சமீப காலங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களுக்கு கண்டனம்.

0
481

செப்டம்பர் 8 2014

சமீப காலங்களில் பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்களுக்கு கண்டனம்.

ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்று அழைக்கப்படும் பத்திரிக்கையாளர்கள்/ ஊடகவியலாளர்கள், சமூகத்தால் அலைக்கழிக்கப் படுவதும், தாக்கப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. காவல்துறையின் மெத்தனப் போக்கும், அரசியல்வாதிகளின் அதிகாரப் போக்கும்தான் இதற்கு காரணம். தங்களுக்கு தேவையான செய்திகளை பத்திரிக்கை நிருபர்களை அழைத்து பிரசுரம் செய்யச் சொல்லும் இவர்கள், தங்களுக்கு எதிரான செய்திகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை. ஒத்துழைப்பு கூட அவசியமில்லை. ஆனால் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி ஏவல் போக்கை கடைபிடிக்கின்றனர். இது மிகவும் கண்டனத்துக்கு உரியது.

 

சமூக பணி செய்யும் பத்திரிக்கையாளர்களுக்கு ஒத்துழைப்பதும், உதவுவதும் காவல்துறையின் கடமை. ஆனால் கொடுக்கும் புகார்களின் மீது கூட உரிய நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழிப்பது தொடர்கதையாகி உள்ளது. தி இந்து பத்திரிக்கை போட்டோ கிராபர் பிரபு பள்ளிகளுக்கு வெடி குண்டு மிரட்டல் தொடர்பான செய்தி சேகரிக்கச் சென்றபோது வாணி வித்யாலயா பள்ளி செக்யூரிட்டிகளால் தாக்கப்பட்டுள்ளார். அதே போல சில தினங்களுக்கு முன் இதய மாற்று சிகிச்சை தொடர்பான செய்தியின்போது ஒளிப்பதிவாளர் ராமராஜ் மலர் மருத்துவமனை செக்யூரிட்டிகளால் தாக்கப்பட்டார்.

 

இதே போல் கடந்த வாரம் ஆணையர் அலுவலகத்தின் வாசலில் தினத்தந்தி நிருபர் பெனிக்ஸ், வக்கீல்களால் தாக்கப்பட்டுள்ளார். காவல்துறையினர் தாக்குதல் சம்பவத்தை வேடிக்கை பார்த்துள்ளனர். நக்கீரன் செய்தியாளர் அரவிந்தன் மீது வேனை கொண்டுவந்து மோதி ஒரு கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது. ஒருவார காலத்தில் இதுபோல நான்கு தாக்குதல் சம்பவங்கள் சென்னையில் நடைபெற்றுள்ளன. இது போன்ற சம்பவங்களுக்கு பண பலமும், அதிகார பலமுமே உறுதுணையாக இருந்து வருகிறது.

 

பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான இந்த தாக்குதல் சம்பவங்களை கண்டுகொள்ளாமல் இருக்கும் காவல்துறைக்கும், தாக்குதல் நடத்தியவர்களுக்கும் மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மய்யம் கண்டனங்களை தெரிவிக்கிறது. மேலும் இந்த சம்பவங்களில் உடனடியாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு மய்யம் கேட்டுக் கொள்கிறது.

 

இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க பத்திரிக்கையாளர்களின் புகார்களை பெற்றுக் கொள்ளவும், அதனை விசாரிக்கவும் காவல்துறை தனி செல் அமைக்க வேண்டும் என மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள மையத்தின் சார்பில் வலியுறுத்தப்படுகிறது.