிகையாளர்களின் நலனுக்காக, அரசால் வழங்கப்பட்ட நிலத்தில், தனியார் நிறுவனத்தால் இலவசமாக கட்டிக்கொடுக்கப்பட்ட கட்டடத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தில், ஒரு சில நபர்கள் பலனடைந்து வருவதும், இந்த காரணத்தால், பத்திரிகையாளர் மன்றத்தில் நியாயமான பத்திரிகையாளர்களை இணைத்து, தேர்தலை நடத்துவதற்கு அவர்கள் தயங்குவதும் இதன் மூலம் வெளிப்படையாக தெரிகின்றது.

3)   16 ஆண்டுகளாக, எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் பொதுவான இடத்தை, விதிகளுக்குப் புறம்பாக தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மன்றத்தின் மீதான தங்களின் கட்டுப்பாட்டை தொடர்வதற்கு, எந்த விதமான முறைகேட்டிலும் ஈடுபடுவார்கள் என்பதும் தெளிவாகின்றது.

ஆகவே, சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தலை நடத்தி முடிக்கும் பொறுப்பை ஏற்றுள்ள தாங்கள், கீழ்காணும் தகவல்களை தங்கள் மேலான கவனத்தில் எடுத்துக்கொள்ளும் படி கேட்டுக்கொள்கின்றோம்.

1)   சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் தேர்தலை நடத்துவதற்கு பல மூத்த பத்திரிகையாளர்கள் முயன்று தோல்வியையே தழுவினர். பத்திரிகையாளர்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய மன்றம், அதிலிருந்து நழுவி, மது மற்றும் இதர கேளிக்கை நிகழ்வுகள் நடைபெறும் மையமாக மாறிப்போனதால், நேர்மையான பத்திரிகையாளர்கள் இதில் உறுப்பினராவதற்கு ஆர்வம் காட்டவில்லை. இவர்களுக்குப் பின்னால் வந்த இரண்டாம் தலைமுறை பத்திரிகையாளர்களுக்கு, இந்த மன்றம் குறித்த புரிதல் இல்லாத காரணத்தாலும், மன்றத்தின் சார்பாக அவர்களை உறுப்பினராக சேர்ப்பதற்கு எந்த வித முன்முயற்சியும் எடுக்காத காரணத்தாலும், அவர்களும் உறுப்பினராக சேர்வதற்கு ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக, யாருடைய நலனுக்காக பத்திரிகையாளர் மன்றம் தொடங்கப்பட்டதோ, அவர்களில் பெரும்பாலானோர் மன்றத்தில் உறுப்பினராக சேரவில்லை.

2)      மன்றத்தின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளர்களின் விண்ணப்பங்கள் காரணமின்றி நிராகரிக்கப்பட்டன. அதற்கான உரிய விளக்கமும் கொடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு கூட்டப்பட்ட பொதுக்குழுவின் முடிவின்படி புதிதாக விண்ணப்பம் அளித்தவர்களில் பெரும்பான்மையானவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் அதிகாரப்பூர்வமாக தற்போதுவரை தெரிவிக்கப்படவில்லை. விண்ணப்பத்தில் சிபாரிசு கையெழுத்திட்ட உறுப்பினர்கள், தங்களது சந்தாவை செலுத்தவில்லை என்றும் அதன் காரணமாகவே விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகவும் சிலருக்கு வாய்மொழியாக காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மன்ற விதிகளில் இது குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. அதாவது, சந்தா செலுத்தாத நபர், சிபாரிசு கையெழுத்திட்டால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இதைப்போல், 05.10.15 முதல் 5.11.15 வரை ஒருமாதம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன் பிறகு, சுமார் நான்கு மாதம் கழித்து 24.02.2016 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் பல பத்திரிகையாளர்கள் வேறு நிறுவனங்களுக்கு மாறியிருந்தனர். இவையெல்லாம் கூட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதற்கு காரணமாக வாய்மொழியாக கூறப்பட்டுள்ளன. இது குறித்தும், மன்றத்தின் விதியில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.

3)      ஒட்டுமொத்தத்தில், புதிதாக உறுப்பினரை சேர்த்து, நியாயமாக தேர்தலை நடத்த வேண்டும் என்ற எண்ணம், தற்போது நிர்வாகிகள் என்று கூறிக்கொள்பவர்களுக்கு துளியும் இல்லை. அவர்களை பொறுத்தவரை, இத்தனை ஆண்டுகளாக, பத்திரிகையாளர் மன்றத்தை தாங்கள் விரும்பிய படி நடத்தி வந்ததைப்போல், இனியும் தொடர வேண்டும். அவ்வாறு நடைபெற வேண்டுமென்றால், தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும். தேர்தல் நடந்தாலும் கூட, புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படாமல், அதாவது உண்மையான பத்திரிகையாளர்கள் உறுப்பினர்களாக சேர்க்கப்படாமல், தேர்தல் நடத்தப்பட்டு மீண்டும் பத்திரிகையாளர் மன்றத்தை தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். இதுவே அவர்களின் எண்ணம். ஆனால், அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சொந்தமான, சென்னை பத்திரிகையாளர் மன்றம், முழுமையாக பத்திரிகையாளர்களின் நலனுக்காக மீண்டும் செயல்பட வேண்டும் என்பதே எங்களின் எண்ணம்.

4) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் கடந்த கால செயல்பாட்டின் காரணமாக, பல பத்திரிகையாளர்கள் மன்றத்தில் உறுப்பினராவதை தவிர்த்துள்ளனர். அதன் பிறகு பத்திரிகைதுறைக்கு வந்த இளம் தலைமுறையினரை மன்றத்தில் சேர்ப்பதற்கான எந்த வித முன் முயற்சியும் எடுக்கப்படவில்லை. இறுதியாக, கடந்த ஆண்டரை மன்றத்தில் சேர்ப்பதற்கான எந்த வித முன் முயற்சியும் எடுக்கப்படவில்லை. இறுதியாக, கடந்த ஆண்டில் “சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் நடவடிக்கை குழு” எடுத்த முன் முயற்சியால், ஆயிரத்திற்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள், மன்றத்தில் உறுப்பினர்களாக சேர்வதற்கு விண்ணப்பம் அளித்தனர், ஆனால் அவற்றில் 80 சதவீத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தத்தில், தற்போதைய பத்திரிகையாளர் மன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் பெரும்பான்மையினர், தங்களை நிர்வாகிகள் என்று கூறிக்கொள்பவர்களால் உறுப்பினராக அனுமதிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் என்றே கூறலாம்.

ஆகவே, தயவுகூர்ந்து, மேல்குறிப்பிட்ட விஷயங்களை கருத்தில்கொண்டு, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்கள் மற்றும் புதிதாக விண்ணப்பிக்க நினைப்பவர்கள் உட்பட, அனைத்து பத்திரிகையாளர்களையும் உறுப்பினர்களாக சேர்த்த பின்பு, சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு தேர்தலை நடத்த வேண்டும் என்று தங்களை கேட்டுக்கொள்கின்றோம்.

(குறிப்பு: “சென்னை பத்திரிகையாளர் மன்ற தேர்தல் நடவடிக்கை குழு” சார்பாக நடத்தப்பட்ட கூட்டங்களின் புகைப்படங்கள், வெளியிடப்பட்ட அறிக்கைகள் மற்றும் துண்டறிக்கைகளை தங்களின் மேலான கவனத்திற்காக இந்த மனுவுடன் இணைத்துள்ளோம்)

நன்றி!

இப்படிக்கு,

சென்னை பத்திரிகையாளர் மன்றம் தேர்தல் நடவடிக்கை குழு!